Published:Updated:

`இப்படியொரு தொற்றுநோயை நாம் இதுவரை சந்திக்கவில்லை!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #corona

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வல்லரசு நாடுகளிலேயே இதுவரை இந்தத் தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனாவுக்கு தற்போதைய ஒரே மருந்து தனிமைப்படுத்துதல் மட்டுமே.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் பலர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

அவர் பேசுகையில், ``தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஈரோட்டில் பத்து பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 121 நபர்களுக்கான பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் வர உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும்தான் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார்.

`பத்து நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்!’ -சமூகப் பரவலைத் தடுக்க கேரளாவின் ரேபிட் டெஸ்ட் டெக்னிக்

இந்த வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நோய்த் தடுப்புப்பணி விரைவாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு ஒருங்கிணைப்பு, மாநில மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு, செய்தி ஒருங்கிணைப்பு, தனியார் மருத்துவமனை கண்காணிப்பு, போக்குவரத்து கண்காணிப்பு, நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிப்பு, கிருமி நாசினி மருந்து தெளித்தல், மருத்துவ உபகரணங்கள், உணவு, மருத்துவமனை கட்டமைப்பு, தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் குழுக்களுக்கு உதவுதல், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு உதவி செய்தல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்டவற்றை இந்த குழுக்கள் வழிநடத்தும்.

சிகிச்சைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் தமிழக அரசிடம் கையிருப்பாக உள்ளன. எனினும், முன்னெச்சரிக்கையாக 1.5 கோடி முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் `என் 95' மாஸ்க் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இவற்றைத்தவிர தேவையான சில மருத்துவ உபகரணங்களும் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் போன்ற ஒரு தொற்று நோயை நாம் இதுவரை சந்திக்கவில்லை. எனக்குத் தெரிந்து வரலாற்றில் இப்போதுதான் இப்படியான சூழலை எதிர்கொள்கிறோம். மக்களுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும். வல்லரசு நாடுகளிலேயே இதுவரை இந்த தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனாவுக்கு தற்போதைய ஒரே மருந்து தனிமைப்படுத்துதல் மட்டுமே. வைரஸ் குறித்த அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைகளை மக்கள் உடனே அணுக வேண்டும். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க தொடர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு உணவு, மருத்துவம், தங்குமிடம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களுக்கு அரசு எல்லா வசதிகளையும் செய்து வருகிறது. வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உதவி செய்யும். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.

இறப்பு மற்றும் திருமணம் ஆகிய அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அந்தந்த பகுதியின் வட்டாட்சியரிடமே அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். வீட்டு வாடகை குறித்த பிரச்னை நாடு தழுவிய பிரச்னையாக இருக்கிறது. எனவே, இதுகுறித்து பரிசீலனை செய்து முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

`இது கிராமத்தின் பெயர், எங்களைப் புறக்கணிக்கலாமா?!’ - கொரோனா என்ற பெயரால் தவிக்கும் கோரவுனா மக்கள்
அடுத்த கட்டுரைக்கு