'மாநகராட்சிக் கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் மரணம்'
'வீட்டுக் கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் நடைப்பிணமாக வாழும் கொடுமை!'
இப்படிப்பட்டச் செய்திகளை பத்தோடு பதினொன்றாகப் படித்துவிட்டுக் கடப்பதுதான் பெரும்பாலும் நடக்கும். அதிபட்சமாக சிலர் 'உச்' கொட்டுவதுண்டு. என்றாலும், வாரத்துக்கு ஒரு தடவையாவது இப்படிப்பட்ட செய்திகள் வந்தபடியேதான் இருக்கின்றன. இதையெல்லாம் கேள்விப்படும், படிக்கும் பலரும் 'செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட்விட முடிந்த நம்மால், இந்த மூன்று, நான்கடி கழிவுநீர்த் தொட்டி, மலக்குழிகளை சுத்தம் செய்யும் கருவியைக் கண்டறிய முடியவில்லையே' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு, அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுவோம்!
ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் வழிகள் இருந்தும், எதையுமே கடைப்பிடிக்காமல் செயல்படுவதுதான் இத்தகைய துயரங்கள் தொடர்வதற்கு பெரும்பாலும் காரணம் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். 'இயந்திரங்களைப் பயன்படுத்துவது செலவு மிகுந்த வேலை' என்று அப்பாவி ஏழைத் தொழிலாளர்களின் உயிருக்கு உலைவைக்கும் வேலையை மக்களே தொடர்வது ஒருபுறமிருக்க, ஆண்டுதோறும் இதற்கென இயந்திரங்களை வாங்கிக் குவித்தாலும், கொஞ்சம்கூட ஈவுஇரக்கமின்றி தொழிலாளர்களை அச்சுறுத்தி, கழிவுநீர்த்தொட்டி, மலக்குழி என்று இறங்கி வேலை செய்ய வைத்துக் கொண்டுள்ளது அதிகாரவர்க்கம்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS'கழிவுநீர்த் தொட்டியில் மனிதர்கள் இறங்கக்கூடாது. மலக்குழியில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது' என்றெல்லாம் விதிகள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் வரை வெளியிடப்பட்ட அழுத்தமான உத்தரவுகளும் இருக்கின்றன. ஆனால், அனைத்தும் இந்த அதிகார வர்க்கத்தால் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. விளைவு, அப்பாவி ஏழைகளின் உயிர்கள் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன.
இதோ... கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இரவில், மதுரை மாநகராட்சியின் கழிவுநீர் தொட்டியின் ராட்சத மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணியின்போது மூன்றுபேர் விஷவாயு தாக்கி இறந்துபோயுள்ளனர். உடனே, 'குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்' என்றெல்லாம் அரசாங்கத் தரப்பில் ஓடோடி வந்து அறிவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன், இந்தப் பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் மீது கவனக்குறைவாக இருந்து மரணத்தை ஏற்படுத்தியது என்கிற பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த விஷவாயு விஷயத்தையே அதே கழிவுநீர்க் குழிக்குள் போட்டு மூடிவிட்டது அதிகார வர்க்கம். இந்தப் பணிகளை முன்னெடுக்கச் சொன்ன மாமன்ற உறுப்பினர் மற்றும் அதை சிரமேற்று செயல்பட்டு, அப்பாவிகளின் உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் மீது குறைந்தபட்சம் அலுவல் ரீதியிலான விசாரணைகூட நடத்தப்படவில்லை என்பது பெருங்கொடுமை!
ஏழைகளுக்காகவே ஆட்சிக்கட்டிலில் ஏறியதாக / ஏறியிருப்பதாக / ஏறவிருப்பதாக அடிக்கடி மேடைகளில் முழக்கமிடும் எந்தவொரு அரசியல்வாதியும் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. குறைந்தபட்சம், அனுதாபம்கூட தெரிவிப்பதில்லை. ஆனால், பதவி, பகட்டு இதற்கெல்லாம் துளிகூட ஆசைப்படாத பொதுநல இயக்கவாதிகள்தான் காலம்தோறும் கவலையை வெளிப்படுத்துகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதோ... இப்போதும்கூட அப்படித்தான். மதுரையில் மூன்று உயிர்கள் பறிபோயிருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, அரசாங்க ஊழியர்களின் அயோக்கியத் தனத்தை தோலுரிப்பதற்காக 'உண்மை அறியும் குழு'வாக இணைந்துள்ளனர் சமூக அக்கறையுள்ள சிலர்.
மக்கள் சிவில் உரிமைக்கழகம் [PUCL ] அமைப்பின் தேசிய செயலாளர் பேராசிரியர் இரா.முரளி, மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.ஜான் வின்சென்ட், மாநிலப் பொருளாளர் பி.கண்மணி, செயற்குழு உறுப்பினர்கள் சோ.தியாகராசன், செல்லமணி, சமநீதி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் கனகவேல், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் குமரன், மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் ஹரீஷ் ஆகியோரைக் கொண்ட உண்மை அறியும் குழு, ஏப்ரல் 30 அன்று களஆய்வை மேற்கொண்டு, இப்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையைப் படிக்கும்போது... விதிமீறல், அராஜகம், அயோக்கியத்தனம் என அனைத்தின் ஒட்டுமொத்த உருவமாக அரசாங்க ஊழியர்களும், அரசியல்வாதிகளும் திகழ்வது அப்பட்டமாகவே தெரிகிறது. ஆனால், மூன்று உயிர்களைப் பலிகொண்டதற்காக கொஞ்சம்கூட அந்த ஜென்மங்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை என்பதுதான் வேதனை. உண்மை அறியும் குழுவின் கேள்விகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கும் தொனி, உச்சபட்ச அதிகாரத் திமிர் கொண்டதாகவே இருக்கிறது. ஏதோ இவர்களெல்லாம் வானத்தில் பிறந்து வந்தவர்கள் போலவும், எதற்காக உங்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்பதுபோலவுமே நடந்துகொண்டிருக்கிறார்கள்.
இனி அறிக்கையிலிருந்து...
மதுரை மாநகரில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அறுபது இடங்களில் அவ்வாறான கழிவு நீரேற்றுத் தொட்டிகள் உள்ளன. இறுதியாக அவனியாபுரம் வெள்ளக்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. இப்பணிக்காக, சுமார் 270 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். ஹேப்பி ஏஜென்சி என்ற நிறுவனத்திடம் இருந்த இதற்கான ஒப்பந்தம், 2021 டிசம்பர் முதல் சென்னையைச் சேர்ந்த வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பழங்காநத்தம் நேருநகர், கந்தசாமி தெருவில் 30 அடி ஆழம், எட்டு அடி விட்டம் கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி உள்ளது. அடியில் இரண்டு அடி உயரத்தில் இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டு அவற்றின் மீது 500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நீர்மூழ்கி மோட்டார்கள் இரண்டு வைக்கப்பட்டுள்ளன. காலை நேரத்தில் ஒரு மோட்டாரும் மாலை நேரத்தில் ஒரு மோட்டாருமாக மாற்றிமாற்றி இயக்கப்படும். பழுது ஏற்பட்டால் மோட்டாரைச் சங்கிலியால் பிணைத்து வெளியில் எடுத்து பழுது நீக்கவேண்டும்.
ஒரு மோட்டார் பழுதான நிலையில், தொட்டியிலிருந்து கழிவுநீர் சரிவர வெளியேற்றப்படாததால் குடியிருப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 70-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் (மாமன்ற உறுப்பினர்) அமுதாவின் கணவர் தவமணி மற்றும் மாநகராட்சி உதவிப் பொறியாளர் சக்திவேல் ஆகியோர் அறிவுறுத்தல் தரவே, ஏப்ரல் 20-ம் தேதி புதன்கிழமையன்று சரவணக்குமார், சிவக்குமார், இலட்சுமணன், பாண்டி, சக்திவேல், கார்த்தி என ஆறு பேர் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவுநீரை வெளியேற்றி ஒரு மோட்டாரை வெளியில் எடுத்துச் சரிசெய்யும்போதே இரண்டாவது மோட்டாரும் பழுதாகி நின்றுவிட்டது. இதனால், முதல் மோட்டாரில் ‘ஹோஸ்’ பைப் பொருத்தி இறக்கி இயக்கியிருக்கிறார்கள். பணி முடியாததால் மறுநாள் இரவு தொடரலாம் என விட்டுச் சென்றுள்ளனர்.

