Published:Updated:

`கடையை எடுக்கச் சொல்லிட்டாங்க.. கஷ்டப்படறோம்!'- கலங்கும் 90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை உரிமையாளர்

90'ஸ் கிட்ஸ் கடை
90'ஸ் கிட்ஸ் கடை

பேப்பர் அப்பளம், ஜவ்வுமிட்டாய், தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், கடலை மிட்டாய்... என இன்னமும் 90களைத் தேடி சென்னையில் அலைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

'96' படம் ஹிட்டானதில் 90 'கிட்ஸ்' எல்லாம் தனி உற்சாகத்தோடு வலம் வர ஆரம்பித்துவிட்டனர். பாடல்கள், உடைகள், கிண்டல் செய்யும் வார்த்தைகள் என அவர்களின் உலகமே தனி. அதிலும் முக்கியமாக ஸ்நாக்ஸ் என்றாலே, டிக்-டிக், பேப்பர் அப்பளம், ஜவ்வுமிட்டாய், தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், கடலை மிட்டாய்... என இன்னமும் 90களைத் தேடி சென்னையில் அலைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சரி, அப்படி அலைபவர்களுக்கு அதெல்லாம் கிடைக்கிறதா? அதுக்காவே உருவாக்கப்பட்டது போல ஒரு கடை தி.நகரில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுச் சென்றால் ஏமாற்றம்தான். சாலையோரத்தில் இருந்த கடையை காவல்துறை அப்புறப்படுத்திவிட்டதாம். அக்கடையை நடத்திய ராஜகோபால் என்பவரை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம். பல்லாவரத்தில் இருந்த அவரின் வீட்டில் மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருந்தன.

90'ஸ் கிட்ஸ் கடை
90'ஸ் கிட்ஸ் கடை

"எங்களுக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். அங்க எங்க தொழில் ஸ்நாக்ஸ் வகைகள் தயார் செஞ்சு விற்பதுதான். முறுக்கு போன்ற பாரம்பர்ய தின்பண்டங்களை வித்துட்டு இருந்தோம். குடும்பச் சூழ்நிலைகளால் சென்னைக்கு வந்தோம். நானும் என் மனைவி மற்றும் ரெண்டு புள்ளைங்களோட சென்னைக்கு வந்தப்ப, என்ன தொழில் செஞ்சு பொழைக்கிறதுனு தெரியல. சரி, எனக்குத் தெரிஞ்ச சேலம் தட்டு முறுக்க தயார் செஞ்சு வியாபாரம் பண்ணலாம்னு முடிவு செஞ்சேன்.

சேலத்துல ரொம்பவே ஸ்பெஷல் இந்தத் தட்டு முறுக்கு, வீட்டிலேயே முறுக்கு சுட்டு, வண்டியில எடுத்துட்டு போய் வித்திட்டு வந்தேன். ஆனா, எதிர்பார்த்த அளவு வியாபாரம் ஆகல. ஏன்னா, இங்கே எல்லாரும் பீட்சா, பர்கர்னு வேற மாதிரியான தின்பண்டங்களுக்கு மாறியிட்டாங்க. சுகாதாரமா, சத்துள்ள முறுக்கை வீட்டில் செய்து வாரோம்னு சொல்லிக் கொடுப்பேன். முறுக்கு இரண்டு வகை சட்னியும் சேர்த்து கொடுக்கும்போது, பல பேர் வந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க. சாப்பிட்டவங்க, சுவை நல்லா இருக்குனு சொல்வாங்க. ஆனாலும் லாபகரமா அது இல்ல. சரி, வேற என்ன செய்யலாம்னு யோசிப்பதான், இந்த மிட்டாய் கடை ஐடியா தோணுச்சு.

`கடையை எடுக்கச் சொல்லிட்டாங்க.. கஷ்டப்படறோம்!'- கலங்கும் 90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை உரிமையாளர்

தி.நகர்ல ரோட்டோரத்தில்தான் கடை போட்டோம். கோயம்புத்தூரிலும் இதே மாதிரியான வியாபாரம் செய்திருந்ததால சுலபமா இருந்துச்சு. பல ஊர்களிலிருந்து வெவ்வேறு விதமான மிட்டாய்களை வர வழைச்சோம். ஆரம்பத்துல பெரிய அளவு வரவேற்பு இல்லன்னாலும், அப்புறம் சூடு பிடிச்சுடுச்சு. நிறைய பேர் தேடி வந்தாங்க.

90'ஸ் ல கிடைக்கிற மிட்டாய்கள் இங்கே கிடைக்குதுனு எல்லோரும் சொன்னதால, '90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை'னு பெயர் வைச்சோம். இதனால, நிறைய பேரு வந்து மிட்டாய் வாங்கினாங்க. அதனால, நடந்துபோறவங்களுக்கு இடைஞ்சலா இருக்குனு போலீஸ் கடையை எடுக்கச் சொல்லிடுச்சு. வேற இடத்துல மாத்திப் போட்டாலும் விட மாட்றாங்க. இப்போ வீட்டுலேயே வெச்சி விக்கிறோம். வியாபாரம் கொஞ்சம்கூட இல்ல. மிட்டாய்களை ரொம்ப நாளும் வெச்சிருக்க முடியாது. சில பேரு வாட்ஸ்அப் மூலமா கேட்கிறாங்க. அவங்கள மாதிரி உள்ளவங்களுக்கு அளவா செய்யறோம்" என்றார் ராஜ கோபால்.

90'ஸ் கிட்ஸ் விருப்பமாக இருந்த ஒன்றும் எளிதில் வாங்க முடியாத நிலைக்குப் போய்விட்டது.

அடுத்த கட்டுரைக்கு