Published:Updated:

பாரதியார் நினைவு நூற்றாண்டு: தற்காலத் தமிழகத்திலும் பாரதியின் தேவை என்ன? - சமூக ஆர்வலர்களின் பார்வை

பாரதி
News
பாரதி

`செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடிய பாரதி, தற்கால தமிழகச் சூழலில் எந்த வகையிலெல்லாம் தேவைப்படுகிறார் என்பது குறித்து பன்முகத் தளத்தில் செயல்படும் சமூக ஆர்வலர்களின் பார்வை.

பாரதியார் நினைவு நூற்றாண்டு: தற்காலத் தமிழகத்திலும் பாரதியின் தேவை என்ன? - சமூக ஆர்வலர்களின் பார்வை

`செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடிய பாரதி, தற்கால தமிழகச் சூழலில் எந்த வகையிலெல்லாம் தேவைப்படுகிறார் என்பது குறித்து பன்முகத் தளத்தில் செயல்படும் சமூக ஆர்வலர்களின் பார்வை.

Published:Updated:
பாரதி
News
பாரதி

மகாகவி, தேசியக்கவி, முண்டாசுக் கவிஞன், செந்தமிழ்த்தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன் என்றெல்லாம் பாரதியின் கவித்துவத்துக்கு கிடைக்காத பட்டங்களே இல்லை. ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளார், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியிருக்கிறார். 39 வயதில் அவர் இறந்திருந்தாலும், அவரின் எழுத்தும் புகழும் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் நம்முடன் உயிர்ப்புடனே வாழ்ந்துவருகின்றன. காதல், கல்வி, தேசம், ஆன்மிகம், சமூகம், புரட்சி என அவர் கவிதை எழுத்துகள் பயணிகாத பாதைகளே இல்லை. கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்த பன்முக நாயகன் பாரதிக்கு, இன்று நூற்றாண்டு காணும் நினைவுப் பெருநாள்.

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

தமிழக முதல்வர் ஸ்டாலின், ``பாரதியாரின் நினைவுநாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்” உட்பட பல்வேறு அறிவிப்புகளை பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிகழ்வை ஒட்டி அறிவித்திருக்கிறார்.

பாரதி மறைந்து நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும், அவர் கருத்துகளின் தேவை நம் சமூகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. `செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...’ என்று பாடிய பாரதியார், தற்காலத் தமிழகச் சூழலில் எந்த வகையிலெல்லாம் தேவைப்படுகிறார் என்பது குறித்து பன்முகத் தளத்தில் செயல்படும் சமூக ஆர்வலர்களின் பார்வை இங்கே...

எழுத்தாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

``வாழ்க நற்றமிழ், வளர்க தேசியம் என்று கூறியவர் பாரதியார். அவர் வாழ்ந்தது சில காலம்தான் என்றாலும்கூட தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டவர். `வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்' என அப்போதே நதிநீர் இணைப்பால் நாடு வளம்பெறும் எனக் கனவு கண்டார். `சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' எனக் கூறி இன்றைய சேது சமுத்திர திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

முக்கியமாக, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். பராசக்தி, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டைப் பாடிய பாரதிதான், மயிலாப்பூர் கிறிஸ்தவ பாதிரியாருடன் நட்பு பாராட்டி, கிறிஸ்தவ மதக் குறிப்புகளையும், அதேபோல இஸ்லாமிய சகோதரர்களுடன் இணக்கமாக இருந்து இஸ்லாமியக் கருத்துகளைப் பற்றி உயர்வாகவும் எழுதினார். பாரதியின் கவிதைகளால் அன்றைக்கு மூன்று மதத்தவர்களும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். ஆனால், இந்நாட்டின் இன்றைய நிலையோ எங்கு பார்த்தாலும் சாதி, மத மோதல்கள் நிகழும் களமாக மாறியிருக்கிறது. பாரதியின் தொலைநோக்குப் பார்வையெல்லாம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் தொலைவிலேயே நிற்கின்றன. இதுவே பாரதியின் இன்றையத் தேவையை ஆழமாக உணர்த்துகிறது."

1940-ம் ஆண்டிலிருந்து, ராஜாஜி, அண்ணா, ஜீவா, கருணாநிதி, ம.பொ.சி உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் பாரதியார் குறித்து எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து, `கரிசல்காட்டின் கவிதைச்சோலை, பாரதி’ என்ற நூலை வெளியிட்டவர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பாரதி
பாரதி

பாரதி நூற்றாண்டையொட்டி ஒன்றிய, மாநில அரசுகளுக்குச் சில கோரிக்கைகள் வைக்கிறேன்.

``இந்திய அரசு, பாரதி பயின்ற வாரணாசியின் இந்து சர்வகலா சாலையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். வாரணாசிப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பாரதி குறித்து ஆய்வு செய்ய இருக்கைகள் நிறுவ வேண்டும். பாரதி நூற்றாண்டு குறித்து சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்.

தமிழக அரசு, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில் கிராமிய வளர்ச்சி குறித்தான பல்கலைக்கழகத்தையும், அவர் படித்த ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அவர் குறித்தான கருவூலம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் பாரதியைப் படித்து, அவர் கூற்றை நேசிப்பவன் என்ற முறையில் இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன். இதை வழிமொழிந்து அரசுகள் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்."

த.மு.எ.க.ச-வின் முன்னாள் தலைவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன்:

``எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், என்று அனைவருக்குமான பொருளாதார சமத்துவத்தைக் கனவுகண்டவர் பாரதி. அது இன்னும் எட்டாத தூரத்தில்தான் நிற்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் கோடி கோடியாகக் கொள்ளையடித்த கும்பலுடன், கேட்பாரற்ற சமூகமாகப் புலம்பெயர் தொழிலாளர்களும், அன்றாடம் உழைத்துப் பிழைப்பவரும், சக பயணிகளாக வாழும் அசமத்துவப் பொருளாதார நிலை மாறும் வரை பாரதி நமக்குத் தேவைதான்.

ச.தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன்

`பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என்று ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதிய எதிர்ப்பும் என்கிற இரட்டைத் தேசியம் பேசியவன் பாரதி. ஆணவக்கொலைகளின் பூமியாக தமிழகம் கொடிகட்டிப் பறக்கிறது. சாதி ஒழிவது ஒருபுறம் இருந்தாலும், தீண்டாமைக் கொடுமைகளே இன்னும் இங்கு ஒழியவில்லை.

பணமயமாக்கல் என்கிற பேரில் தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு கடைவிரிக்கிறது. பாரதியின் இந்த வரிகள் இன்றைக்கும் பாடத் தேவையான வரிகளாகவே திகழ்கின்றன.

பாரதி நினைவின் நூற்றாண்டு
பாரதி நினைவின் நூற்றாண்டு

குழந்தைமையைக் கொல்லும் மரண சாசனமாக ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை நம் தலையில் விடிந்துவிட்டது. இன்று ஓடி விளையாடவும், கூடி வாழவும் சொன்ன பாரதியின் பாப்பா பாட்டுகள் முன்னெப்போதையும்விட இன்றுதான் மிகவும் தேவையாக இருக்கின்றன."

`இளம் பாரதி பட்டம்' வென்றவரும், முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான, இர.ராகுல்:

``பாரதி எனும் பெயருக்கு இங்கு தனி ஆற்றல் உண்டு. அக்னிக் குஞ்சுகளை அவிழ்த்துவிடும் ஆற்றல் படைத்த வரிகளைப் படைத்த படைப்பாளியின் பெயருக்கு ஆற்றல் இருப்பது அதிசயம் இல்லை. இலக்கியம் எளியோருக்கு இல்லை எனும் நிலையை மாற்றி பாமரருக்கும் சேர்த்து பாட்டு சமைத்த படைப்பாளி பாரதி. இன்றைய சமூகம் மெல்ல முன்னோக்கி நகர பாரதி இன்றியமையாத துணை. பாரதியின் பாடல்கள் அன்று விடுதலை வேட்கையை வித்திட்டன. இன்றும் விடுதலை வேட்கை முடிந்தபாடில்லை. பெண் விடுதலை தளத்திலும், சாதிய சமூக விலங்குகளை உடைத்தெறிவதிலும் பாரதியின் வரிகள் வழியே அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டிய அவசியம் இருக்கத்தான் செய்கிறது.

பாரதியார்
பாரதியார்

பாரதி மனிதர்க்கு மட்டுமே உரியவராக இருந்திருந்தால் பாரதியின் தேவை நாள்கள் நகரும் போது முடிந்திருக்கும். ஆனால், பாரதி பறவைக்கும், விலங்குக்கும், அவ்வளவு ஏன்... அவன் ஆறு, கடல், மலை என இயற்கையின் எல்லா பரிமாணத்துக்கும் பாட்டிசைத்து பாடிய புலவன். ஆதலால் அவன் தேவைக்கு என்றுமே முடிவில்லை. பாரதியின் அகண்ட பார்வையிலிருந்து உலகை ரசிக்க இன்னும் நூறு தலைமுறைக்கு அப்பாலும் ஆட்கள் இருப்பார்கள். பாரதி வேற்றுமையில் ஒற்றுமை காணும் கண் படைத்திருந்தார். மொழி, இனம், மதம் கடந்து மனிதத்தைப் போற்றும் வகையில் அமைந்துள்ள பாரதியின் பாடல்கள் இன்றைய சூழலில் நிச்சயம் தேவை. பாரதி ஒரு புறக்கணிக்க முடியாத படைப்பாளி என்பதே நிதர்சனம்.

பாரதியார் பல்கலைக்கழக (பாரதி கலை இலக்கிய மன்றம்), முனைவர் பட்டப்படிப்பு மாணவி திவ்யபாரதி:

``காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம். கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும். காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம். ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினால் சாகாமலிருத்தல் கூடும். கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."

`ஆதலால் காதல் செய்வீர்...’ காதல் செய்வதற்கான நியாயங்களை மேல்தட்டு மக்களின் மண்டையில் உறைக்கும்படி சொல்வதற்கு பாரதி தேவைப்படுகிறார். பெரும்பாலும் காதலை மனித இயற்கையாக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மேல்தட்டு மனிதர்களே. ஆனால் இவர்களுக்கான ஒரு குரலாக பாரதியாரை ஏற்றுக்கொள்ள பொது சமூகத்தில் அவர்கள் தயங்குவதில்லை. பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். பொது சமூகத்திலுள்ள ஆதிக்க நிலைச் சிந்தனையாளர்களை `பாரதி’ என்ற பிம்பம் தன்வசப்படுத்தி உள்ளது. பாரதி என்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிம்பத்தால் மட்டுமே சாதிய மனநிலையில் இருப்பவர்களின் புத்திக்கும் எட்டுவது போன்ற இந்தக் கருத்தை ஒரு பாடலின் மூலம் சொல்லிவிட முடியும்.

பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்

தற்போது இளைஞர்கள் தங்களது கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் பாரதியாரின் உருவ ஸ்டிக்கர்களை விதவிதமாக போடுவதையும் `நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியின் வரிகளை ஒட்டியிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு பாரதி மாதிரியான ஒரு `பிராண்ட்' அல்லது ஒரு `ஹீரோயிக் இமேஜ்' மூலமாகவே ஒரு சமத்துவக் கருத்தையும், மனிதகுலத்துக்கு நன்மை நல்கும் கருத்துகளையும் இன்றைய நவீன உலகில் கொண்டு சேர்க்க முடிகிறது. எனவேதான், இன்றைய நவீன காலத்திலும் பாரதியின் பல்வேறு வகையான சிந்தனைகள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.”