Published:Updated:

உள்ளாட்சி தேர்தல்: ஒரு வாக்கு கூட பதிவாகாத விற்பட்டு கிராமம்! - காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ள கிராம மக்கள்
தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ள கிராம மக்கள்

தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி ஒரு கிராமமே தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட மற்றும் இறுதி வாக்குப்பதிவு இன்று (09.10.2021) நடைபெற்று வருகிறது.

வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி
வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி

காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவியூர் ஊராட்சியை சேர்ந்த 'விற்பட்டு' கிராமத்தினர், தனி ஊராட்சி கேட்டு வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். இது தொடர்பான முழு விவரங்களை அறிவதற்கு அந்த கிராமத்திற்கு நேரில் விசிட் அடித்தோம். வெறிச்சோடி காணப்பட்டன வாக்குச்சாவடிகள். அங்கிருந்த ஊர் மக்கள் சிலரை சந்தித்துப் பேசினோம். "நாங்க அவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தினர். அவியூர் ஊராட்சியில், அவியூர் கிராமம் உட்பட விற்பட்டு, சேதுவாராயநல்லூர் ஆகிய மூன்று கிராமங்கள் அடங்கியுள்ளன. அவியூர் கிராமத்தில் 1100 வாக்குகளும், விற்பட்டு கிராமத்தில் 526 வாக்குகளும், சேதுவாராயநல்லூர் கிராமத்தில் 460 வாக்குகளும் உள்ளன

அவியூர் கிராமத்தில் அதிக வாக்குகள் இருப்பதால் இதுவரை அந்த ஊரை சேர்ந்தவர் மட்டும்தான் தலைவராகவும், கவுன்சிலராக வருவாங்க. எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததே இல்லை. எங்கள் கிராமத்தில் குறைவான வாக்குகள் இருப்பதால் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. அப்படி போட்டியிடும்போது இக்கட்டான பல சூழ்நிலைகளை நாங்கள் சந்திக்க நேரிடும். எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாங்கன்னு பலமுறை அவங்க கிட்ட பேசி பார்த்துட்டோம். ஆனா, எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. எங்களுக்கும் அவியூர் கிராமத்திற்கும் 3 கி.மீ தூரம். எங்களுக்கு எந்த தேவை என்றாலும் 3 கி.மீ தாண்டி சென்று தான் நாங்க கேட்கணும். எந்த ஒரு திட்டம் வந்தாலும் அவங்க ஊரோட முடிச்சுப்பாங்க. அப்படி, எங்க ஊருக்கு கேட்டு வாங்கணுனா, ஒவ்வொரு முறையும் வாய்ச்சண்டை போட்டுதான் வாங்க வேண்டியிருக்கும்.

வாப்பஸ் பெற்ற ரசீதுகள்
வாப்பஸ் பெற்ற ரசீதுகள்

கடந்த 5 வருஷங்களா இங்க இருக்கிற டேங்க் உடைஞ்சு கிடக்குது. இதுவரைக்கும் யாரும் சரி பண்ணி தரல. இந்த முறை தேர்தல் அறிவித்த போது, இந்த ஊர் சார்பாக 2 பேர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செஞ்சாங்க. எங்க ஊரில் 2 வார்டு இருக்கு. ஒவ்வொரு வார்டுக்கும் 2 பேர்னு 4 பேர் வேட்புமனு தாக்கல் பண்ணினாங்க. இந்த முறை எங்க ஊர்க்காரர்களுக்கு வாய்ப்பு தரும்படி அவியூர் கிராமத்தினரிடம் கேட்டோம். ஆனா அவங்க தர மறுத்துட்டாங்க. வேற வழி இல்லாம எங்க ஊரை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தோம். அதனால் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் வாபஸ் வாங்கிட்டாங்க. வாபஸ் பெற்ற உஷா, ஸ்ரீதர் என்ற இரண்டு வேட்பாளர்களை மைண்டு வாஷ் பண்ணி, தேர்தல் அதிகாரிகள் அழைத்துப்பேசி அன்னபோஸ்டாக அறிவிச்சிட்டாங்க. ஆனா, அவங்க வாபஸ் வாங்கிய ஆதாரம் எங்களிடம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக இருக்கிறது. நாங்கள் தேர்தலை புறக்கணிப்பதை தெரிந்து, அதிகாரிகள் இப்படி பண்ணியிருக்காங்க.

பதறும் தி.மு.க... திணறும் அ.தி.மு.க... மிரளும் இதர கட்சிகள்... உள்ளாட்சி உச்சகட்டம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கு நேரில் சென்றோம். மாவட்ட ஆட்சியரை அன்று சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கல. 'இது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ -வை (BDO)சார்ந்தது என்று கூறி அனுப்பிவிட்டார் மாவட்ட தேர்தல் உதவியாளர் ராமகிருஷ்ணன். ஆகவே, எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கும் வரை இந்த தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடரும்" என்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு
தேர்தல் புறக்கணிப்பு

இது தொடர்பாக விளக்கம் கேட்க போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் உஷா, ஶீதர் இருவரையும் தொடர்பு கொண்டோம். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை.

புதுவை - விழுப்புரம்: 15 நாள்களில் 4 மடங்கு அதிகரித்த மதுபான கடத்தல்! உள்ளாட்சித் தேர்தல் எதிரொலியா?

அதனை தொடர்ந்து வல்லம் பி. டி.ஓ-விடம் பேசினோம். "வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து விலகுவதாக ARO மூலம் எனக்கு இரண்டு வார்டு உறுப்பினர் படிவங்கள்தான் வந்தது. அதன்படி மீதமுள்ளவர்களை அன்னபோஸ்டாக அறிவித்தோம்" என்றார். மேலும், மாவட்ட தேர்தல் உதவியாளர் (election PA) ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினோம். "அந்த கிராமத்தினர் தனி ஊராட்சி வேண்டும் என்று கேட்டனர். அதற்கு, 'தனி ஊராட்சியாக அறிவிப்பதற்கான பணி மிகவும் பெரியது. அதற்கான அரசு வழிகாட்டு நெறிமுறை ஆணை ஒன்று உள்ளது. அதை பின்பற்றிதான் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் அப்பணியை செய்ய முடியாது. ஒரு வருட காலம் கூட ஆகலாம். எனவே, இந்த முறை நல்ல முறையில் வாக்களியுங்கள். அடுத்த முறை செய்து தருவதற்கான பணியை மேற்கொள்கிறோம்' என்று தான் கூறினோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு