Published:Updated:

`எங்கள் டெபாசிட்டை எடுத்துக் கொள்கிறோம்!' -சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களால் அதிர்ச்சியடைந்த வங்கி

சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்
சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்

ஒருசிலர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை மட்டும் வங்கிக்கணக்கில் வைத்துவிட்டு டெபாசிட் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மணமேல்குடி அருகே அம்மாப்பட்டினத்தில் 25வது நாளாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தினமும் நூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிஏஏக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கறம்பக்குடியில் 20-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை எடுத்துக் கணக்கை முடித்துக்கொள்ளத் திட்டமிட்டனர்.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்
சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்

அதன்படி, வங்கிக்கணக்குப் புத்தகங்களுடன் போராட்டக்களத்துக்கு வந்தனர். கறம்பக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளுக்குப் பேரணி சென்ற 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், வங்கி முன்பு குவிந்தனர். இதனால், வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, பெரும்பாலானோர், "வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் பணத்தை முழுமையாக எடுக்க வந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

`ஒரு அங்குலம்கூட பின்வாங்கப் போவதில்லை!' - குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அமித் ஷா #CAA

இதனிடையே, ஒருசிலர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை மட்டும் வங்கிக்கணக்கில் வைத்துவிட்டு டெபாசிட் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஒரே நாளில் இங்குள்ள வங்கியிலிருந்து மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி டெபாசிட் பணத்தை எடுக்க வந்தவர்களிடம் கேட்டபோது, ``சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்
சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்

ஆனால், தமிழக அரசு போராட்டத்துக்குச் செவிசாய்க்க மறுக்கிறது. இதுவரையிலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரமடையும்" என்றனர்.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அவர்கள் டெபாசிட் செய்த பணத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி கருத்துக்கூற முடியாது. ஆனாலும், ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால், இதுபற்றி அவர்களிடம் பேசினோம். மேலும், உயர் அதிகாரிகளிடமும் இதுகுறித்த தகவலைக் கொண்டு சென்றுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு