Published:Updated:

`பேர்லாம் வேணாம்னு சொல்லிட்டாங்க!' - ரூ.70 லட்சம் செலவில் மருத்துவ உதவி செய்த தன்னார்வலர்கள்

குன்னூர் அரசு மருத்துவமனையின் டையாலிசிஸ் மையம்
குன்னூர் அரசு மருத்துவமனையின் டையாலிசிஸ் மையம்

குன்னூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மருத்துவ வசதி இல்லாததால் இந்தப் பகுதியில் உள்ள 25 நோயாளிகள் வாரம் இரண்டு முறை கோவை மாவட்டத்துக்குச் சென்று வர வேண்டிய சிரமம் இருந்தது.

மருத்துவ உயர் சிகிச்சை வசதிகள் குறைவாக உள்ள நீலகிரி மாவட்ட மக்கள் தங்களின் மருத்துவத் தேவைக்காக கேரளா, கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்களையும், அருகில் உள்ள கோவை மாவட்டத்தையுமே சார்ந்து உள்ளனர். கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் உள்ள இத்தகைய இக்கட்டான சூழலில் மற்ற நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

குன்னூர் அரசு மருத்துவமனையின் டையாலிசிஸ் மையம்
குன்னூர் அரசு மருத்துவமனையின் டையாலிசிஸ் மையம்

குன்னூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மருத்துவ வசதி இல்லாததால் இந்தப் பகுதியில் உள்ள 25 நோயாளிகள் வாரம் இரண்டு முறை கோவை மாவட்டத்துக்குச் சென்று வர வேண்டிய சிரமம் இருந்தது. குன்னூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. இந்நிலையில், பெரும் பொருள் செலவில் இந்தச் சேவையை தன்னார்வலர்கள் செய்து முடித்துள்ளனர். மேலும் தங்களுக்கு விளம்பரங்கள் எதுவும் தேவையில்லை‌, தங்களது பெயரையும் வெளியில் சொல்ல வேண்டாம் என அவர்கள் கூறியிருப்பது நோயாளிகளையும், சுகாதாரத்துறையினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நெகிழ்ச்சி நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர், `` ரூ.70 லட்சம் செலவில் `டயாலிசிஸ்' பிரிவு உருவாக்கப்பட்டு, 6 படுக்கைகள் வசதியுடன் புதிதாகத் தொடங்கப்பட்டது. இதை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். வாரம் மூன்று முறை கோவைக்குச் சென்று வந்த 24 டயாலிசிஸ் நோயாளிகளுக்கு, இது பெரிய உதவியாக உள்ளது. யாரும் கேட்டால் தங்களது பெயரை விளம்பரப்படுத்த வேண்டாம் என அந்தத் தன்னார்வலர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள்" என ஆச்சர்யத்துடன் தெரிவித்தார்.

குன்னூர் அரசு மருத்துவமனையின் டையாலிசிஸ் மையம்
குன்னூர் அரசு மருத்துவமனையின் டையாலிசிஸ் மையம்

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது என்ற சொல்லாடலை மெய்ப்பிக்கும் வகையில், பெயரை வெளியில் சொல்ல வேண்டாம் எனக் கூறி உதவிக்கரம் நீட்டிய இந்தத் தன்னார்வலர்களை மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட குன்னூரைச் சேர்ந்த பரமசிவம், தன் டயாலிசிஸ் சிகிச்சை அனுபவம் குறித்து நம்மிடம் பேசுகையில், ``இந்த சமயத்துல எல்லோரது கவனமும் கொரோனா மீதே உள்ளது. மற்ற நோயாளிகளின் நிலை ரொம்ப மோசமாக உள்ளது. அரசின் எல்லா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் பிரிவு அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பிட்ட சமயத்தில் டயாலிசிஸ் செய்யாமல் போனால், உயிரிழப்பு நேரிடும். குன்னூரில் இருந்து கோவைக்குச் சென்று டயாலிசிஸ் செய்துவருவது மிகுந்த சிரமமான ஒன்று. நானும் அந்தக் கொடுமையை அனுபவித்தேன். இப்போது தேவை அறிந்து உதவியிருக்கும் அந்த நல் உள்ளங்களுக்கு நன்றி" என மனமுவந்து பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு