Published:Updated:

`உரிமையாளர்கள் வாக்குவாதம்.. கடும் பாதுகாப்பு!’- மேட்டுப்பாளையம் விதிமீறல் சுற்றுச்சுவர்கள் இடிப்பு

மேட்டுப்பாளையம் நடூரில் பாதிப்புக்குள்ளான சுவர் அகற்றப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில் சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டுச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்தச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மக்கள் பலமுறை புகாரும் அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, 17 பேர் உயிரிழந்ததாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அந்தப் பகுதியில் பல இடங்களில் சாலையை மறித்தும் ஆபத்தான வகையிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு உறுதியளித்திருந்தனர். இந்நிலையில், சிவசுப்பிரமணியம் வீட்டைச் சுற்றி கட்டப்பட்ட சுவரை நகராட்சி அதிகாரிகள் இன்று காலை இடித்தனர்.

அதேபோல, அந்தப் பகுதியில் சாலையை மறித்து ஆபத்தான வகையில் எழுப்பிய சுற்றுச்சுவர்களை நகராட்சி அதிகாரிகள் இடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

சற்று விசாலமான பகுதிகளில் ஜே.சி.பி-யை வைத்தும், குறுகலான பகுதிகளில் கடப்பாறை போன்ற ஆயுதங்களை வைத்தும் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு, அந்த சுவரின் உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய விளக்கம் சொல்லி சுவரை இடித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

சுவர் இடிக்கும் பணிகள் நடைபெறுவதால், அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.