Published:Updated:

``இனி இலங்கைக்குச் செல்ல மாட்டோம்... தமிழகத்தில் ஒரு ஓரமாக வாழ்ந்துகொள்கிறோம்!" - அகதிகள் கண்ணீர்

இலங்கை அகதிகள்

இலங்கையிலிருந்து கைக்குழந்தையுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்தனர். போலீஸார் அவர்களை மீட்டு மண்டபம் முகாமில் தங்கவைத்தனர்.

``இனி இலங்கைக்குச் செல்ல மாட்டோம்... தமிழகத்தில் ஒரு ஓரமாக வாழ்ந்துகொள்கிறோம்!" - அகதிகள் கண்ணீர்

இலங்கையிலிருந்து கைக்குழந்தையுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்தனர். போலீஸார் அவர்களை மீட்டு மண்டபம் முகாமில் தங்கவைத்தனர்.

Published:Updated:
இலங்கை அகதிகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் பொதுமக்கள் வேலையின்றி, விலைவாசி உயர்வு காரணமாக பசியும் பட்டினியுமாக வாழ்ந்துவருகின்றனர். அதன் காரணமாக இலங்கை அரசைக் கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அண்மையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்தபடி இலங்கையில் வாழ்ந்துவருகின்றனர்.

ஏராளமான பொதுமக்கள் இனி இலங்கையில் இருந்தால் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குக் கடல்வழியாக அகதிகளாக தஞ்சம்புகத் தொடங்கிவிட்டனர். இலங்கையில் வாழ வழியின்றி இதுவரை தமிழகத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் தங்கள் குழந்தைகளுடன் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகள்
அகதிகள்

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இரண்டு படகுகளில் இலங்கையிலிருந்து கைக்குழந்தையுடன், 13 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கியிருப்பதாக க்யூ பிராஞ்ச் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடலோரக் காவல்படையினர் உதவியுடன் அவர்களை மீட்ட மண்டபம் கடலோர காவல்குழு, காவல் நிலையத்துக்கு அவர்களை அழைத்து வந்தது. போலீஸார் மழையில் நனைந்தபடி கடலில் உயிருக்கு ஆபத்தான முறையில் வந்தவர்களுக்கு உணவு கொடுத்து, காவல் நிலையத்திலேயே தங்கவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல் நிலையத்தில் அகதிகள்
காவல் நிலையத்தில் அகதிகள்

தொடர்ந்து இன்று காலை க்யூ பிராஞ்ச் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்று குடும்பத்தினர் எனத் தெரியவந்தது. ``எங்கள் நாடு அழிந்துவிட்டது. இலங்கையை தங்கள் சுயநலத்துக்காக ஆளும் அரசு அழித்துவிட்டது. மனிதர்கள் வாழ்வதற்கான தகுதியை எங்கள் நாடு இழந்துவிட்டது. நாங்கள் எங்களுடைய வீடு, நகை, வாகனம் என அனைத்தையும் விற்று ரூ.5 லட்சம் கொடுத்து படகில் வந்தோம்.

இடையில் இலங்கை கடற்படையினர் எங்களைப் பிடித்து மீண்டும் இலங்கைக்குக் கொண்டு சென்றிருந்தால் வீடு, வாசலின்றி நடுத்தெருவில் நின்றிருப்போம். கடவுள்தான் எங்களைக் காப்பாற்றி தனுஷ்கோடிக்கு கொண்டுவந்திருக்கிறார்... இனி எங்கள் நாட்டுக்குப் போக மாட்டோம். தமிழ்நாட்டில் ஒரு ஒரமாக வாழ்ந்துவிட்டுப் போகிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்!" என பெண் அகதி ஒருவர் கண்ணில் நீர்பெருக போலீஸாரிடம் கைகூப்பி மன்றாடியது சோகத்தை ஏற்படுத்தியது.

அவர்களிடம் விசாரணை முடிந்ததையடுத்து போலீஸார் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர். இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, 24 மணி நேரமும் கடலோரக் காவல்படை, மரைன் போலீஸார் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism