Published:Updated:

''ரித்விக்கை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை!'' வைரல் செய்தி வாசிப்பாளரின் தந்தை!

ரித்விக்
ரித்விக்

ரித்து என்கிற ரித்விக் வீடியோக்கள் வைரலான நிலையில், அந்த குழந்தையின் எதிர்காலம் குறித்த பதிவுகளும் பேசு பொருளாகியுள்ளன.

யுட்யூப் ஸ்டார்களில் சமீத்திய மாஸ் என்ட்ரி ரித்து என்று செல்லமாக அழைக்கப்படும் மாஸ்டர் ரித்விக். கோவையைச் சேர்ந்த 7 வயதான ரித்விக், ‘ரித்து ராக்ஸ்’ என்ற யுட்யூப் சேனல் மூலம் கலக்கிக் கொண்டிருக்கிறார். டிவி மீடியாக்களில், செய்திகள் சொல்லப்படும் விதத்தை ரித்து தனி ஒருவனாக பல கெட்டப்களில் கலாய்த்து வெளியான வீடியோ சமீபத்தில் வைரலானது.

ரித்து
ரித்து

''யார்டா இந்த க்யூட் பாப்பா?'’ என்று பலரும் தேடினர். பல்வேறு ஊடகங்களிலும் ரித்துவின் பேட்டி வெளியானது.

ரித்துவின் முந்தைய வீடியோக்கள், ரித்துவின் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ரித்துவை ஒருபுறம் பாராட்டி கொஞ்சி வருகின்றனர். மறுபுறம், ‘'வீடியோவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதற்காக 7 வயது குழந்தைக்கு ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுக்கறீர்கள்... அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்... குழந்தையை வைத்து ரிஸ்க் எடுக்காதீர்கள். அவர்களை அவர்களின் போக்கிலேயே விடுங்கள்'’ என்று ரித்துவின் பெற்றோருக்கு சிலர் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு ரித்துவின் தந்தை ஜோதிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதள பதிவு
சமூக வலைதள பதிவு

“விமர்சனங்கள் அனைத்துக்கும் நான் மதிப்பளிக்கிறேன். இந்த காணொளிகள் ரித்விக் விரும்பி கேட்டதால் மட்டுமே உருவாக்கினோம். ரித்விக்கே பல வசனங்களை சொல்வார். பல காட்சிகளை உருவாக்குவார். இவை அனைத்தும் நான், ரித்விக் மற்றும் என் மனைவி மூவரும் மகிழ்ச்சியாக கலந்து பேசிக்கொள்வோம்.

விகடன் பேட்டியில்
விகடன் பேட்டியில்

இறுதியாக ரித்விக்தான் கதையை முடிவு செய்வார். ரித்விக்கின் சமீபத்திய காணொளி வைரல் ஆனதைத் தொடர்ந்து, நாங்கள் பல ஊடகங்களுக்கு எங்கள் கருத்துகளை பேட்டியாக கூறியிருந்தோம்.

அதில் ரித்விக், ‘பத்து மணிநேரம் படப்பிடிப்பு நடக்கும். பத்து டேக் எடுப்பேன்’ என்று சொன்னான். நானும் அதையே சொல்லியிருக்கிறேன். அந்த பத்து மணி நேரம் பத்து டேக் குறித்து முக்கியமான பேசு பொருளாகியிருக்கிறது. முதலில் எங்களது ஒரு காணொளியை ஒரே நாளில் எடுப்பதில்லை. மூன்று நாள்கள் படப்பிடிப்பு நடைபெறும்.

ஜோதிராஜ்
ஜோதிராஜ்

ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் நான் கதை வசனம் எழுதுவேன். திங்கள் அன்று ரித்விக்கின் மூன்று மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், மதிய உணவுக்கு பிறகு ரித்விக் ஓய்வெடுப்பான்.

பின் மாலை 4 அல்லது 5 மணிக்கு எங்களது படப்பிடிப்பு தொடங்கும். முதல் நாள் மூன்று மணி நேரம் படப்பிடிப்பு நடத்துவோம். எங்களது வீடு பிரதான சாலையை ஒட்டியுள்ளதால் அதிக அளவில் வாகனங்கள் செல்லும். அப்போது காணொளியை நிறுத்த வேண்டி இருக்கும்.

ரித்து
ரித்து

இதனால் முதல் நாள் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் ஆகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் படப்பிடிப்பும் இப்படிதான் நடக்கும். மூன்று நாள்களின் மொத்த படப்பிடிப்பு நேரத்தைத்தான் நாங்கள் பத்து மணி நேரம் ஆகும் எனச் சொன்னோம்.

இதை நாங்கள் ஊடகத்தில் சரியாக பதிவு செய்யவில்லை. சிலர் இதை தவறாக புரிந்து கொண்டு எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். விவாதங்களும் நடைபெறுகின்றன. நானும் எனது மனைவியும் ஒருபோதும் ரித்விக்கிற்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. ரித்விக் எனது வசனங்களை கேட்டு மிகவும் சிரித்து மகிழ்வான்.

விகடன் பேட்டியில்
விகடன் பேட்டியில்

முக்கியமாக பெற்றோர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் ரித்விக் காணொளியை பார்த்து உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து ரித்விக் காணொளி போலவே உருவாக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

உங்கள் குழந்தைகள் ரித்விக்கை விட வேறு விஷயங்களில் அதிக திறமை படைத்தவர்களாக கூட இருக்கலாம் குழந்தைகளின் விருப்பம் என்னவோ அதற்கு முக்கியதுவம் கொடுங்கள். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கு ஊக்கம் கொடுங்கள். எங்கள் மகன் ரித்விக்கை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் தினம் ஒரு காணொளி எங்களால் போட முடியும்.

ரித்து
ரித்து

ஆனால், ரித்விக் இதை பொழுது போக்காக செய்வதால் வாரம் ஒரு காணொளி மட்டுமே பதிவேற்றம் செய்கிறோம். பிறகு, ‘எதற்கு ஒரு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தீர்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

நாங்கள் ரசித்த காணொளியை, மக்களும் ரசிக்க வேண்டும், இதை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று நானும் எனது மனைவியும் ஆசைப்பட்டோம். அவ்வளவுதான்... இந்த நொடியே ரித்விக் எனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று சொன்னால் மறுகணமே நாங்கள் யு-ட்யூப்பை விட்டு வெளியேறிவிடுவோம்.

ரித்து
ரித்து

மேலும் மக்களை எங்களால் முடிந்தவரை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். சில விமர்சனங்கள் எங்களை காயப்படுத்துகிறது. எது நடந்தாலும் நாங்கள் மக்களை மகிழ்வித்து கொண்டு இருப்போம்'' என்று விளக்கம் தருகிறார் ஜோதிராஜ்.

அடுத்த கட்டுரைக்கு