வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வல்லம் ஊராட்சியில் இயங்கிவருகிறது கீழ்வல்லம் அரசினர் நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தச் சூழலில், பள்ளி வளாகத்துக்குள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மாணவர்களை மிகுந்த அச்சமடையச் செய்திருக்கிறது.
60,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 1990-ல் கட்டப்பட்டு, 2012-2013-ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இருப்பினும் இதன் தூண்கள் சிதிலமடைந்து பல்வேறு இடங்களில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் மாணவர்கள் இந்த நீர்த்தேக்கத் தொட்டியை மிகுந்த அச்சத்துடனே கடந்து சென்றுவருகின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் இருக்கும் இந்த நீர்த்தேக்கத் தொட்டியை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், அரசினர் நடுநிலைப்பள்ளி என மூன்றும் ஒரே வளாகத்துக்குள் செயல்படுவதால் உடனடியாக ஊரக உள்ளாட்சித்துறை இதில் தலையிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
