Published:Updated:

`மண் மலடாகிவிடும்; ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் தீர்மானம்!' - கிராம சபையில் அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஹைட்ரோகார்பனுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 71 வது குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டம், அரசு நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் இப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கோரிக்கை வைத்தனர். அப்போது, அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களான ஐயப்பன், நரேஷ், சக்தி ஆகியோர் கிராமசபைக் கூட்டத்திற்கு வந்ததுடன் ஊராட்சிமன்றத் தலைவர் உதயகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கூட்டத்தின் முன்பு வாசித்த பின்பு கொடுத்தனர். அதில், `டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோகார்பன் திட்டம் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் பூதம்!

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து பாலைவனமாக மாறிவிடும். விளை நிலங்களும், விவசாயிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். மண்ணை மலடாக்கும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சுழல்துறையின் அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டமும் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டம் நம் பகுதியிலும் செயல்படுத்த இருப்பதாக நாங்கள் அறிகிறோம். மண்ணை மலடாக்கி பூமிக்கடியில் இருக்கும் வளத்தை எடுப்பதற்கு நமது கிராமம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று எழுதப்பட்டிருந்தது.

கிராமசபைக் கூட்டம்
கிராமசபைக் கூட்டம்

கிராமசபையில், மாணவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுடன் மண்ணைக் காப்பதற்காகக் களமிறங்கிய மாணவர்களின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது எனக் கூறி அவர்களைப் பாராட்டியதுடன் தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

கிராமசபைக் கூட்டத்திற்கு வந்ததுடன், ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான கோரிக்கை மனுவையும் கொடுத்த மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியும் கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்கு, டெல்டா மாவட்டத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களின் பல ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு