Published:Updated:

புதுக்கோட்டை: ஒரு மிஷின் போதும்னு இருந்தோம்... 4 கிடைச்சிருக்கு! - உதவியால் நெகிழ்ந்த குடும்பம்

உதவியுடன் குடும்பம்
உதவியுடன் குடும்பம்

பெரிய நாயகியின் நீண்ட நாள் ஆசையை தற்போது விகடன் வாசகர்கள் நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றனர். இந்தக் கட்டுரையைப் படித்து நெக்குருகிப்போன விகடன் வாசகர்கள் நான்கு தையல் மெஷின்களை வாங்கிக்கொடுத்து பெரியநாயகியைத் திக்குமுக்காடச் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே, அழகம்பாள்புரத்தில் வசிக்கும் ஆறுமுகத்துக்குப் பிறந்த மூன்று மகன்கள், ஒரு மகள் என நான்கு பேரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்தி எனப் பெரிய கூட்டுக்குடும்பம். ஆறுமுகம் கட்டமைத்த கூட்டுக்குடும்பத்தை ஆறுமுகத்தின் மூத்த மருமகள் பெரியநாயகியும், பெரியநாயகியின் மாற்றுத்திறனாளி மருமகன் என இருவரும் சேர்ந்து காப்பாற்றிவருகின்றனர். கொரோனா ஊரடங்கால் வேலையின்றி சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுவந்த இந்தக் குடும்பத்துக்கு தற்போது விகடன் வாசகர்கள் கைகொடுத்திருக்கின்றனர்.

குடும்பத்தினருடன் ஆறுமுகம்
குடும்பத்தினருடன் ஆறுமுகம்

"மொதல்ல நான் கூலி வேலை செஞ்சு அதில் கிடைக்கிற வருமானத்தைவெச்சு, குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் மாப்பிள்ளை தையல் வேலை பார்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தையும் எனக்கு உதவியா குடும்பத்துக்குக் கொடுப்பாரு. ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருந்தோம். இப்போ, ஊரடங்கால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை. மாப்பிள்ளையும் கூலிக்குத்தான் தையல் வேலை பார்க்கிறாரு. ஸ்கூல் ஆர்டர் இல்லாததால இப்போ அவருக்கு வேலை இல்லை. சொந்தமா அவர்கிட்ட மிஷின் இல்லை. இருந்தால், சின்னச் சின்ன வேலைகளையாவது பார்க்கலாம்.

சொந்தமா மாப்பிள்ளைக்கு ஒரு தையல் மிஷின் வாங்கிக் கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, இதுவரைக்கும் வாங்கிக் கொடுக்க முடியலைன்னு பெரியநாயகி கூறியிருந்தார். " `தினமும் 10 பேர் சாப்பிடணும்!' - குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் பெரியநாயகி" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் விரிவாகக் கட்டுரை எழுதியிருந்தோம். இந்த நிலையில், பெரியநாயகியின் நீண்டநாள் ஆசையை தற்போது விகடன் வாசகர்கள் நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றனர். இந்தக் கட்டுரையைப் படித்து நெக்குருகிப்போன விகடன் வாசகர்கள் நான்கு தையல் மெஷின்களை வாங்கிக்கொடுத்து பெரியநாயகியைத் திக்குமுக்காடச் செய்துள்ளனர். பெரியநாயகியின் மருமகன் தற்போது தையல் மெஷின்களை வைத்து ஆர்டர் எடுத்து சொந்தமாக வீட்டிலேயே தையல் வேலை பார்க்கிறார்.

உதவி
உதவி

பெரிய நாயகியிடம் பேசினோம், "வீட்டுக்காரரு, அவங்க தம்பிங்கனு மூணு பேருக்குமே கண்ணு தெரியாது. அவங்க தம்பிங்க `அண்ணி, அண்ணி...’னு சொல்லி உசுரா இருப்பாங்க. அதோடு, மூணு பேரும் சொந்த மாமா மகன்கள். நம்ம தானே மூணு பேரையும் பார்த்துக்கணும். அவங்களால இப்போ வேலை செய்ய முடியாது. நானும் வேலை செய்யச் சொல்றதில்லை.

என்னோட மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, வீட்டோடவெச்சிக்கிட்டேன். மகளோட வீட்டுக்காரரு மாற்றுத்திறனாளி. ஆனாலும் ரொம்பத் தங்கமான மனசு அவருக்கு. அவர் சம்பாதிக்கும் பணத்தை எங்க குடும்பத்துக்காக கொடுத்துடுவாரு. தையல் வேலையும் கூலி வேலை மாதிரிதான் பார்க்கிறார்.

சீட்டு எடுத்தாவது அவருக்கு ஒரு தையல் மிஷின் வாங்கிக்கொடுக்கலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இவ்வளவு தையல் மிஷின் வரும்னு நான் நெனச்சுக்கூட பார்க்கலை. மொதல்ல `பாரதப் பறவைகள்’ அறக்கட்டளையிலிருந்து வினோத்குமார் சார் மோட்டாரோட தையல் மிஷின் வாங்கிக் கொடுத்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாரு. அதைவெச்சு பக்கத்துல கிடைக்கிற தையல் வேலைகளை வாங்கி மாப்பிள்ளை தைக்க ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கலெல்லாம் வந்து மோட்டாரோட ஒரு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்தாங்க. கூடவே ரெண்டு மூணு மாசத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து சாப்பாட்டுக் கவலையைப் போக்கிட்டாங்க. `சிகரம் முன்னாள் படைவீரர்கள் சுய உதவிக்குழு அமைப்பு’ன்னு சொல்லிட்டு ஒரு அமைப்பு வந்து அவங்க பங்குக்கு ஒரு தையல் மிஷின் கொடுத்தாங்க.

தையல் மெஷின் உதவி
தையல் மெஷின் உதவி

அதுக்கப்புறம், அமெரிக்காவுல இருந்து பெயர் கூற விரும்பாத சார் ஒருத்தரு, புதுக்கோட்டையிலுள்ள அவங்க சொந்தக்காரங்க மூலமாக தானியங்கி தையல் மிஷின் ஒண்ணை வாங்கிக் கொடுத்திருக்காரு. இவங்க எல்லாரும் செஞ்ச உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். விகடன் மூலம்தான் இந்த உதவிகள் கிடைச்சிருக்கு. விகடனுக்கும் உதவியவர்களுக்கும் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இப்போ, வீட்டுலேயே தையல் கடைவெச்சு, மகளும் மாப்பிள்ளையும் ஆர்டர் எடுத்து தைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கூடிய சீக்கிரம் குடும்பத்தை உயர்த்திடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. இந்த உதவி போதும்... இதைவெச்சு பிழைச்சிடுவோம். உழைச்சு, எங்களை மாதிரி இருக்குற குடும்பத்துக்கு உதவணும்" என்றார் வைராக்கியம் தொனிக்கும் குரலில்.

அடுத்த கட்டுரைக்கு