வாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? #DoubtOfCommonMan

``இவ்வாறு வண்டியை நிறுத்துவது வாகன ஓட்டிகளுக்கும் சரி, போலீஸாருக்கும் சரி; எந்த நொடியிலும் ஆபத்தை விளைவிக்கும்."
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``நாம் வாகனங்களில் செல்லும்போது, சில போலீஸ்காரர்கள் கம்பை குறுக்கே நீட்டி ஆபத்தான நிலையில் வாகனத்தை நிறுத்த முயல்கிறார்கள். இப்படித்தான் வாகனச்சோதனை செய்ய வேண்டுமா, வாகனச் சோதனை செய்ய என்னமாதிரியான விதிமுறைகள் இருக்கின்றன?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசகர் செல்வநாயகம்.

என்னதான் எல்லா ஆவணங்களையும் சரியாக வைத்திருந்தாலும் ``அந்த சிக்னல்ல டிராஃபிக் போலீஸ் நிப்பாங்க, இந்தப் பக்கம் வண்டிய விடு” எனச் சொல்பவர்கள் நம்மில் ஏராளம். வாகனங்களைத் தணிக்கை செய்து போக்குவரத்தை சரி செய்வதைப் பணியாகக் கொண்ட போக்குவரத்து காவலர்களுக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம். அதே சமயம் சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கென சில விதிமுறைகளும் உள்ளன.
வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது எனத் தொடங்கி எந்தெந்த ஆவணங்களைத் தணிக்கை செய்வது, வாகன ஓட்டிகளை எவ்வாறு அணுகுவது, தடுப்பரண்களை எங்கு வைப்பது என்பதுவரை போக்குவரத்து காவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அண்ணாநகர் போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆணையர் சுரேந்திரநாத்திடம் கேட்டோம்.

``பொதுவாக வாகன தணிக்கையில் ஈடுபடும்போது `commercial vehicles' எனப்படும் வணிகசார் வாகனங்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கான பொதுமக்களின் வாகனங்கள் என இருவேறு விதமான வாகனங்களைப் பரிசோதிப்பதுண்டு. இருசக்கர வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார்களை சோதனை செய்யும்போது வாகனத்தின் ஆவணங்களான `RC book' எனப்படும் வாகனம் பதிவு செய்யப்பட்டதற்கான நகல், காப்பீடு சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுனரின் உரிமம் (Driving License) ஆகிவற்றை முக்கியமாகக் கேட்போம். இதுவே வணிகசார் வாகனங்களான லாரி மற்றும் பல்வேறு வகையான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அவ்வண்டியின் Permit-ஐ மிக முக்கியமாகப் பரிசோதிப்போம். இவற்றோடு சேர்த்து மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழையும் (pollution control certificate) நாங்கள் பரிசோதிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் இதை நாங்கள் கேட்பதில்லை" என்றார்.
தணிக்கை செய்யப்போகும் வாகனங்களை நிறுத்துவதிலும் குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார் அவர். ``வாகன தணிக்கையில் ஈடுபடும் எங்களது செக் பாயின்டுகளை நாங்கள் பெரும்பாலும் போக்குவரத்து சிக்னல்கள் அருகிலேயே அமைப்போம். விதிமீறல்கள் ஏதேனும் அரங்கேறினால் எங்களால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைக் கருத்தில்கொண்டே அவ்வாறு அமைக்கிறோம். மேலும், ஏதேனும் ஸ்பெஷல் செக் பாயின்டுகள் அமைத்து சோதனை மேற்கொண்டால் குறிப்பிட்ட தொலைவு முன்பாகவே தடுப்பரண்கள் அமைத்து வாகனங்களின் வேகத்தைக் குறைத்த பின்தான் அவர்களை நிறுத்துவோம். ஏதேனும் எதிர்பாராத சமயங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. டிபார்ட்மென்டில் யாரேனும் ஒருவர் இருவர் இதுபோன்று செயல்களைச் செய்கிறார்கள். ஆனால், இதுபோல செய்வது முற்றிலும் தவறான ஒன்று. இவ்வாறு வண்டியை நிறுத்துவது வாகன ஓட்டிகளுக்கும் சரி, போலீஸாருக்கும் சரி எந்த நொடியிலும் ஆபத்தை விளைவிக்கும்” என்றார்.
`` `Barricade' எனப்படும் தடுப்பரண்களை சாலைகளில் வைப்பதில் எங்களுக்கு எந்தவிதமான விதிகளும் இல்லை. ஒரு இடத்தின் தேவைக்கேற்ப அதாவது, விபத்துப் பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இருக்கலாம் அல்லது அதிக மக்கள் மற்றும் வாகன நெரிசல் கொண்ட பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்வதற்காக இருக்கலாம். அந்தந்தப் பகுதிகளின் போக்குவரத்து அதிகாரிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளின் சீரான போக்குவரத்துக்காக அவர்களின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தே தடுப்பரண்கள் வைக்கப்படும்.”
பரிசோதனையில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் அவர்களை எதிர்த்து குரல் கொடுப்பது போன்ற பல வீடியோக்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பார்த்திருப்போம். அது போன்ற சமயங்களில் போலீஸாரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, ``இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஒரு அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்ற ரீதியில் எங்களால் வழக்கு தொடுக்க முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்வதில்லை.
நாங்கள் தணிக்கை செய்யும் அனைத்து வாகன ஓட்டிகளுமே ஏதேனும் ஒரு வேளையில் அவசரமாகப் போய்க் கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்தில் நாங்கள் அவர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டால் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும். அதனால் அவர்களை முடிந்தவரை சமாதானம் செய்ய முயல்வோம். ஸ்பாட்டில் இருக்கும் அதிகாரிகள் அல்லது ஏதேனும் உயரதிகாரிகளை அழைத்து அவர்களின் தவற்றை உணரவைத்து அனுப்பிவிடுவோம்” என்றார் சுரேந்திரநாத்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!