Published:Updated:

`முன்வாசல் விழுப்புரம்; பின்வாசல் கள்ளக்குறிச்சி!'- தந்தை மகனைப் பிரித்த முகவரி கலாட்டா

வீட்டின் முன்வாசல் ஒரு மாவட்டத்திலும் பின்வாசல் வேறொரு மாவட்டத்திலும் வருமாறு பிரிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனி மாவட்டங்கள்
தனி மாவட்டங்கள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கிறது கருவேப்பிலை பாளையம் (தற்போது இந்தப் பகுதியில் பாதி திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் இருக்கின்றது). சுமார் 6,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 2,800 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்தால் இந்த மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

கருவேப்பிலை பாளையம்
கருவேப்பிலை பாளையம்

தற்போது சிறுத்தனூர், மடப்பட்டு, சிறுளாப்பட்டு, காந்தலவாடி என 4 ஊராட்சிகள், 8 ஊராட்சி வார்டுகள், 2 காவல் நிலையங்கள் என்று பிரிந்திருப்பதால் ஊராட்சி அலுவலகங்களுக்குச் செல்ல நான்குபுறமும் அலைய வேண்டி இருப்பதாக அரசிடம் மனு அளித்துவருகின்றனர் இப்பகுதி மக்கள்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தது தமிழக அரசு. ஏற்கெனவே பல சிக்கல்களைச் சந்தித்து வந்த இப்பகுதி மக்கள், இந்த மாவட்ட பிரிப்பால் மேலும் சிக்கலில் தவிக்கிறார்கள்.

இரண்டு மாவட்டங்களில் வரும் வீடுகளில் ஒன்று
இரண்டு மாவட்டங்களில் வரும் வீடுகளில் ஒன்று

இந்த ஊரின் சில தெருக்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் சில தெருக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருமாறு பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது. அதே வீட்டில் இருக்கும் அப்பாவின் குடும்ப அட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் திருமணமான மகனின் குடும்ப அட்டை விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கிறது.

இந்த ஊரிலிருந்து 16 கிலோமீட்டரில் விழுப்புரம் இருக்கும் நிலையில், சுமார் 100 கிலோமீட்டரில் இருக்கிறது கள்ளக்குறிச்சி. கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கு ஒருநாள் ஆகிறது என்பதால்தான் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வீடுகளில் ஒன்று
இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வீடுகளில் ஒன்று

ஆனால், தற்போது 2 மாவட்டங்களாகப் பிரித்த பின்னரும் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமா என்று புலம்பும் இப்பகுதி மக்கள், `இந்த ஊரை ஒரே ஊராட்சியாக மாற்றி, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்' என்று இதுவரை சுமார் 5,000 மனுக்கள் வரை கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள்.