புதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா? #DoubtOfCommonMan

இந்தச் சட்டத்தின் படி, வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண உரிமையியல் நீதிமன்றத்தை (Civil Court) அணுக வேண்டிய அவசியமில்லை.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``புதிய வாடகைச் சட்டத்திருத்தத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் கண்ணன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
சொந்த ஊர்களிலிருந்து மக்கள் மாநகரங்களுக்கு இடம்பெயர்வது அதிகமாகி வருகிறது. நகரங்களில் மக்கள் குவிவதால் நகர்ப்புறங்களில் குடியிருப்புகளுக்கான தேவை பெருகி வருகின்றன. ஆனால், வாடகை வீடுகளில் தங்குபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
தற்போது வாடகைக்குக் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கூடவே வாடகைக்குக் குடி இருப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையேயான சண்டை சச்சரவுகளும் அதிகரித்துவிட்டன. இதனால் தமிழ்நாடு அரசு, 2017 ம் ஆண்டு புதிய வாடகை திருத்தச் சட்டத்தை 2019 பிப்ரவரி மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்த வாடகை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதே ஒழிய, இதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்தச் சட்டம் குறித்தும், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யாவிடம் பேசினோம்.

``இந்தச் சட்டத்தின்படி, வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண உரிமையியல் நீதிமன்றத்தை (Civil Court) அணுக வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள `Rent Authority' யிடம் தங்கள் பிரச்னையைக் கொண்டுசென்றால் போதும். Rent Authority-யில் மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர்கள் இருப்பார்கள். அவர்களே நேரடியாக நடவடிக்கை எடுக்கமுடியும். இந்தச் சட்டம் 2017 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த வாடகைச் சட்டம் 1960-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் மக்களின் பணியை எளிதாக்குகிறது. நீதிமன்றங்கள் விதிக்கும் கால அவகாசம், அலைச்சல் ஆகியவற்றைக் குறைக்கிறது. மேலும், வழக்கறிஞர்களின் தேவையையும் குறைத்துள்ளது" என்றார்.
இந்தச் சட்டத்தின் முக்கிய சாரம்சங்கள்:
1.வாடகைக்கு விடுபவர் மூன்று மாத வாடகையை மட்டுமே முன்பணமாகப் பெறவேண்டும். அதற்குமேல் பெறக்கூடாது.
2.அனைத்து வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஏற்படுத்திக்கொண்ட எழுத்துபூர்வமான வீட்டு வாடகை ஒப்பந்தங்களையும் 'Rent Authority' யிடம் மூன்று மாதக் காலத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ஒப்பந்ததிற்கும் பதிவு எண்கள் வழங்கப்பட்டு அந்த எண்கள் அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
4. வாடகைக்குக் குடியிருப்பவர், ஒப்பந்தக் காலம் முடிந்தபிறகு வீட்டைக் காலி செய்யவில்லை எனில், இரு மடங்கு வாடகை கொடுக்க வேண்டும்.

5. இந்தப் புதிய சட்டத்தின் கீழ் வீட்டு உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் வரவேண்டுமென்றால், வீட்டு வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தும் எழுத்துபூர்வமாக இருக்கவேண்டும்.
6. வாடகை குறித்த தகராறுகளை வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்குக் குடியிருப்பவர், அதிகாரியிடம் எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். அவர் 30 நாள்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும்.
7. வாடகை அதிகாரியின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்கிறபட்சத்தில், 90 நாள்களில் வாடகை தொடர்பான பிரச்னைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலும், அதையடுத்து 120 நாள்களில் வாடகை குறித்த பிரச்னைகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்திலும் முறையிட முடியும்.
இதுகுறித்தான கூடுதல் தகவலுக்கு:
தமிழ்நாடு அரசின் www.tenancy.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் இந்தப் புதிய சட்டம் குறித்தான தகவல்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் வாடகை ஆணையங்களின் தகவல்களை அறிந்துகொள்ளலாம். எழுத்து பூர்வமான வாடகை ஒப்பந்தங்களை ஆன்லைனில் பதிவேற்றுவது குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!