Published:Updated:

`குஜராத் டு விருதுநகர்; 4 நாள்கள்; 2,300 கி.மீ! - உடல்நலமில்லாத தாயைக் காண பைக்கிலேயே வந்த மகன்

சந்திரமோகன்
சந்திரமோகன்

தாய்க்கு உடல்நிலை சரியில்லாத தகவலைக் கேட்டு, மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, குஜராத் மாநிலத்திலிருந்து 2,300 கி.மீ பைக்கிலேயே பயணித்து விருதுநகர் வந்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில மாவட்டங்களில் தாக்கம் குறைந்து சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கும் ஆரஞ்சு நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கும் முன்னேறி வருகிறது.

இருப்பினும், பல மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதே, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அனைத்துவகைப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

அனுமதிக் கடிதத்துடன் சந்திரமோகன்
அனுமதிக் கடிதத்துடன் சந்திரமோகன்

பின்னர், சில நாள்களுக்குப் பிறகு திருமணம், மருத்துவம் மற்றும் இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத தகவலைக் கேட்டு, அகமதாபாத் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்றுத் தன் தாயைக் காண குஜராத்தில் இருந்து நான்கு நாள்கள் பயணித்து, தன் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு வந்துள்ளார் பொறியாளர் சந்திரமோகன்.

சந்திரமோகனிடம் பேசினோம், ``குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலை பார்த்துட்டு வர்றேன். என்னோட சொந்த ஊரான வத்திராயிருப்பில் என் அம்மா கஸ்தூரி, மனைவி, குழந்தைகள் வசித்து வருகிறார்கள். நான் மட்டும் அகமதாபாத்தில் வேலை பார்க்கிறேன். லீவு கிடைக்கும்போது மட்டும் ஊருக்கு வந்து செல்வேன்.

குடும்பத்தினருடன் சந்திரமோகன்
குடும்பத்தினருடன் சந்திரமோகன்

திடீரென ஊரடங்கு அமல்படுத்தியதுடன், மாநிலங்களுக்கு இடையிலான எல்லாப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால் குஜராத்திலேயே இருந்துவிட்டேன். சமூகத் தொண்டு நிறுவனங்கள் அளித்த உணவையே மூன்று வேளையும் வாங்கிச் சாப்பிட்டு சமாளித்தேன். இந்த நிலையில திடீரென அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என போன் வந்தது. தகவலைக் கேள்விப்பட்டு என்னால் அங்கே இருக்கவும் முடியவில்லை.

அகமதாபாத் மாவட்ட கலெக்டர் ஆபீஸில் விவரத்தைச் சொல்லி, அம்மாவின் மருத்துவ சிகிச்சை ரிப்போர்ட்டுகளை வாட்ஸ்அப்பில் இருந்து பிரின்ட் எடுத்துக் காட்டி அனுமதி பெற்றேன். கடந்த 22-ம் தேதி குஜராத்துல இருந்து கிளம்பினேன். காடுகள் நிறைந்த சாலைகள் என்பதால் பகல் நேரத்தில் மட்டும் பைக் ஓட்டினேன்.

சந்திரமோகன்
சந்திரமோகன்

இரவு நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளில் தங்கினேன். மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் என்னை மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே மாநில எல்லையைத் தாண்டிச் செல்ல அனுமதித்தார்கள் போலீஸார். கலெக்டரின் அனுமதிக் கடிதம் இருந்தும் மூன்று மாநிலங்கள் தாண்டி தமிழகம் வருவதால், கிட்டத்தட்ட 50 செக்போஸ்ட்களில் போலீஸார் என்னை நிறுத்தினார்கள்.

பெரும்பாலான ஹோட்டல்களும் அடைக்கப்பட்டிருந்தன. பிரட், பிஸ்கட், தண்ணீர்தான் உணவாகக் கிடைத்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கரூர் வழியாக 2,300 கி.மீ தூரம் பயணித்து ஒருவழியாக 4 நாள்கள் பயணத்துக்குப் பிறகு வத்திராயிருப்பு வந்தேன்.
பொறியாளர் சந்திரமோகன்

பெரும்பாலான ஹோட்டல்களும் அடைக்கப்பட்டிருந்தன. பிரட், பிஸ்கட், தண்ணீர்தான் உணவாகக் கிடைத்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கரூர் வழியாக 2,300 கி.மீ தூரம் பயணித்து ஒருவழியாக 4 நாள்கள் பயணத்துக்குப் பிறகு வத்திராயிருப்பு வந்தேன். வீட்டுக்கு வந்ததும் அம்மா, மனைவி, குழந்தைகளை பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்தது” என்றார் நெகிழ்ச்சியாக.

சந்திரமோகன்
சந்திரமோகன்

சந்திரமோகன் வெளி மாநிலத்திலிருந்து ஊருக்குத் திரும்பிய தகவல் தெரிந்ததும் அவருக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். பின்னர், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தாயின் மீதுள்ள பாசத்தால், குஜராத்திலிருந்து பைக்கிலேயே பயணித்து மகன் ஊர் திரும்பிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு