Published:Updated:

``எல்லாம் முறைப்படிதான் நடக்கின்றன’’ - பாலாறு விவகாரத்தில் நீர்வளத்துறை அதிகாரியின் ஒரே பதில்!

பாலாறு

வேலூர் பாலாற்றில் அனுமதிக்கப்பட்ட பரப்பளவைத் தாண்டி மணல் அள்ளப்படுவது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையிலும், ‘எல்லாம் முறைப்படிதான் நடக்கின்றன’ என்கிறார் நீர்வளத்துறையின் கோட்ட செயற்பொறியாளர் லெனின் ஃபிரான்சிஸ்.

``எல்லாம் முறைப்படிதான் நடக்கின்றன’’ - பாலாறு விவகாரத்தில் நீர்வளத்துறை அதிகாரியின் ஒரே பதில்!

வேலூர் பாலாற்றில் அனுமதிக்கப்பட்ட பரப்பளவைத் தாண்டி மணல் அள்ளப்படுவது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையிலும், ‘எல்லாம் முறைப்படிதான் நடக்கின்றன’ என்கிறார் நீர்வளத்துறையின் கோட்ட செயற்பொறியாளர் லெனின் ஃபிரான்சிஸ்.

Published:Updated:
பாலாறு

வேலூர் பெருமுகைப் பகுதியை ஒட்டிய பாலாற்றுப் படுகையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 4-ம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்த குவாரியிலிருந்து நாளொன்றுக்கு பல லட்சம் மதிப்பிலான மணல், நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பப்படுவதோடு, மேலிடம் வரை கமிஷன் பாய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் வேலூர் மணல் குவாரி தொடர்பாக, சூழலியல் ஆர்வலர் ஒருவர் ஆர்.டி.ஐ மூலம் சமீபத்தில் நீர்வளத்துறையின் விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கான பதில்களை நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் தெரிவித்திருக்கிறார்.

பாலாற்றில் மணல் அள்ளப்படும் காட்சி
பாலாற்றில் மணல் அள்ளப்படும் காட்சி

அதில், ‘‘விழுப்புரம் கோட்ட நீர்வளத்துறை மற்றும் சுரங்கவியல் கண்காணிப்பின்கீழ் இந்த ஒரே மணல் குவாரி மட்டுமே இயக்கப்படுகிறது. ‘பொக்லைன் டெண்டர்’ ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை. தினக்கூலி அடிப்படையில் தேவைக்கேற்ற பணியாளர்கள் நியமித்துக்கொள்ளப்படுகிறார்கள். இணையத்தில் பதிவுசெய்த வாகனங்களுக்கு, வரிசைப்படி மணல் விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக யாருக்கும் பணம் செலுத்தத் தேவையில்லை. ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மனித சக்தி மூலம் மணல் எடுக்கப்படுகிறது. அதற்குக் கீழே எடுக்கப்படுவதில்லை’’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆர்.டி.ஐ-யில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில பதில்கள் ``அப்பட்டமான பொய்’’ என்று கடுகடுக்கும் சூழலியல் ஆர்வலர்கள், ``ஆற்றுக்குள் பொக்லைன் மூலமாகத்தான் மணல் அள்ளப்படுகிறது. பல அடி ஆழத்துக்கு மணலை எடுத்துவிட்டனர். தற்போது, நூற்றுக்கணக்கான பனைமரங்களைச் சாய்த்து 5 கிலோ மீட்டர் அளவுக்கு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்’’ என்றபடியே, ஆற்றுக்குள் பல பொக்லைன்கள் மணல் அள்ளும் டிரோன் வீடியோவை நமக்கும் அனுப்பியிருந்தனர். கடந்த 8-ம் தேதி, விகடனின் ‘தி இம்பர்ஃபெக்ட் ஷோ’வில் வெளியிடப்பட்ட அந்தக் காட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வேலூர் பாலாற்றின் தற்போதைய நிலை
வேலூர் பாலாற்றின் தற்போதைய நிலை

இதையடுத்து, மணல் குவாரியின் கண்காணிப்பாளரான நீர்வளத்துறையின் விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் லெனின் ஃபிரான்சிஸிடம் விளக்கம் கேட்டோம். ‘‘எல்லாம் முறைப்படிதான் நடக்கின்றன. 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் ஆய்வுசெய்கிறேன்’’ என்றவரிடம்,

‘‘கடைசியாக எப்போது ஆய்வுக்கு வந்தீர்கள், ஆற்றுக்குள் பொக்லைன் இருப்பது ஏன்... ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ளப்படுகிறது என்று கூறப்பட்ட நிலையில் ஒரு வளர்ந்த பனைமரத்தின் உயரத்துக்கு பள்ளம் எடுக்கப்பட்டிருக்கிறது; அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியிருக்கின்றன; ஏகப்பட்ட சர்ச்சைகள் உங்கள்மீது,ம் வேலூர் பாலாற்றை ஆக்கிரமித்திருக்கும் நபர்கள்மீதும் எழுகின்றன; அது பற்றி துறைரீதியாக உரிய விளக்கம் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?’’ எனக் கேள்வி எழுப்பினோம். கேள்விகளை உள்வாங்கிக்கொண்டவர், ‘‘எல்லாம் முறைப்படிதான் நடக்கின்றன’’ என்று அதே பதிலை மீண்டும் தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

முதல்வரின் பார்வை, வேலூர் பாலாற்றின் மீது படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!