Published:Updated:

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகை... காசோலை பவுன்ஸ்! -அதிர்ச்சியில் குடும்பத்தினர்

விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 27 பேரின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் வழங்கிய நிவாரணத் தொகையான ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பணமில்லாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான 'ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை' இயங்கிவந்தது. ஃபேன்ஸி ரக தயாரிப்புக்கான நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிய இந்த ஆலை, நான்கு பேருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 30 அறைகளில் 89 பேர் வேலை பார்த்துவந்தனர். கடந்த பிப்ரவரி மாதம், 12-ம் தேதி இந்த ஆலையின் ஃபோர்மேன் விஜயகுமார், ஃபேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மணி மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து பரவிய தீயில் 20 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

மாரியம்மாள் பட்டாசு ஆலை
மாரியம்மாள் பட்டாசு ஆலை

இந்தக் கோர விபத்தில் 27 பேர் உடல் கருகியும், சிதறியும் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தனர். முழுமையான விதிமீறலும், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட அதிக உற்பத்தி அழுத்தமும்தான் இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டது. இந்த ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்களான சக்திவேல், ராஜா, சிவகுமார், பொன்னுபாண்டி, வேல்ராஜ் ஆகிய ஆறு பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை, காசோலையாக வழங்கப்பட்டது. இந்தநிலையில், அந்தக் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று காசோலையை மாற்றச் சென்ற நிலையில், இரண்டு பேருக்கும் மட்டும் பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 25 பேருக்கு ஆலையின் உரிமையாளரின் வங்கிக்கணக்கில் போதிய பணமில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசினோம்.

புகார் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள்
புகார் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள்

``வயித்துப்பாட்டைக் கழிக்கிறதுக்காகவும், பிள்ளைகளைப் படிக்கவைக்கிறதுக்காகவும் எங்களோட குடும்பத்துலருந்து பட்டாசு ஆலையில வேலைக்குப் போனாங்க. ஒரு ரூமுக்குள்ள அதிகபட்சமா நாலு பேருதான் இருந்து வேலை பார்க்கணும்னு சொல்லுறாங்க. ரூமுக்குள்ள செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தியை திறந்தவெளியிலயும், மரத்தடியிலயும் செய்யுறாங்க. இப்படி இடைவெளியே இல்லாம உட்கார்ந்து வேலை பார்க்கறதுனாலயும், அதிக உற்பத்தி நெருக்கடியும், தொழிலாளர்களை அவசரப்படுத்துதலும் அந்தக் கோர விபத்துக்குக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க குடும்பத்தைத் தாங்கிப் பிடிச்ச தூண்கள். ஆணி வேர் மாதிரி இருந்தவங்கள்லாம் அந்தப் பட்டாசு விபத்துல உடல் சிதறி எங்களைவிட்டுப் பிரிஞ்சு போயிட்டாங்க. அந்த இழப்பை யாராலயும் ஈடு கட்டவே முடியாது. இருந்தாலும், அவங்களோட பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவித்தொகையா ஒரு குடும்பத்துக்கு மத்திய அரசு தலா ரூ. 2 லட்சமும், மாநில அரசு தலா ரூ.3 லட்சமும் நிதியுதவி அறிவிச்சாங்க.

செக்
செக்

ஆனா, ரெண்டு மாசமாகியும் மத்தியரசின் நிதியுதவி எங்கள்ல யாருக்குமே கிடைக்கலை. மாநில அரசின் நிதியுதவி 17 பேருக்கு மட்டும்தான் கிடைச்சுது. மீதமுள்ள 10 பேருக்கு என்ன காரணத்துனால பணம் கொடுக்கலைன்னு தெரியலை. பட்டாசு ஆலை விபத்துல உயிரிழப்பு ஏற்பட்டா சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம், அந்தக் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையா ரூ.5 லட்சம் தரணும்னு விதி இருக்கு. அதன்படி, எங்க 27 குடும்பத்துக்கும் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதலாளிமார்கள் கொடுத்தாங்க.

காசோலை கொடுக்கும்போதே மார்ச் மாதத் தேதியைக் குறிப்பிட்டுத்தான் கொடுத்தாங்க. அப்பவே, நடப்பு தேதியிட்டு காசோலையைத் தாங்கன்னு சாத்தூர், சிவகாசி தாசில்தார்களிடம் சொன்னோம். அதற்கு அவங்களும் உறுதி கொடுத்தாங்க. ஆனா, அந்தக் காசோலையில் குறிப்பிட்டிருந்த தேதிக்கு நாலைந்து நாள் கழிச்சுதுதான் வங்கியில போட்டோம். ஆனா, `செக் பவுன்ஸ் ஆயிடுச்சு’ன்னு சொல்லிட்டாங்க. இந்தப் பணத்தைவெச்சுதான் ஸ்கூல், காலேஜ் ஃபீஸ் கட்டணும், ஏற்கெனவே பேசி முடிச்ச கல்யாணத்தை நடத்தணும்.

செக்
செக்

குடும்பத்துல உள்ள உறுப்பினரை இழந்து வாடும் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யணும்” என்றனர் கண்ணீருடன்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பேசினோம். ``ஆலையின் உரிமையாளர் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாக மனு கொடுத்துள்ளனர். விசாரணை நடத்தி, விரைவில் அந்தக் குடும்பத்தினருக்குச் சேர வேண்டிய தொகை சேர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு