Published:Updated:

இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?

நெல்லை மாவட்டத்தில் நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, பீடி வட்டி, பைக் வட்டி என 20-க்கும் அதிகமான வகைகளில் கந்துவட்டி நடக்கிறது. கடன் வாங்கிய அப்பாவிகள், உயிரைக் காவுகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையின் உச்சம்.

தீக்குளித்த இசக்கிமுத்து
தீக்குளித்த இசக்கிமுத்து

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இதே தினத்தில் (அக்டோபர் 23-ம் தேதி) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர். கந்துவட்டி கொடுமையால் இப்படியும் நடக்குமா என பலரையும் கலங்கடித்த சம்பவம் அது.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

2017 அக்டோபர் 23-ம் தேதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அங்கு, யாருமே எதிர்பாராத வகையில் கணவனும் மனைவியும் தங்களுடைய இரு குழந்தைகளையும் சேர்த்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொண்டனர்.

காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவர் மனைவி சுப்புலெட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர், மனு வாங்கிக்கொண்டிருந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி இருந்த இடத்துக்கு 100 மீட்டர் தூரத்தில், தீக்குளித்து இறந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணம், இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி வாங்கிய கந்துவட்டி.

இசக்கிமுத்து-சுப்புலெட்சுமி தம்பதி
இசக்கிமுத்து-சுப்புலெட்சுமி தம்பதி

சுப்புலெட்சுமி, தன் வீட்டின் அருகே வசித்த தளவாய்ராஜ், முத்துலட்சுமி தம்பதியிடம் 1.45 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அசலுடன் சேர்த்து 2.34 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தவேண்டியதிருந்தது. பணத்தைக் கேட்டு அந்தத் தம்பதி நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வட்டியைக்கூட செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டதால், காவல்துறையில் புகார்செய்துள்ளனர்.

காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்று கூலி வேலை செய்துள்ளார் இசக்கிமுத்து. பண்டிகைக்காக ஊருக்குத் திரும்பியபோது, மீண்டும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அதனால், நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் இசக்கிமுத்து 4 முறை மனு அளித்திருக்கிறார். அதில், காவல்துறையினரும் கந்துவட்டி கும்பலுக்கு உடந்தையாக இருப்பதாகப் புகார் தெரிவித்தி ருந்தார்.

Vikatan

கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறையினரும் நெருக்கடி தந்துள்ளனர். அதனால் இசக்கிமுத்துவும் அவர் மனைவி சுப்புலட்சுமியும் மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதனால், நெல்லை ஆட்சியரிடம் 5-வது முறையாக மனு அளிக்க வந்த அவர்கள், திடீரென குடும்பத்துடன் தீக்குளித்தனர்.

இதில் குழந்தைகளும், சுப்புலட்சுமியும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால், காவல்துறையினர் இசக்கிமுத்து மீது பழி சுமத்தினாரே தவிர, கந்துவட்டி கும்பல்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தீயில் கருகிய உடல்கள்
தீயில் கருகிய உடல்கள்

இசக்கிமுத்து குடும்பத்தினரைச் சந்திக்க காசிதர்மம் சென்றோம். அவரது குடும்பத்தினர், காசிதர்மம் கிராமத்திலிருந்து வெளியேறி, அருகில் உள்ள கடையநல்லூரில் வசிக்கிறார்கள். இசக்கிமுத்து குடும்பத்தின் மரணம் அவர்களை நிலைகுலைய வைத்திருப்பதைக் காண முடிந்தது.

இசக்கிமுத்துவின் தாய் பேச்சியம்மாளிடம் பேசினோம். ’’என் மகன் கடுமையான உழைப்பாளி. கஷ்டப்பட்டு உழைச்சு குடும்பத்தை நடத்திக்கிட்டிருந்தான். சொந்த வீடு கட்டுறதுக்காகக் கடன் வாங்கியிருக்கிறான். ஆனால், கந்துவட்டி கழுத்தை நெரிக்கும்னு அவனுக்குத் தெரியாமப் போயிடுச்சு. சம்பாதித்த பணம் எல்லாம் வட்டிக்கே சரியாப்போனதால, பல வருஷமா வட்டி மட்டுமே கட்டியிருக்கான்.

இசக்கிமுத்துவின் பெற்றோர்
இசக்கிமுத்துவின் பெற்றோர்

வட்டி கட்டமுடியாமப் போனப்ப, நெருக்கடி கொடுத்ததால் போலீஸில் புகார் கொடுத்தான். அங்கும் அவனுக்கு நியாயம் கிடைக்கல. அதனால உயிரை விட்டுட்டான். அந்த பச்சப்புள்ளைக ரெண்டும் எங்கிட்ட பாசமா இருக்கும். ஊரிலிருந்து எப்ப வந்தாலும், ‘பாட்டீ’னுட்டு எங்கிட்ட ஓடிவந்துரும். அந்த பச்சப் புள்ளைகள் தீயில் கருகியதை நினைச்சாலே என் நெஞ்சே வெடிச்சுடும் போலிருக்கு’’ என்று கதறினார்.

என் மகன் குடும்பத்தோட தற்கொலை செஞ்சதுக்குக் காரணமாக இருந்தவங்களுக்கு, ஒரு அரசியல் பிரமுகரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும் உதவி செஞ்சாங்க.
பலவேசம்

இசக்கிமுத்துவின் தந்தை பலவேசம், ’’என் மகனும் குடும்பமும் தீயில் வெந்துபோன பிறகும் எனக்கு நிறைய நெருக்கடி வந்துச்சு. அவங்க சாவுக்குக் காரணமானவங்க மேல நடவடிக்கை எதுவும் எடுக்கல. என் மகன் மருத்துவமனையில் இருந்தப்போ மரண வாக்குமூலம் கொடுத்தான். ஆனால், அரசியல் செல்வாக்கு காரணமா அதை மாத்திட்டாங்க.

என் மகனும் அவனோட குடும்பமும் தற்கொலை செஞ்சதுக்குக் காரணமாக இருந்தவங்களுக்கு, ஒரு அரசியல் பிரமுகரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரும் உதவி செஞ்சாங்க. எங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை. நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டிருக்கிறோம். அங்கு எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்னு நம்புறோம்’’ என்று கலங்கினார்.

கந்துவட்டிக்காக இசக்கிமுத்து குடும்பம் தற்கொலை செய்துகொண்ட பின்னர் சுதாரித்துக்கொண்ட நெல்லை மாவட்ட நிர்வாகம், கந்துவட்டிகுறித்து புகார் கொடுக்க நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மையம் அமைத்தது. தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் பொதுமக்கள் புகார் மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதில், நூற்றுக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாகவும் அந்தந்த காவல் நிலையங்களில் கந்துவட்டி புகார்கள்மீது உரிய முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதனால், கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள், கடன் கொடுத்தவர்களிடம் சமரசம் பேசிக் கடனைத் தள்ளுபடி செய்ததும் ஆங்காங்கே நடந்தன.

இசக்கிமுத்து குடும்பத்தினரின் தற்கொலைச் சம்பவம் அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியடையவைத்தது. நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, கந்துவட்டிகுறித்து பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 150-க்கும் அதிகமான புகார்கள் வந்தன. அந்தப் புகார்களை எல்லாம் தொகுத்து, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் அக்கட்சியினர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அந்தப் புகார்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பீடி சுற்றும் பெண்களையும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் குறிவைத்து, கந்துவட்டி கும்பல் செயல்படுகிறது.
ரவி, கிராமத்து இளைஞர்

ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரிடம் பேசியபோது, ’’இசக்கிமுத்து குடும்பத்தினரின் தற்கொலைக்குப் பிறகு நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்னை ஓரளவுக்குக் குறைந்திருந்தது. இப்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்கிற பெயரில் கந்துவட்டி மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. பீடி சுற்றும் பெண்களையும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களையும் குறிவைத்து கந்துவட்டி கும்பல் இப்போது செயல்படுகிறார்கள். அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த விவகாரம்குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘’நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியை முற்றிலுமாகத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கந்துவட்டி தொடர்பான வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டால், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகுறித்து உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vikatan
கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை அதிகாரி

இந்த ஆண்டில் மட்டும் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர் முயற்சியின் காரணமாகத் தற்போது, மாவட்டம் முழுவதும் கந்துவட்டி புகார்கள் குறையத் தொடங்கியிருக்கின்றன. முழுமையாகக் கந்துவட்டி இல்லாத மாவட்டமாக நெல்லையை மாற்றுவோம்’’ என்கிறார்கள்.