Published:Updated:

`விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜரானால் பல உண்மைகள் வெளிவரும்!' - வியனரசு

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

”ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுவினார்கள். அவர்களை எனக்குத் தெரியும் என ரஜினி எப்படிச் சொன்னார்? அவர், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரானால்தான் பல உண்மைகள் தெரியவரும்” என்று தமிழர் விடுதலைக் கொற்றத்தின் தலைவர் வியனரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் நாள் நடந்த முற்றுகைப் போரட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி. அதைத் தொடர்ந்து, அவர் மீடியாக்களிடம் பேசியபோது,``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம்.

ஆறுதல்கூறிய ரஜினி
ஆறுதல்கூறிய ரஜினி

வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை எனக்குத் தெரியும்” என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில், ``போராட்டத்தில் பங்கெடுத்த மக்களை, எப்படி சமூக விரோதிகள் என நடிகர் ரஜினி கூறினார்” என அப்போதே பல அமைப்பினர் கொந்தளித்தனர். இதுவரை ஆணையத்தின் முன்பாக விசாரணைக்காக ஆஜரானவர்களில் பெரும்பாலானவர்கள், நடிகர் ரஜினியை விசாரணைக்கு அழைக்க வேண்டும்” என்று மனு அளித்துள்ளனர்.

`துப்பாக்கிச்சூடு குறித்த பேச்சு; தேவைப்பட்டால் ரஜினியையும் விசாரணைக்கு அழைப்போம்!'-விசாரணை ஆணையம்

``இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தேவைப்பட்டால் ரஜினியையும் அழைப்போம்” என்று ஆணையத்தின் தரப்பில் வழக்கறிஞர் வடிவேல், கடந்த 18-வது கட்ட விசாரணையின் முடிவில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், வரும் 25-ம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராகுமாறு நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர், வரும் 25-ம் தேதி ஆஜராக வருவாரா அல்லது வேறொரு தேதி கேட்பாரா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இருப்பினும், ரஜினிக்கு சம்மன் அனுப்பிய தகவல் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியனரசு
வியனரசு

இந்நிலையில், ரஜினியை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என ஆணையத்தில் முதலில் உறுதிமொழிப் பிரமாணப் பத்திரம் அளித்தவரும், தமிழர் விடுதலைக் கொற்றத்தின் தலைவருமான வியனரசுவிடம் பேசினோம். ``துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூற தூத்துக்குடிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1997-ம் ஆண்டு, தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவின்து, தீப்பிடித்து 46 பேர் இறந்துபோயினர். நூற்றுக்கணக்கானோர் தீக்காயமடைந்தனர். அப்போது, ஓர் ஆன்மிகவாதியாகக்கூட அங்கு போய் ஆறுதல் சொல்லவில்லை.

அதேபோல, கடந்த 1999ல் திருநெல்வேலியில் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் பேரணியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட தடியடியால் 17 பேர் தாமிரபரணியில் மூழ்கி இறந்தபோது, அங்கு வந்து மக்களுகளுக்கு ஆறுதல் சொல்வில்லை, தடியடியைக் கண்டிக்கவில்லை. 2004-ல் கும்பகோணத்தில், தனியார் ஆங்கிலப் பள்ளியில் தீப்பற்றி 96 மழலைகள் தீயில் கருகியபோதும் மனிதநேயத்தோடுகூட அங்கு சென்று குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லாத ரஜனிகாந்த், தூத்துக்குடிக்கு மட்டும் வரவேண்டிய தேவை என்ன?

வியனரசு
வியனரசு

தூத்துக்குடிக்கு வந்துபோகும்போது, போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷக்கிருமிகள், தீயசக்திகள் நுழைந்துவிட்டார்கள். அவர்கள்தான் வன்முறைக்கு வித்திட்டவர்கள். அவர்களை எனக்குத் தெரியும் என்று சொல்லச் சொன்னது யார்? அப்படி குற்றவாளிகளைத் தெரியுமென்றால், சட்டப்படி அவர்களைப் பற்றி தொடர்புடைய காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டுமே, ஏன் தெரியப்படுத்தவில்லை?

இதுதொடர்பாக சிப்காட் காவல் நிலையத்திலும் நான் புகார் செய்தேன். அவர்மீது காவல்துறை தற்போதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே என் வினாக்கள். ரஜனிகாந்த்தின் இந்த பேட்டிக்குப் பிறகே, அதுவரை கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை கிடைத்துவந்த நிலையில், அவர் பேசிய பிறகே சிறையடைப்புப் படலம் தொடங்கியது. ஆகையால், இதில் பெரிய சதியும் உள்நோக்கமும் இருக்கக் கூடும் என சந்தேகிக்கவேண்டியுள்ளது.

ஆறுதல் கூறிய ரஜினி
ஆறுதல் கூறிய ரஜினி

பெரியகோயிலுக்கு வராததும் நெல்லைக்கு வராததும் அப்போதைய முதல்வர் கலைஞருக்கு பயந்தா? கும்பகோணம் போகாமலிருந்தது, தானும் ஆங்கிலப் பள்ளி நடத்திவந்தார் என்பதாலா அல்லது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பயந்தா? என்ற மர்மமெல்லாம் உடைய வேண்டும். ஆணையத்தின் முன்பு அவர் ஆஜரானால்தான் பல உண்மைகள் வெளிவரும்” என்றார்.

பின் செல்ல