Published:Updated:

தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளை போர்க்கப்பல்கள் வருகை - எல்லோரும் பார்வையிடலாம்!

வ.உ.சிதம்பரனார் துறைமுகம்
வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு நாளை வருகைதரவுள்ள கடற்படை நவீனப் போர்க்கப்பலை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ல் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி `கடற்படை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படைத் தளம் சார்பில், கடந்த 4-ம் தேதி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு நவீனப் போர்க்கப்பல்கள் வருகை தர இருப்பதாகவும், இக்கப்பல்களை 7 மற்றும் 8-ம் தேதிகளில் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடலில் அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்ததால் போர்க்கப்பல்களின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.

முந்தைய ஆண்டுகளில் வந்த போர்க் கப்பல்கள்
முந்தைய ஆண்டுகளில் வந்த போர்க் கப்பல்கள்

இத்தகவல் முறையாகத் தெரிவிக்கப்படாததால், தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் ஆர்வத்துடன் கப்பல்களைப் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் துறைமுகத்தை மட்டும் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், அறிவித்தபடி போர்க்கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்போர்க்கப்பல்கள் மீண்டும் நாளை (14-ம் தேதி) தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வருகை தர உள்ளதாக ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ``இந்திய கடற்படை தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (14-ம் தேதி) தூத்துக்குடி துறைமுகத்திற்குப் போர்க்கப்பல்கள் வருகைதர உள்ளன. இந்தக் கப்பல்களைப் பார்வையிட நாளையும், நாளை மறுநாளும் அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை (14-ம் தேதி) பள்ளி மாணவர்கள் மட்டும் மதியம் 1 மணி முதல் 5 மணி வரை பார்வையிடலாம்.

தூத்துக்குடி துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்

நாளை மறுநாள் (15-ம் தேதி) உயர்கல்வி பயிலும் மாணவர்களும் பொதுமக்களும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் போர்க்கப்பல்களைப் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் பள்ளிச் சீருடைகளிலும், உயர்கல்வி பயில்வோர் பொதுமக்கள் ஆதார் அட்டையுடனும் வர வேண்டும்” எனக் கூறியுள்ளார். ரத்து செய்யப்பட்ட கப்பல்களின் வருகை மீண்டும் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு