Published:Updated:

தாழ்த்தப்பட்டவர்களா, அட்டவணைப் பிரிவினரா... எந்த பதம் சரியானது? - ஓர் அலசல்

சாதிச் சான்றிதழ் / Representational Image
சாதிச் சான்றிதழ் / Representational Image

சாதி சார்ந்த சொல்லாடல்களை எவ்வகையில் முறைப்படுத்தலாம் என்பது பற்றி, சமூக முன்னேற்றம் சார்ந்து இயங்குபவர்களிடம் பேசினோம்.

சென்னை, மாநகராட்சிப் பள்ளி ஒன்றின் சேர்க்கைப் படிவத்தில் சாதி பற்றிய தெரிவில் `தாழ்த்தப்பட்டவர்’, `மலைஜாதியினர்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டித்து சமூக வலைதளங்களில் சமீபத்தில் பதிவுகள் எழுதப்பட்டன. சொற்கள் மிகவும் கூர்மையானவை... எப்போதும் கவனமாகக் கையாள வேண்டும். ஆகவேதான், கௌரவக்கொலை என்ற சொல் இன்று `ஆணவக்கொலை' என்றும், நிவாரணத்தொகை என்பது `உரிமைத்தொகை' என்றும் இலவசம் என்பது `கட்டணமில்லா' என்றும் விளிக்கப்படுகிறது. அதன்படி, தாழ்த்தப்பட்டவர் என்பதை அட்டவணை சாதியினர்/பட்டியல் சமூகத்தினர் என்றே குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சாதி சார்ந்த சொல்லாடல்களை எவ்வகையில் முறைப்படுத்தலாம் என்பது பற்றி, சமூக முன்னேற்றம் சார்ந்து இயங்குபவர்களிடம் பேசினோம்.

அழகிய பெரியவன்
அழகிய பெரியவன்

``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் இழிசொல் இல்லை என்றாலும் பொதுச் சமூகத்தின் பார்வையில் `தாழ்ந்த’ என்கிற அர்த்தம் தொனிக்கும் சொல்லாகவே புரிந்துகொள்ளப்படும் என்பதால் `அட்டவணை சாதியினர்’ என்றே குறிப்பிடலாம்” என்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

``சொற்களுக்கு வலிமை அதிகம் என்பதால் நவீன சிந்தனைகள் உருப்பெற்ற பிறகு, நிறைய சொற்கள் மாற்றியமைக்கப்பட்டன. நீக்ரோ (கறுப்பினத்தவர்) என்கிற சொல்லை ஆஃப்ரோ - அமெரிக்கன்ஸ் (Afro-americans) என்று மாற்றியமைத்தார்கள். பாலினம் சார்ந்த பிரக்ஞையுடன் மாற்றியமைக்கப்பட்ட திருநங்கை, திருநம்பி போன்ற சொற்களை இன்றைக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். அதுபோல, சாதியம் சார்ந்த பிரக்ஞையுடன் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லை ஏன் மாற்றியமைக்கக் கூடாது? இந்தச் சொல், பொது மனநிலையில் தாழ்ந்த சமூகத்தினர் என்பது போன்ற பார்வையை ஏற்படுத்துகிறது. ஆகவே, மாற்று தேவைப்படுகிறது.

எம்.சி.ராஜா உள்ளிட்ட தலித் தலைவர்கள் பலரும் `ஆதி திராவிடர்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தினர். அச்சொல்லைக் கொண்டுதான் தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிடர் நலத்துறை என்கிற ஓர் அரசுத்துறையே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அட்டவணைப்படுத்தப்பட்ட 78 சாதிகளில் `ஆதி திராவிடர்’ என்கிற உட்சாதி ஒன்று இருப்பதால் அதைப் பொதுச் சொல்லாகப் பயன்படுத்துவதிலும் நிறைய சிக்கல் இருக்கிறது. மேலும், பள்ளர்கள் தங்களது சமூகத்தின் பெயரை தேவேந்திர குல வேளாளர்கள் என அரசாங்கத்தின் மூலமாக மாற்றிக் கொண்டுவிட்டனர். ஆதிதிராவிடர் என்கிற சொல்லை பொதுச் சொல்லாக மாற்ற முடியாது என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆகவே, அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் என்று குறிப்பிடுவது உகந்ததாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்திலேயே அப்படித்தான் இருக்கிறது என்பதால் அச்சொல்லை அலுவல்பூர்வமாகப் பயன்படுத்துவதோடு பொதுப்பயன்பாட்டுக்கும் கொண்டு வரலாம்” என்பதுதான் அழகிய பெரியவன் முன்வைக்கும் வாதம்.

``தாழ்த்தப்பட்டவர் என்ற சொல் காரணத்துடன்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் சுயமரியாதை நோக்கோடு வேறுவிதமாக அழைக்கக் கோருவதிலும் தவறில்லை” என்கிறார் எழுத்தாளர் மதிவண்ணன்.

``திராவிட இயக்கத்தவர்களே தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். இந்திய தலித் இலக்கியங்களில் குஜராத்தி, மராத்தி, கன்னடம் போன்ற பெரும்பாலான மொழிகளில் தன் வரலாற்று நூல்கள் அதிக அளவில் எழுதப்பட்டிருக்கின்றன. காரணம், சாதிய அமைப்பினால் மிகவும் நசுக்கப்பட்டவர்கள், அந்த நூல்கள் வழியே அதை வெளிப்படுத்தினர். தமிழில் அப்படியான தன் வரலாற்று நூல்கள் இல்லை. காரணம், மற்ற மாநிலத்தவர்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சாதிய அமைப்பால் தலித் மக்கள் ஒடுக்கப்பட்டது ஒரு காலகட்டத்தில் வெகுவாகக் குறைந்துபோனதுதான். பெரியார் அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணியாக நின்றன. அத்தகைய அமைப்பினர், தலித் மக்களை அவமதிக்கும் நோக்கோடு `தாழ்த்தப்பட்டவர்’ என்று குறிப்பிடவில்லை என்பதுதான் உண்மை.

மதிவண்ணன்
மதிவண்ணன்

`தாழ்த்தப்பட்டவர்’ என்கிற வார்த்தைதான் பிரச்னையா? அதை மாற்றி விட்டால் மட்டும் அவர்கள் மீதான சாதிய அமைப்பின் நெருக்குதல்களிலிருந்து விடுபட்டு விடுவார்களா? இந்தக் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. என்றாலும், சுயமரியாதை நோக்கோடு தாழ்த்தப்பட்டவர் என்று அழைக்கக் கூடாது எனக் கோருவதை நான் ஆதரிக்கிறேன். தாழ்த்தப்பட்டவர் என்று அழைக்கப்பட்ட சூழல் இன்றைக்கு இல்லை. இடஒதுக்கீடு, தனித் தொகுதிகள் என உரிமைகள் சார்ந்த முன்னெடுப்புகளால் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளனர். ஆனால், முரண் என்னவென்றால் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற அரசியல் கட்சித்தலைவர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதி என்கிற பட்டியலில் இருந்தே தங்களது சாதியை வெளியேற்றும்படி கேட்கிறார்கள். இது மிகவும் சிக்கலான பிரச்னை என்பதால் பல்வேறு தரப்பினருடனான உரையாடல் வழியேதான் ஒரு முடிவை எடுக்க முடியும்” என்கிறார் மதிவண்ணன்.

``இந்திய சாதிய அமைப்பு முறை பற்றிய சரியான புரிந்துணர்வு அற்றவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லை அவமதிப்பான சொல்லாகக் கருதுகிறார்கள்” என்கிறார் `தலித் முரசு’ இதழ் ஆசிரியர் புனித பாண்டியன்.

``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லுக்கான அர்த்தத்தை முழுமையாக உணர வேண்டுமெனில், இந்திய சாதிய சமூக அமைப்பு பற்றிய புரிந்துணர்வு வேண்டும். இன்றைக்கு நாம் பயன்படுத்தி வரும் `இடஒதுக்கீடு’ என்கிற சொல்லே தவறானது. இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே இடஒதுக்கீடு என்கிற சொல் காணப்படவில்லை! `சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத்தள்ளப்பட்ட மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இட ஒதுக்கீடு என்று சொல்வதன் மூலம் அது ஒரு சில சமூகங்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகை என்கிற அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளப்படுகிறது. அது சலுகை அல்ல. உலகில் எங்கும் இல்லாத சாதிய சமூக அமைப்பு முறை இந்தியாவில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதன் முக்கிய நோக்கமே ஒன்றின் கீழ் ஒன்றாகப் படிநிலைப்படுத்தி மக்களைப் பிரித்து வைப்பதுதான். அந்த அமைப்பு முறையில் சூத்திரர், பஞ்சமர் என்று குறிப்பிடப்பட்ட சமூகத்தவர் கடைநிலையில் வைக்கப்பட்டனர்.

இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர், மற்றும் 25 சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் என 75 சதவிகித பெரும்பான்மை மக்களுக்குத் தாங்கள் பிறந்த ஜாதியின் காரணமாக கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி மற்றும் பிற வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆகவே, அவர்களுக்குக் குறிப்பாக அரசு வேலைவாய்ப்பும், தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமைகளும் மறுக்கப்பட்டன.

புனித பாண்டியன்
புனித பாண்டியன்

சாதி சமூக அமைப்பால் முற்றிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதுவரையிலும் மறுக்கப்பட்ட பங்கைக் கொடுக்கும் நோக்கத்திலேயே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அதை `இட ஒதுக்கீடு’ என்று சொல்லும்போது, சலுகை என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றுகையில் அம்பேத்கர் அதைப் பிரதிநிதித்துவம் (Representation) என்றுதான் குறிப்பிட்டுள்ளார். பிரதிநிதித்துவம் எனும்போது அது அம்மக்களின் பிறப்புரிமை ஆகிறது. சாதி அமைப்பால் எவ்வளவு காலத்துக்கு அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதோ, பாகுபாடு நிலவுகிறதோ அதுவரை போதிய அளவு பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், அரசுப் பதிவேடுகளிலும் இட ஒதுக்கீடு என்றே குறிப்பிடப்பட்டு வருவது தவறானது. அதைப் பிரதிநிதித்துவம் என்றே அழைக்க வேண்டும். பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டை நேர் செய்யும் நோக்கிலேயே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

இந்தியாவிலிருக்கும் எட்டு லட்சம் கிராமங்களும் ஊர் என்றும், சேரி என்றும் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. தலித் மற்றும் பழங்குடி மக்கள் ஊருக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இன்னும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறைவாக வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தையே பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய மனநிலை கொண்டவர்கள்தான், பிரதிநிதித்துவத்தின் பயன்களை தாழ்த்தப்பட்ட மக்களே அனுபவிக்கின்றனர் என்கிற பொய்யான பிரசாரத்தையும் மேற்கொள்கின்றனர்” என்றவர், ``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லாடலில் எந்தத் தவறும் இல்லை'' என்கிறார்.

``அலுவல் ரீதியாக சொல்லப்போனால், `ஷெட்யூல்டு கேஸ்ட்' (Scheduled Caste) என்று ஆங்கிலத்திலிருப்பதை அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், தாழ்த்தப்பட்டவர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? தாழ்த்தப்பட்டவர் என்ற சொல் இந்தியச் சாதிய அமைப்பின் படிநிலைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட அநீதியைச் சுட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இன்றைக்கு அச்சொல்லாடலை எதிர்க்கிறவர்கள் அனைவரும், திராவிட இயக்கம்தான் எங்களை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லியது என்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தலித் மக்களை Depressed class என்றும், Untouchables என்றும் குறிப்பிட்டிருக்கிறார். Depressed என்பதைத் தமிழில் எப்படி மொழிப்பெயர்ப்பீர்கள்? Untouchables என்பதன் பொருள் தீண்டப்படாதவர்கள் அல்ல; தீண்டத்தகாதவர்கள். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. மனித உறவாடல்களுக்கு தகுதியற்றவர்கள் (Unfit for human association) என்று ஊருக்கு வெளியே தள்ளி வைக்கப்பட்டு இம்மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்று அவர் எழுதியிருக்கிறார். இப்படியிருக்கையில் தாழ்த்தப்பட்டவர் என்கிற வார்த்தை தவறு என்றால், `அம்பேத்கரும் எங்களை இழிவுபடுத்துவதற்குத்தான் சொன்னார்’ என்பார்களா? தான் தீண்டத்தகாதவனாக நடத்தப்படுகிறோம் என்கிற உண்மையை உணரும் நிலையில்தான் ஒருவர் அதற்கு எதிராகக் கேள்வி கேட்க முடியும்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 17 - சாதி என்றால் என்ன?

`சமார்கள் தங்களை ரவிதாசர்கள் அல்லது ஜாதவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். டோமர்கள் தங்களை சில்பக்காரர்கள் என்றும், பறையர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்றும், மாதிகாக்கள் தங்களை அருந்ததியர்கள் என்றும், மகர்கள் தங்களை சொக்கமேளா அல்லது சோம வம்சிகள் என்றும், பாங்கிகள் தங்களை வால்மீகிகள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் அனைவருமே தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் செல்லும்போது தங்களை கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு நன்றாகத் தெரியும் தங்களது சாதியின் பெயரைக் குறிப்பிடும்போது இந்துக்களின் கோபமும் வெறுப்பும் வெளிப்பட்டுவிடும் என்று. ஆகவேதான் தங்களது சாதியின் பெயர்களை மாற்றி, வேறு பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள். தப்பிப்பதற்காக நிறத்தை மாற்றிக்கொள்வதைப்போல. இப்படி பெயர்களை மாற்றிக்கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. சாதிய அமைப்பைத் தூக்கிப்பிடிக்கும் இந்து மதத்தை விட்டு வெளியே வந்தாலொழிய விடுதலை கிடையாது' என்று அப்போதே சொல்லி வைத்திருக்கிறார் அம்பேத்கர்.

`சரி, தாழ்த்தப்பட்டவரை அலுவல் ரீதியாக எப்படிச் சொல்லலாம்?’ என்று கேட்டால், ஆதிதிராவிடர் என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்று ஒரு துறையே உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள 76 தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான அரசு அலுவல் சொல்லாக ஆதிதிராவிடர் என்கிற சொல்லை முன்னிறுத்தலாம். ஆனால், தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் வழக்கில் ஏன் இருக்கிறது என்ற வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் இச்சமூகங்களின் முன்னேற்றம் சாத்தியப்படும். இன்றைய சூழலில் மேற்கண்ட விவாதத்தைத் தாண்டியும் கருத்தில் கொள்ள நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லாடல் தவறு என்கிற விவாதம் அர்த்தமற்றது” என்கிறார் புனித பாண்டியன்.

``தாழ்த்தப்பட்டவர் என்று குறிப்பிடும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?” என்கிறார் மக்கள் மறுமலர்ச்சித்தடம் என்கிற பௌத்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சத்வா. ``பொது வழக்கில் scheduled caste பல்வேறு விதமாக அழைக்கிறார்கள் என்பது வேறு. ஆனால், சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அரசு அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும். அரசு அலுவல் ரீதியான சொல் என்கிற அடிப்படையில் பார்த்தால் scheduled caste என்பதனை `அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர்’ என்றுதான் குறிப்பிட வேண்டும்.

சத்வா
சத்வா

சமூக வழக்காற்றிலிருந்தும் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் நீக்கப்பட வேண்டும். ஊனமுற்றோர் என்கிற சொல் மாறி இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் என்று அழைப்பது போல் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லை மாற்றி அட்டவணைப் படுத்தப்பட்ட சாதியினர் என்றே அழைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் இழிவான சொல் அல்ல என்கிறார்கள். ஆனால், பொதுப்பார்வையில் அது தாழ்வான மதிப்பீட்டையே உருவாக்குகிறது. ஆகவே, அட்டவணை சாதியினர் என்று அழைப்பதே முறையானதாக இருக்கும். இன்னொரு முக்கியப் பிரச்னை குறித்தும் பேச வேண்டும். அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து, பௌத்த மதத்துக்கு மாறியவர்களையும் `தாழ்த்தப்பட்டவர்' என்றே குறிப்பிடுகிறார்கள். இதுவும் மாற்றப்பட வேண்டியது” என்கிறார் சத்வா.

அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

புனிதப்பாண்டியன் பகிரும் முக்கியமான பிரச்னைகள்

விவாதிப்பதற்கு இன்னும் எத்தனையோ முக்கியமான பிரச்னைகள் இருக்கின்றன என்று புனிதப்பாண்டியன் பட்டியலிட்டவற்றில் சில...

``புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது 37 வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரியலூர் அருகே 3 தலித்துகள் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவம் தொடங்கி, பாளை சிறையில் கொல்லப்பட்ட மாணவர் முத்து மனோ உடலை இரு மாதங்களாக வாங்க மறுத்து நடைபெறும் நீதிக்கான போராட்டம்வரை பொருட்படுத்த வேண்டிய முக்கியப் பிரச்னைகள் ஏராளம் உள்ளன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளில் பதிவான குற்ற வழக்குகளில் இதுவரையிலும் 2 சதவிகித வழக்குகளில்கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. தலித் மக்களுக்கான அரசுப் பணியிடங்களில் 25 ஆண்டுகளாக நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை (Backlog vacancies) நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் 2011-ல் தீர்ப்பு வழங்கியது (தமிழ்நாட்டில் மட்டும் 25,000 பின்னடைவுப் பணியிடங்கள்). முந்தைய அ.தி.மு.க அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக மீண்டும் வழக்கு தொடர்ந்த பிறகு, நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததற்காக கடந்த 4 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு அபராதம் கட்டி வந்தது. புதிய தி.மு.க அரசாவது நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமா? இல்லை அதுவும் அபராதம் கட்டிக்கொண்டிருக்கப்போகிறதா?''

அடுத்த கட்டுரைக்கு