Published:Updated:

`தடுப்புச்சுவர் எழுப்பிய தமிழகம்; தகராறு செய்த ஆந்திரா!’ -எல்லையில் வெடித்த லாக்டௌன் பிரச்னை

தமிழக எல்லையில் தடுப்புச்சுவர்
தமிழக எல்லையில் தடுப்புச்சுவர்

வெளிமாநில வாகனங்கள் வேலூர் மாவட்டத்துக்குள் நுழைவதைத் தடுக்க தமிழக - ஆந்திர எல்லையில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர்கள் இடித்து அகற்றப்பட்டன. 

கொரோனா லாக்டௌன் நேரத்திலும், வேலூர் மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவைக்காக vellore.nic.in என்ற இணையதளம் மூலம் வாகனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், சென்னை உள்பட மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்கள், பெரும்பாலும் இந்த நகரங்களையொட்டிதான் அத்தியாவசிய பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

தமிழக எல்லையில் தடுப்புச் சுவர்
தமிழக எல்லையில் தடுப்புச் சுவர்

இதன் காரணமாக, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இனி எக்காரணத்தைக்கொண்டும் வேலூர் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல வாகன அனுமதி கிடையாது. அத்தியாவசிய பொருள்களுக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள், தமிழக எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே வேலூர் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பத்தலப்பள்ளி, சைனகுண்டா, பரதராமி, கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு, பொன்னை ஆகிய 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆந்திராவிலிருந்து வாகனங்கள் வந்துகொண்டே இருந்தன. இதனால், அத்தியாவசிய பொருள்களின் வாகனங்கள் காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளின் வழியாக மட்டுமே தமிழகத்துக்குள் வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

இடித்து அகற்றப்படும் தடுப்புச் சுவர்
இடித்து அகற்றப்படும் தடுப்புச் சுவர்

வேறு பாதை வழியாக மற்ற வாகனங்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா மற்றும் காட்பாடியை அடுத்த பொன்னை ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளின் அருகே உள்ள ஆந்திர எல்லையில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. அதேபோல், காட்பாடியை அடுத்த கண்டிப்பேடு அருகே உள்ள உள்ளிப்புத்தூர் கிராமம் வழியாகவும் ஆந்திர மக்கள் வந்தனர்.

இதையடுத்து, உள்ளிப்புத்தூர் கிராமத்திலும் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதற்கு, இருபுறமும் உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஆந்திர வருவாய்த் துறை அதிகாரிகள், சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

காட்பாடி தாசில்தார் பாலமுருகன் தலைமையிலான தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவேடுகள், வரைபடத்தைக் காட்டி தடுப்புச்சுவர் கட்டும் பகுதி தமிழக எல்லைக்குள்தான் வருகிறது என்பதை விளக்கினர். பிறகே, ஆந்திர அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்தநிலையில், பிரதான எல்லைச் சாலைகளான சைனகுண்டா, பொன்னை வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் வாகனங்கள், பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வரும் நிலை ஏற்பட்டது.

இடித்து அகற்றப்படும் தடுப்புச் சுவர்
இடித்து அகற்றப்படும் தடுப்புச் சுவர்

இந்த சிரமத்தைக் களைய சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களை அகற்றுமாறு வேலூர் கலெக்டருக்கு சித்தூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி சைனகுண்டா, பொன்னை மற்றும் உள்ளிப்புத்தூர் ஆகிய மூன்று இடங்களிலும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இந்தப் பணி, வேலூர் மற்றும் சித்தூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம், சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை கடுமையாக்கப்படும் என்று வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர நடவடிக்கையால் உடல் உழைப்பு, கட்டுமான பொருள்கள், நேரம் விரயமானதுதான் மிச்சம் என்கிறார்கள் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு