Published:Updated:

`234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்துவோம்!'- வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

வண்ணாரப்பேட்டை  போலீஸ் நிலையம்
வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம்

234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்தவுள்ளோம் என்று சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்குக் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கடிதம் ஒன்று வந்தது. அதில், ```அல் ஹக்' என்ற பெயரில் ஒரு இயக்கம் செயல்படுகிறது. இந்த இயக்கத்தில் 250 பேர் உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது, அதை மீறி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து 234-எம்.எல்.ஏ-க்களைக் கடத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

இந்தக் கடிதம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸார், உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். ஏற்கெனவே வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீஸார் தடியடி நடத்தினர். அதனால் போலீஸாரைக் கண்டித்து போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிரான போராட்டம் நடந்துவருகிறது. இந்தச் சூழலில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு எம்.எல்.ஏ-க்களைக் கடத்துவோம் என்று கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவியிடம் பேச பல தடவை முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியபோது, ``அந்தக் கடிதத்தில் எந்தவித தகவலும் இல்லை. மொட்டையாக 234 எம்.எல்.ஏ-க்களைக் கடத்துவோம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதம் தொடர்பான விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

போலீஸ்
போலீஸ்

வண்ணாரப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``காவல் நிலையத்துக்கு வந்த கடிதத்தில் அனுப்புநர் முகவரி இல்லை. இருப்பினும் அந்த மொட்டைக் கடிதத்தில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் 234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. கடிதத்தில் குறிப்பிட்ட இயக்கம், உண்மையிலேயே செயல்படுகிறதா என்றும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு