Published:Updated:

`உசிலம்பட்டிக்கு மட்டும் ஏன் இப்படியொரு துயரம்?!' -58 கிராமக் கால்வாய் உடைப்பால் கலங்கும் விவசாயிகள்

உடைப்பு
உடைப்பு

தண்ணீருக்கு ஒரு போராட்டம், கால்வாய் சரிசெய்ய ஒரு போராட்டம் என எங்கள் வாழ்க்கை போராட்டமாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது எனக் கலங்குகின்றனர் விவசாயிகள்.

வைகை அணையிலிருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில், 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வைகை அணையில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகு
வைகை அணையில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய் மற்றும் நீர் நிலைகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டமே 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம். 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டம், 110 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்லும்படி விரிவுபடுத்தப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி கிராமங்களுக்குக் கால்வாய் கட்டப்பட்டது.

சுமார் 18 வருடங்களுக்கு மேலாக நீடித்த கட்டுமானப் பணியானது, கடந்த ஆண்டு நிறைவடைந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது.

Vikatan
மலர் தூவி தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
மலர் தூவி தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்

இந்த நிலையில், இந்த வருடம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தினர். நேற்று அதிகாலை 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக 58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகளிடம் பேசியபோது, ``தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருந்தபோதும், வைகை அணை தனது முழுக் கொள்ளளவை எட்ட வேண்டும். ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிறைந்து தண்ணீர் கடலுக்குச் செல்ல வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தால்தான் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நிரந்தரக் கோரிக்கை” என்றனர்.

58 கிராம பாசன விவசாயிகள்
58 கிராம பாசன விவசாயிகள்

ஆனால், விவசாயிகளில் மகிழ்ச்சி நேற்று ஒருநாள் மட்டுமே நீடித்தது. ஆண்டிபட்டி அருகே உள்ள புதூர் பகுதியில் இன்று அதிகாலை 58 பாசனக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவே உடனே வைகை அணையிலிருந்து விநாடிக்கு100 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், கால்வாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய 58 கிராம பாசனக் கால்வாய் விவசாயி ஒருவர், ``கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடைபெறும்போது இதே ஆண்டிபட்டி புதூர் அருகேதான் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. அப்பகுதி மண் லேசானது. எளிதாக கரைந்து கால்வாயில் உடைப்பு ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் மட்டும் சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம்.

கால்வாய் உடைப்பு
கால்வாய் உடைப்பு

ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. உசிலம்பட்டி மக்கள் என்ன பாவம் செய்தவர்களா.. ஒரு கால்வாயை சரிசெய்து தண்ணீர்விடக் கூட முடியவில்லையா.. தண்ணீருக்கு ஒரு போராட்டம், கால்வாய் சரிசெய்ய ஒரு போராட்டம் என எங்கள் வாழ்க்கை போராட்டமாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது" என்றார் கொதிப்புடன்.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``அதிகாலை தகவல் கிடைத்தது. 7 மணிக்கு வைகை அணையின் 58 கிராம பாசனக் கால்வாய் மதகு மூடப்பட்டது. கால்வாய் சீர்செய்யும் பணி நடந்துவருகிறது. பணி முடிந்ததும், மீண்டும் தண்ணீர் திறக்கப்படும்" என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு