Published:Updated:

``பணமில்லாததால் சிலையை ரயிலில் கொண்டு வந்தோம்!'' - பொன்.மாணிக்கவேல்

எம்.குமரேசன்
வி.ஶ்ரீனிவாசுலு

ஆஸ்திரேலியாவில் `டான்ஸிங் சிவா’ என்ற பெயரில் நடராஜர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 pon. manickavel with statue
pon. manickavel with statue

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலையைப் பணமில்லாத காரணத்தால் விமானத்தில் கொண்டு வராமல், டெல்லியிலிருந்து ரயிலில் கொண்டு வந்ததாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. 1982-ம் ஆண்டு இந்தக் கோயிலிலிருந்து நடராஜர் சிலை காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டது. பின்னர், இந்தச் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட, இந்தச் சிலை விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயிலில் இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டது.

``பணமில்லாததால் சிலையை ரயிலில் கொண்டு வந்தோம்!'' - பொன்.மாணிக்கவேல்

சிலை மீட்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜ.ஜி பொன். மாணிக்கவேல் கூறுகையில், ``சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். எங்கள் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. தேவையான நேரத்தில் தேவையான செய்திகளை ஆன்மிகவாதிகளிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் குறை கூற விரும்பவில்லை. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் தமிழக அரசுக்கும் தகவல் பரிமாற்றத்தில்தான் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாம் கடவுளாக வணங்கும் சிலைகள் வெளிநாடுகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் புரிந்து கொண்டு சிலைகளை மீட்க உதவ வேண்டும். எனது சொந்த ஓய்வூதியத்தில் பணி செய்கிறேன். இதனால், அகங்காரம் கொள்ளவில்லை. சிலையை விமானத்தில் கொண்டு வர, பணமில்லாத காரணத்தால் ரயிலில் சென்னை கொண்டு வந்தோம். இந்தச் சிலையுடன் அழகிய கலைநயமிக்க தூண்களும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அவற்றையும் மீட்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

நடராஜர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அடிலெய்ட் ஆர்ட் கேலரி (Art Gallery of South Australia) ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பழைமையான மியூசியம் ஆகும். 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட , இந்த மியூசியத்தில் 45,000 கலைநயமிக்க பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மியூசியம் இது. இங்கு, 'டான்ஸிங் சிவா' என்ற பெயரில் இந்த நடராஜர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அடிலெய்ட் ஆர்ட் கேலரி
அடிலெய்ட் ஆர்ட் கேலரி

500 ஆண்டுகள் பழைமையான இந்தச் சிலை 1970-ம் ஆண்டு காணாமல் போனது. 1982-ம் ஆண்டுதான் , வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிலை அடிலெய்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட 100 கிலோ எடை கொண்ட சிலையை அடிலெய்ட் ஆர்ட் கேலரியின் புரவலரான டயனா ராம்சே என்பவர் 4,36,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு டயானா ராம்சே மறைந்துவிட்டார்.