Published:Updated:

`பிறந்தநாள் கொண்டாடுவது இதுவே முதல் முறை!' -மாற்றுத்திறனாளி குடும்பத்தை நெகிழவைத்த தனியார் அமைப்பு

பிறந்த தினம்
பிறந்த தினம் ( எம். விஜயகுமார் )

`அடுத்த நாள் அனைவரும் சென்று பல இடத்தில் வீடு கேட்டோம். யாரும் கொடுக்க முன்வரவில்லை. இறுதியாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத குறைந்த வாடகையில் ஒரு வீட்டில் தங்க வைத்தோம்.'

கடந்த 25-ம் தேதி ``கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹோட்டலுக்குள் நுழைஞ்சோம்; உள்ளே விடலை! - மாற்றுத்திறனாளி வெங்கடேஷின் கதை' என்ற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேஷ் படும் துயரத்தை எழுதியிருந்தோம்.

பராமரிப்பு
பராமரிப்பு
எம். விஜயகுமார்

அதையடுத்து, கரூர் இணைந்த கைகள் மற்றும் ஈரோடு தாய்மை அறக்கட்டளை இணைந்து வெங்கடேஷின் குடும்பத்துக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி கரூர் இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, ``வெங்கடேஷின் குடும்பக் கதையை விகடன் இணையதளத்தில் படித்து மனசு ரொம்ப வேதனையாக இருந்தது. அடுத்த நாள் சென்று பார்த்தபோது பரிதாபமான நிலையில் இருந்தார்கள். நான் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளானேன். லட்டு மாதிரி 3 அழகான குழந்தைகள் பசியால் வாடி இருந்தார்கள். உடனே குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஹோட்டலில் பிரியாணி வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தேன்.

உதவிகள்
உதவிகள்
எம். விஜயகுமார்

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் மது அருந்திவிட்டு பலரும் வருவதும், போவதுமாக இருந்தார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை உணர்ந்தேன். அன்று இரவு ஈரோடு தாய்மை அறக்கட்டளையைச் சேர்ந்த மேகா என்னைத் தொடர்புகொண்டு விகடனில் வந்த வெங்கடேஷின் கதையைப் படித்து கண் கலங்கியதாவும் வெங்கடேஷின் குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றார்.

அதையடுத்து, அடுத்த நாள் அனைவரும் சென்று பல இடத்தில் வீடு கேட்டோம். யாரும் கொடுக்க முன்வரவில்லை. இறுதியாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத குறைந்த வாடகையில் ஒரு வீட்டில் தங்க வைத்தோம். வீட்டுக்குத் தேவையான அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்கிக் கொடுத்தோம்.

வெங்கடேஷின் மூத்த மகள் சங்கீதாவுக்குப் பிறந்தநாள் என்பதை யதார்த்தமாக அறிந்தோம். உடனே 3 குழந்தைகளுக்கு முடிகளை வெட்டி, குளிக்க வைத்து, 3 ஜோடி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து தமிழ் முறைப்படி கடலை உருண்டை வைத்து தமிழில் வாழ்த்து பாடி பிறந்தநாள் கொண்டாடினோம்.

வாழ்த்து
வாழ்த்து
எம். விஜயகுமார்

``குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை... நாங்கள் எந்தக் குழந்தைக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை. இப்படி ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் நடக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என்று வெங்கடேஷும் அவரின் மனைவியும் கண் கலங்கினார்கள்.

தற்போது வெங்கடேஷின் குடும்பத்துக்கு அவசரத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு ஒரு வீடு, வருமானத்துக்கு ஒரு தொழில், குழந்தைகளைப் படிக்க வைக்க உதவிகள் தேவைப்படுகிறது. தக்கத் தருணத்தில் வெங்கடேஷின் குடும்பச் சூழலை வெளிக்கொண்டுவந்த விகடனுக்கு நன்றிகள். நீங்கள் மட்டும் பதிவு செய்யவில்லையென்றால் அந்தக் குடும்பம் ரொம்ப பரிதவித்திருக்கும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு