Published:Updated:

சாத்தான்குளம்: `நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்' -நம்பிக்கையில் ஜெயராஜ் குடும்பம்

உயிரிழந்த பென்னிக்ஸ் ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ் ஜெயராஜ்

நீதிமன்றம் தங்களுக்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கை, ஜெயராஜின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ’இதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணைக்குச் சாத்தான்குளம் காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

சாத்தான்குளம்: `அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தால்...’ -பிப்ரவரியில் நடந்தது என்ன?

சாத்தான்குளம் காவலர் மகாராஜன் என்பவர் அநாகரிகமான வார்த்தைகளாலும் ஒருமையிலும் மாஜிஸ்திரேட்டிடம் பேசியதாகப் புகார் எழுந்தது. அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், காவல் நிலையத்தின் ஒட்டுமொத்தக் காவலர்களும் மாற்றப்பட்டு புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 

ஏ.டி.எஸ்.பி குமார் மற்றும் டி.எஸ்.பி பிரதாபன்
ஏ.டி.எஸ்.பி குமார் மற்றும் டி.எஸ்.பி பிரதாபன்

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி ஏ.எஸ்.பி-யான குமார், டி.எஸ்.பி-யான பிரதாபன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன், தூத்துக்குடி எஸ்.பி அருண்பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி-யாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 27 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய இன்ஸ்பெக்டராக பெர்னாட் சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார். 

காவல் நிலையம்
காவல் நிலையம்

சாத்தான்குளம் சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, உடனே சி.பி.சி.ஐ.டி-யின் நெல்லை டி.எஸ்.பி-யான அனில்குமார் விசாரணையைத் தொடங்கச் சொல்லியிருக்கிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியத்துவமானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சாத்தான்குளம்: `விடிய விடிய அடி;  லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே, பிணவறையில் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்யும்போது காயங்களை முழுமையாக ஆய்வு செய்து அதன் ஆழம், நீளம் உள்ளிட்டவற்றையும் முறையாகப் பதிவு செய்ததில் உறவினர்கள் திருப்தியடைந்திருந்தனர்.  

உயிரிழந்தோரின் குடும்பத்தினர்
உயிரிழந்தோரின் குடும்பத்தினர்

தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நிம்மதியைத் தந்துள்ளது. அப்பாவிகளான இருவரையும் எந்தக் காரணமும் இல்லாமல் அடித்தே கொலை செய்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு