Published:Updated:

`சேலைகளை அடுக்கிவெச்சு அழகு பார்க்கவா; தறிகள் இயக்கத்தை நிறுத்திட்டோம்!’ -வேதனையில் நெசவாளர்கள்

நிறுத்தப்பட்ட விசைத்தறி
நிறுத்தப்பட்ட விசைத்தறி

ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிப்பால் உற்பத்தி செய்த சேலைகளை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. இந்நிலையில் ரூ.60 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளதால் நெசவாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல தொழில்கள் முடங்கிய நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த சில நாள்களாக 50 சதவிகித தொழிலாளர்களுடன் பல்வேறு தொழில்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வெளி மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிப்பால் ஏற்கெனவே நெய்யப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான சேலைகள் தேக்கமடைந்துள்ளன என வேதனையுடன் கூறுகிறார்கள் நெசவாளர்கள்.

உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள்
உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8,000-த்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. நெசவுத் தொழில் சார்ந்த டப்பா, நூல் சுற்றுதல், சாயமிடுதல், சேலை பிரின்ட் செய்தல் என நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களும், 200-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

நார்ப்பட்டு, காட்டன், பாலி காட்டன் ஆகிய ரக சேலைகள் இப்பகுதியில் அதிகமாக நெசவு செய்யப்படுகின்றன. இங்கு நெய்யப்படும் சேலை ரகங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா, மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போதைய ஊரடங்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை விற்பனைக்காக ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக கூறுகிறார்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள்.

நிறுத்தப்பட்ட விசைத்தறி
நிறுத்தப்பட்ட விசைத்தறி

இதனால், தொடர்ந்து விசைத்தறியை இயக்கினாலும் வருமானம் இல்லாமல் எப்படி இயக்குவது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேசினோம். ``அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்களுக்கு பிற மாநிலங்களில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கே ஏற்றுமதி செய்து வந்தோம்.

இதுதவிர சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளர்கள், ஈரோடு மாவட்டத்தில் விற்பனை செய்தோம். தற்போது ஊரடங்கால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான சேலைகள் தேக்கமடைந்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டும் தறிகளை மட்டுமே இயக்குகிறோம். ஏற்றுமதிக்கும் விற்பனைக்கும் எந்த வழியும் இல்லை. இதனால், மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்.

நிறுத்தப்பட்ட விசைத்தறி
நிறுத்தப்பட்ட விசைத்தறி

பெரிய ஜவுளிக்கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதும் எங்களின் விற்பனைக்குப் பின்னடைவாகிறது. சும்மா தறியை மட்டும் இயக்கி சேலைகளை அடுக்கி அடுக்கி வச்சு அழகு பார்த்தால் மட்டும் போதுமா? இதனால், தறிகளை இயக்குறதையே நிறுத்திட்டோம். எங்களுக்கும் பிழைப்பு இருக்கு. எங்களோட வாழ்வாதாரம் நிமிர்ந்திட ஜவுளிகளை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்திட அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு