Published:Updated:

`கயிறு எங்கிருந்து கிடைத்தது?' - கேரள மாணவி ஃபாத்திமா தற்கொலையில் தந்தை சந்தேகம்!

'என் மகள் தற்கொலை செய்துகொள்ள கயிறு எங்கிருந்து கிடைத்தது' என கேரள மாணவி ஃபாத்திமா-வின் தந்தை சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அப்துல் லத்தீஃப்
அப்துல் லத்தீஃப்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், சமீபத்தில் நடந்த தற்கொலைச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமையன்று, முதலாம் ஆண்டைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் எனும் கேரள மாணவி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. சென்னை ஐஐடி -யில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். ஐஐடி-யில் நடந்த உள்தேர்வில் மாணவி குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவர் தற்கொலை முடிவு எடுத்ததாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், என்னுடைய மரணத்துக்குப் பேராசிரியர் ஒருவர் காரணம் என எழுதியிருந்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில் ஐஐடி பேராசிரியர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனப் பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

மாணவியின் மரணம் தொடர்பாக, அவரின் பெற்றோர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஃபாத்திமா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் அளித்த மனுவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பியுள்ளார். மாணவி மரணத்தில் உடிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, இன்று மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “என் மகள் அவளுடைய மொபைல் போனில் அனைத்து விவரங்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்த பின்னரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி உறுதியளித்துள்ளார். என் மகள் தற்கொலை செய்வதற்குக் கயிறு எங்கிருந்து கிடைத்தது என்று ஒரு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ச்சியான தற்கொலை மரணங்களைப் பொறுத்தவரை என் மகளின் மரணத்தில்தான் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

அப்துல் லத்தீஃப்
அப்துல் லத்தீஃப்

என் மகள், ஒவ்வொரு நாளும் இரவில் என்னுடன் பேசுவார். ஆனால், சம்பவத்தன்று அவர் என்னிடம் பேசவில்லை. அதுமட்டுமின்றி, கடுமையான நெருக்கடி காரணமாகவே அவர் பயங்கரமான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதில் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், என் மகள் எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பும் கடிதத்தின் வாயிலாகத் தகவல் தெரிவித்த பின்னரேதான் செய்வாள் என்று எனக்கு நன்கு தெரியும். இந்த விவகாரத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளின் தற்கொலைக்கு முழுக் காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன் தான். என் மகள் மரணம்குறித்து இதுவரை ஐஐடி-யைச் சார்ந்த எந்த ஒரு நபரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.