Published:Updated:

கொரோனா நிவாரணமாக தங்கச் சங்கிலியை வழங்கிய பள்ளி ஆசிரியை; வாங்க மறுத்து ஆட்சியர் செய்த உதவி!

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

விருதுநகரில் கொரோனா நிவாரணநிதிக்காக தனது மூன்றரை பவுன் தங்கச் செயினை வழங்க முன்வந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதாவை பாராட்டியதுடன், அவரது குடும்ப நிலை அறிந்து அரசு வேலைக்குப் பரிந்துரை செய்வதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உறுதியளித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்காக, பொதுமக்கள் தாமாக முன்வந்து தாராளமாக நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், வணிக அமைப்புகள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். பல மாணவர்கள், தங்களின் உண்டியல் பணத்தையும் நிவாரண நிதிக்காக மனமுவந்து அளித்து வருகின்றனர்.

ஆட்சியரிடம் தங்கச்செயின் வழங்கிய ஆசிரியை கவிதா
ஆட்சியரிடம் தங்கச்செயின் வழங்கிய ஆசிரியை கவிதா
உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்; உதவி செய்யும் நல் உள்ளங்கள்! - தீர்வை நோக்கி கோவை பழங்குடி கிராமம்

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான கவிதா, தன் மகன் மணிஷ் விஸ்வாஸுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது மூன்றரை பவுன் தங்கச் செயினை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் கொரோனா நிதியாகப் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். ``தங்கச் செயினை எதுக்கும்மா நிவாரணமா கொடுக்குறீங்க?” எனக் கேட்டார் ஆட்சியர்.

``என்னோட ஊரு ராஜபாளையம். என் கணவர் ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு விபத்துல இறந்து போயிட்டார். என் மகன் மணிஷ் விஸ்வாஸுடன் தனியா வசிச்சுட்டு வர்றேன். ராஜபாளையத்துல உள்ள ஒரு தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துட்டு இருக்கேன். பொதுமக்களின் நலனுக்காக என்னிடம் இருந்த இந்த மூன்றரை பவுன் செயினை நிவாரணத் தொகைக்காக கொடுக்கிறேன்” என்றார். அந்தப் பெண்ணின் குடும்ப பின்னணியை அறிந்த ஆட்சியர் மேகநாதரெட்டி, ``கணவர் இல்லாமல், பள்ளிக்குச் செல்லும் ஒரே மகனுடன் வாழ்கையில் நீங்கள் சிரமப்பட்டு வருகிறீர்கள். இந்தச் சூழ்நிலையில், கொரோனா நிவாரணத்திற்காக உங்களோட செயினை மனமுவந்து கொடுக்க முன் வந்ததை நினைச்சு பெருமைப்படுறேன்.

ஆட்சியரிடம் தங்கச்செயின் வழங்கிய ஆசிரியை கவிதா
ஆட்சியரிடம் தங்கச்செயின் வழங்கிய ஆசிரியை கவிதா
``உங்கள மாதிரி கலெக்டர் ஆகப்போறேன்!" - ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியரை நெகிழ வைத்த மாணவர்கள்

அதே நேரத்துல மிகுந்த கஷ்டமான குடும்பச் சூழலில் செயினை நிவாரணத் தொகைக்காகத் தர வேண்டாம். உங்க மகனோட எதிர்காலத் தேவை கருதி அதை சேமிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றவர், தங்கச்செயினை அந்தப் பெண்ணிடம் திரும்ப அளித்தார். ``நல்லாப் படிச்சு வாழ்கையில முன்னேறணும்” என கவிதாவின் மகன் மணிஷ் விஸ்வாஸுக்கு திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசளிசளித்தார். அத்துடன், ஆசிரியை கவிதாவுக்கு குடும்பநிலையை கருதி அரசுவேலைக்காக பரிந்துரைப்பதாகவும், சிறுவனின் படிப்புச்செலவை அரசே ஏற்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு