Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஸ்கோர் செய்யும் கட்சி எது? - அரசியல் விமர்சகர்கள் அலசல்

சீமான் - கமல்ஹாசன்

``தமிழ்நாட்டு அரசியலில், சுயேச்சைகள்கூட வெற்றிபெற்ற வரலாறு உண்டு. ஆனால், ஒரு கட்சியை நடத்திவருகிற சீமானோ, கமல்ஹாசனோ தாங்கள் போட்டியிட்ட தொகுதியில்கூட தோல்வியைத்தான் பெற்றிருக்கிறார்கள். காரணம், இவர்களுடைய நோக்கம் என்பது அரசியல் கிடையாது'' என்கிறார் மனுஷ்ய புத்திரன்.

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஸ்கோர் செய்யும் கட்சி எது? - அரசியல் விமர்சகர்கள் அலசல்

``தமிழ்நாட்டு அரசியலில், சுயேச்சைகள்கூட வெற்றிபெற்ற வரலாறு உண்டு. ஆனால், ஒரு கட்சியை நடத்திவருகிற சீமானோ, கமல்ஹாசனோ தாங்கள் போட்டியிட்ட தொகுதியில்கூட தோல்வியைத்தான் பெற்றிருக்கிறார்கள். காரணம், இவர்களுடைய நோக்கம் என்பது அரசியல் கிடையாது'' என்கிறார் மனுஷ்ய புத்திரன்.

Published:Updated:
சீமான் - கமல்ஹாசன்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், நாம் தமிழர் தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த சீமானின் விமர்சனம் அரசியல் களத்தில் அனல் பறக்கவைத்துள்ளது.

``ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மக்களின் வாக்குகளைச் சேகரிப்பதற்காக நான் ஒருவன்தான் தமிழகம் முழுக்க சுற்றிச் சுழன்று பரப்புரையில் ஈடுபட்டுவருகிறேன். மற்ற கட்சியினரெல்லாம் வாக்காளர்களுக்குப் பணம், பட்டுப்புடவை, நகை என கையூட்டு கொடுத்து வாக்குகளைப் பறிப்பதற்குத்தான் வரிசைகட்டி போட்டி போடுகின்றனர்'' என்று ஆவேசமாக விமர்சித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

சீமான் தேர்தல் பிரசாரம்
சீமான் தேர்தல் பிரசாரம்

இன்று மாலையுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்வடையவிருக்கிறது. இந்த நேரத்தில், சீமானின் இந்த விமர்சனம், உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சி அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற பரபர கேள்வியை எழுப்பியிருக்கிறது. இது குறித்து அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான துரை கருணாவிடம் பேசினோம்.

``ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கு அதிகாரிகள், காவல்துறையினரின் ஒத்துழைப்பு எப்போதுமே இருக்கும். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான்கு மாதங்களில், 'தமிழ்நாடு நல்லதொரு திசையை நோக்கிப் பயணிப்பதான நம்பிக்கை'யை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருந்துவரும் கட்சியான தி.மு.க-வுக்கு வாக்களித்தால், நமக்கு மேற்கொண்டும் நன்மைகள் கிடைக்கும் என்ற பார்வை மக்கள் மத்தியிலே இருந்துவருகிறது. இது தி.மு.க-வுக்குச் சாதகமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேசமயம் அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், ஆளுங்கட்சியாக இருந்ததைவிடவும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அந்தக் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் மிகவும் வேகமானதாக இருக்கும். அதனால்தான், 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் இழந்த செல்வாக்கை இந்தத் தேர்தலில் மீட்டெடுப்போம்' என்று அ.தி.மு.க-வினர் சொல்லிவருகிறார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது, வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, அவர் சார்ந்த சமூக செல்வாக்கு, கட்சி செல்வாக்கு, மக்கள் ஆதரவு, பணபலம் என இந்த ஐந்து அம்சங்களும் வெற்றியைத் தீர்மானிக்கும்.

துரை கருணா
துரை கருணா

தேர்தல் நடைபெறக்கூடிய மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் நெல்லை, தென்காசி தவிர்த்து ஏழு மாவட்டங்களில் வன்னியர் வாக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க பிரிந்து சென்றுவிட்டதால், அதன் பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்கும்தான். ஆனாலும்கூட மாவட்ட ஒன்றிய அளவிலான பதவிகளில், 30-லிருந்து 35 சதவிகிதம் அ.தி.மு.க-வினர் வரலாம். இதுவே கிராம அளவிலான பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளில் ஒருசில இடங்களில் 40-லிருந்து 50 % தாண்டியும் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செல்வாக்கு இன்னமும் கிராமப்புறங்களில் வலுவாகவே இருக்கிறது. தி.மு.க-வினர் ஆளுங்கட்சியினராக இருப்பதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து திட்டங்களுக்கான உறுதிகளை மக்களிடம் கொடுக்கும்போது அதற்கான மதிப்பும் அதிகம். எனவே, தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொடுக்கும்!'' என்கிறார்.

இதையடுத்து, `கூட்டணியிலிருந்து பா.ம.க விலகிக்கொண்டதால், அ.தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் எத்தகைய பாதிப்பைக் கொடுக்கும்...' என்ற கேள்வியை அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் கேட்டோம். ``அ.தி.மு.க-வோடு பா.ஜ.க., த.மா.கா போன்ற கட்சிகள் கூட்டணியில்தான் இருக்கின்றன. பா.ம.க மட்டும் 'நாங்கள் தனித்து நிற்கிறோம்' என சொல்லிவிட்டார்கள். எனவே அவர்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வன்னியர் சமுதாய மக்கள் பா.ம.க-வில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றில்லை. தி.மு.க., பா.ஜ.க என எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க-வில்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

பா.ம.க-வில் பெரும்பான்மையாக வன்னியர்கள் இருந்திருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏழு மாவட்டங்களிலும் பா.ம.க பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லையே! இப்போதும்கூட, வன்னியர் சமுதாய மக்கள் பா.ம.க-வை நம்பவில்லை. அதனால்தான், '10.5 % இட ஒதுக்கீட்டைக் கொடுத்த கட்சி என்ற வகையில், அ.தி.மு.க-வுக்கு நாங்கள் வாக்களிப்போம்' என்று எங்களிடம் உறுதி கொடுத்திருக்கிறார்கள்.

இது தவிர, சமையல் எரிவாயு மானியம், கல்விக் கடன் ரத்து, மகளிருக்கு மாதம்தோறும் உதவித்தொகை எனக் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை தி.மு.க அரசு. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரின் வாக்குகளும்கூட அ.தி.மு.க-வுக்குத்தான் கிடைக்கப்போகிறது!'' என்கிறார் நம்பிக்கையோடு.

இதைத் தொடர்ந்து, `அரசியல் கட்சியினர் அனைவரும் மக்களுக்குப் பணம், பட்டுப்புடவை, நகை எனக் கையூட்டு கொடுக்கிறார்கள்' என்ற சீமானின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தி.மு.க செய்தித் தொடர்பாளர் மனுஷ்ய புத்திரனிடம் பேசினோம்.

``எங்களுடைய பிரசாரம் என்பது எங்களுடைய ஆட்சிதான்! ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த நான்கு மாதங்களில் நாங்கள் செய்திருக்கும் ஒவ்வொரு திட்டமும் அடித்தட்டு மக்கள்வரை அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. கொரோனா நிவாரண நிதி, பால்விலை குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி என தி.மு.க அரசு செயல்படுத்திய நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைந்துவிட்டன. அந்தவகையில், தேர்தல் பிரசாரம் என்று நாங்கள் மக்களைச் சந்திப்பதற்கு முன்பாகவே, எங்களுடைய திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துவிட்டன. எனவே, தி.மு.க-வுக்கு நன்றி தெரிவிக்கத்தான் எங்களது பிரசாரங்களில் மக்கள் ஒன்றுகூடுகிறார்கள்.

சீமான்
சீமான்

ஆனால், 'தி.மு.க எதையுமே செய்யவில்லை' என்ற பச்சைப் பொய்யை அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. கடந்த 10 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து எதையுமே செய்யாமல் அரசு கஜானாவை மட்டும் காலியாக்கிவிட்டுச் சென்றிருக்கும் அ.தி.மு.க-வினரை மக்கள் நம்புவார்களா அல்லது ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களிலேயே 40 % அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்ட தி.மு.க-வை மக்கள் நம்புவார்களா..!

கடந்த 10 வருடங்களாகவே சீமான் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும்கூட ஒரு சட்டமன்ற உறுப்பினராகக்கூட வெற்றிபெற முடியாத பரிதாப நிலையிலுள்ள கட்சிதான் நாம் தமிழர் கட்சி; பரிதாபமான தலைவர்தான் சீமான்! எனவே தமிழ்நாட்டு அரசியலில், சீமானுக்கு என்று எந்த இடமும் கிடையாது. முழுக்க முழுக்க அவர் ஒரு காமெடியன்!

யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்காக மட்டும் பேசிக்கொண்டிருப்பவர் சீமான். மற்றபடி அரசியல் பற்றிய புரிதலோ, அறிவோ சீமானுக்குக் கிடையாது. மக்களிடம் வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்கள் அளித்த தீர்ப்பால் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் தி.மு.க தொடர்ந்து தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறது. ஆனால், அந்த மக்களைக் கேவலப்படுத்துவதுபோல், 'காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டார்கள்' என்று தொடர்ந்து பேசிவருகிறார் சீமான்.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

தமிழ்நாட்டு அரசியலில், சுயேச்சைகள்கூட வெற்றிபெற்ற வரலாறு உண்டு. ஆனால், ஒரு கட்சியை நடத்திவருகிற சீமானோ, கமல்ஹாசனோ தாங்கள் போட்டியிட்ட தொகுதியில்கூட தோல்வியைத்தான் பெற்றிருக்கிறார்கள். காரணம், இவர்களுடைய நோக்கம் என்பது அரசியல் கிடையாது. இவர்கள் இருவருமே பா.ஜ.க-வின் நேரடியான ஏஜென்ட்டுகள். இங்கே இருக்கக்கூடிய திராவிட வாக்குவங்கியை உடைப்பதற்காக அரசியலில் இறக்கிவிடப்பட்டவர்கள். எனவேதான் தமிழக மக்கள், இவர்கள் இருவரையும் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்'' என்கிறார்.