என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..? #DoubtOfCommonMan

கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் முதல் இரு அணுஉலைகளும், அவை உற்பத்திசெய்யவேண்டிய மின்சாரத்தின் அளவில் பாதி அளவுக்கே உற்பத்திசெய்வது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், அணுமின் நிலையத்தால் தமிழகத்துக்கு பலன் இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரிய மின் உற்பத்தி மையமாக கூடங்குளம் விளங்குகிறது. ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் 17,270 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகள் கட்டப்பட்டன. சுற்றுப்புற மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணுஉலைகள் கட்டப்பட்டன.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தற்போதைய நிலை என்ன, அதன்மூலம் தமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறது?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார், பி.சுவாமிநாதன் என்ற வாசகர்.

முதல் அணுஉலைக்கான பணிகள் முடிவடைந்து 2013 அக்டோபர் 22-ம் தேதி, முதல் மின் உற்பத்தி தொடங்கியது. இரண்டாவது அணுஉலையில் 2016 ஜூலை 10 முதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த இரு அணுஉலைகளுக்கான உதிரிப்பாகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக ஆரம்பத்திலிருந்தே அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அடிக்கடி நிறுத்தப்படும் அணுஉலைகள்!
கூடங்குளத்தை அணுஉலைப் பூங்காவாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வளாகத்தினுள், மேலும் 4 அணுஉலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சுமார் 39,747 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3-வது மற்றும் 4-வது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள் 2016-ல் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.
முதலாவது அணுஉலை செயல்படத் தொடங்கியதிலிருந்து 2013-ம் ஆண்டு வரையிலும் 40 முறை பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.பூவுலகின் நண்பர்கள்
முதல் இரு அணுஉலைகளின் செயல்பாடுகள் தொடர்பாக சுற்றுப்புற மக்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு வரையிலும் முதலாவது அணுஉலை 40 முறை பழுது காரணமாக நிறுத்தப்பட்டதாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது அணுஉலை, 2016 மார்ச் வரையிலும் 19 முறை நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம்?
கூடங்குளத்தின் இரு அணுஉலைகள் மூலமாகக் கிடைக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்துக்கு 925 மெகாவாட், கர்நாடகாவுக்கு 442 மெகாவாட், கேரளாவுக்கு 266 மெகாவாட், பாண்டிச்சேரிக்கு 67 மெகாவாட் எனப் பிரித்துக் கொள்ள வேண்டும். எஞ்சிய 300 மெகாவாட் மின்சாரம் மத்தியத் தொகுப்பில் சேர்க்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தப்படி தங்களுக்கு மின்சாரம் கிடைக்காததால், அணு மின்சாரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளமுடியாத நிலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அங்கமான ’டான்ஜெட்கோ’ உள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய மின்வாரிய அதிகாரிகள், ‘’அணு உலைகள் மூலம் எதிர்பார்த்த மின்சாரம் கிடைக்கவில்லை. 2018-2019-ம் ஆண்டில், முதலாவது அணுஉலை 36 சதவிகிதம் குறைவான மின்சாரத்தையே உற்பத்திசெய்திருக்கிறது. இரண்டாவது அணுஉலையிலிருந்து முந்தைய ஆண்டைக் காட்டிலும் 22 சதவிகிதம் குறைவான மின்சாரம் மட்டுமே கிடைத்திருக்கிறது.
இந்த அணுஉலைகளை நம்பி நான் எதையும் திட்டமிட இயலவில்லை. கடந்த ஆண்டு, முதலாவது அணு உலை பராமரிப்புக்காக ஆறு மாதங்கள் மூடப்பட்டிருந்தது. இரண்டாவது அணுஉலையும் அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுகிறது. அதனால் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் நமக்குக் கிடைக்கும் என்பதைத் திட்டமிட முடியாதநிலை இருப்பதால், அணுமின்சாரத்தைக் கவனத்தில்கொள்வதில்லை. காற்றாலை மற்றும் நீர் மின்நிலையங்கள் மூலம் குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும் மின்சாரம் நமக்குப் பெருமளவில் கைகொடுக்கிறது’’ என்கிறார்கள்.


இதுபற்றி அணுஉலை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘’கூடங்குளத்தில் செயல்படுவது மூன்றாம் தலைமுறைக்கான அணு உலை. இந்த வகை உலையை நாட்டிலேயே முதல் முறையாகப் பயன்படுத்துவதால், சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அடுத்து தொடங்க இருக்கும் 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் இந்தக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிடும்’’ என்கிறார்கள்.
தீர்க்கப்படுமா மக்களின் அச்சம்!
அணுஉலைக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் கழிவுகளை எங்கு சேமித்துவைக்கப்போகிறார்கள் என்பது குறித்து அணு உலைக்கு எதிரான மக்கள் அமைப்பினர் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பியும், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அணுஉலையில் அடிக்கடி நடக்கும் பழுதுகள் சுற்றுப்புற மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன. மக்களிடம் எழுந்துள்ள அச்சத்தைப் போக்கும் கடமை அணு சக்திக் கழகத்துக்கு இருக்கிறது.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!