Published:Updated:

`கீழடி' பாண்டியர்களின் தலைநகரமா?' காரணம் சொல்லும் பேராசிரியர் பாரதிபுத்திரன்!

தமிழன் கப்பல் கட்டுமானத்துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன் மூலம் தெரிய வருகிறது.

Keezhadi
Keezhadi

'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

Keezhadi Excavation
Keezhadi Excavation

இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையா என்று எண்ண வைக்கிறது. மத்திய அரசு முழு முடிவையும் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு, தமிழர்கள் நாம் எவ்வளவு தொன்மையானவர்கள் என்பதை உணர வைக்கிறது. மேலும், கீழடி ஆய்வில் கிடைத்த மற்றுமொரு முக்கிய அம்சம் 'எழுத்துரு'.

கீழடியில் பானை ஓடுகளில் கிடைத்துள்ள எழுத்துருக்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த எழுத்துருவோடு ஒத்துப்போகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி முதல் வைகை நதி வரை ஒரு நாகரிகத் தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையில் மேலும் பல ஆய்வுகள் தொடர வேண்டும். 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல கீழடியையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கிடைத்த பொருள்களை அங்கே அருங்காட்சியகமாக வைக்க வேண்டும். கீழடி ஆய்வுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு கூடுதல் நிதி கேட்டிருக்கிறது.

Professor Arunan
Professor Arunan

அந்த நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும், கீழடி ஆய்வுக்கான முழு உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். இன்றைக்கு வரலாற்று அறிஞர்கள் மிக முக்கியமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். கீழடி ஆய்வை முழுமையாகத் தொடர்ந்தால் தெற்காசியாவின் வரலாற்றை மாற்றி அமைக்கும்" என உறுதியாகக் கூறினார் பேராசிரியர் அருணன்.

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்

பேராசரியர் பாரதி புத்திரனைத் தொடர்புகொண்டபோது, தமிழ் நாகரிகத்திலிருந்த மேன்மையான தன்மைகள் குறித்துப் பேசிய அவர், " "சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் இன்னும் 300, 400 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில் அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருத வைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உரைகிணறுகள், சுகாராதப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வைகை நதியைப் பயன்படுத்தி ரோமானியர்களுடன் கடல்வழியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என, அங்கு கிடைத்துள்ள பொருள்கள் மூலம் தெரிய வருகிறது. 

Keezhadi
Keezhadi

தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன் மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

பாரதிபுத்திரன்
பாரதிபுத்திரன்

ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பேர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால் தென் பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின் மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில் எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது" எனப் பெருமை பொங்க பேசினார் பாரதி புத்திரன்.

``கீழடி, அகரம், மணலூரை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும்" - எழுத்தாளர் சு.வெங்கடேசன்