இரவு, பகல் எதுவானாலும் கழிவுநீர் தொட்டிக்குள் ஆட்கள் இறங்கி வேலை பார்க்கக் கூடாதென பத்து ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில், பகலில் தொட்டியில் இறங்க அனுமதிக்காத மாநகராட்சி பொறியாளர்கள், இரவில் மட்டும் சட்டவிரோதமாக பணி செய்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அந்தத் தொட்டியில் மின்விளக்கும் பொருத்தப்படவில்லை. மறுநாள் வியாழக்கிழமை இரவு 9 மணிக்குமேல் மீண்டும் பணியைத் தொடர்ந்துள்ளனர். ஏற்கெனவே வேலை பார்த்தவர்களில் இரண்டு பேர் அசதியின் காரணமாக வரவில்லை. மற்ற நான்குபேர் சென்றுள்ளனர்.
இரவு 9.30 மணிக்கு மோட்டார் மூலம் கழிவுநீரை வெளியேற்றிவிட்டு, லட்சுமணன் என்பவர் உள்ளே இறங்கியுள்ளார். தொட்டிக்குள் நல்லநீரை நிரப்பும் லாரி போன்ற வசதிகள் இல்லை. பாதுகாப்புப் பயிற்சிகளோ, கவசங்களோ இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. நான்கு திசைகளிலிருந்தும் நான்கைந்து குழாய்களில் கழிவுநீர் உள்ளே கொட்டும், பணி செய்யும்போது அந்த நீர் உள்ளே வராமல் தடுப்பதற்கான தடுப்புக்கதவு வசதியும் இல்லை. உள்வரத்துக் குழாய்களில் அடைப்புகள் இருந்ததால் நீர் வரவில்லை என்று லட்சுமணன் உள்ளே இறங்கி வேலைப் பாதித்த நிலையில், விஷவாயு தாக்க ஆரம்பித்ததோடு, கழிவுநீரும் உள்ளே கொட்டத் தொடங்கியிருக்கிறது.
அபயக்குரல் எழுப்பியபடியே அவர் மயக்கமடைய, சிவக்குமார் உள்ளே இறங்கி, லட்சுமணனைத் தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு இரண்டு படிகள் ஏறிய நிலையில், அவரும் மயங்கியுள்ளார். பதறிப்போன சரவணக்குமாரும் உள்ளே இறங்க, மேலே நின்றிருந்த கார்த்திக்கை கயிற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். ஆனாலும், தொட்டியில் கழிவுநீர் தொடர்ந்து நிரம்பிக் கொண்டே இருக்க, மூவரும் மூழ்கி இறந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில், ஏப்ரல் 22-ம் தேதியன்று அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவால் மரணம் சம்பவித்ததாக வி.ஆர்.ஜி கன்ஸ்ட்ரக்ஷஷன் நிறுவன மதுரை மேலாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் லோகநாதன், நிறுவன உரிமையாளர் சென்னையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்தப் பிரிவுகளின்படி அதிகபட்சம் இரண்டாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம்.

போலீஸில் புகாரளித்த உதவிப் பொறியாளர் என்.சக்திவேல், 'மின்மோட்டாரை சரி செய்யும்போது உள்ளே இறங்கிய ஒருவர் இறந்துவிட்டதாக மாமன்ற உறுப்பினர் அமுதாவின் கணவர் தவமணி தனக்குத் தகவல் தெரிவித்தார். என்னிடம் எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் மின் மோட்டார் பழுதைச் சரி செய்வதற்காக மூன்று பேரை வி.ஆர்.ஜியின் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் நியமித்துள்ளனர். எவ்வித உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இரவு நேரத்தில் போதிய மின் வசதி இல்லாமல் சரியான மேற்பார்வையின்றி வேலை செய்யக்கூடாதென்று தெரிந்தும் அஜாக்கிரதையாக மின் மோட்டார் பழுது செய்யச் சொன்னதால் இறப்பு நேர்ந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
ஆகக்கூடி, மாநகராட்சி பொறியாளர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ, மாமன்ற உறுப்பினருக்கோ இந்த விஷயத்தில் எந்தப் பொறுப்புமில்லை, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம்தான் பொறுப்பு என்றே காட்ட முயல்கின்றனர்.
உண்மை அறியும் குழுவின் சார்பில் மாமன்ற உறுப்பினர் அமுதாவை (தி.மு.க) கைப்பேசியில் தொடர்புகொண்டபோது பேசிய அவருடைய கணவர், ''ஜூன் 10-ம் தேதி மகனுக்குத் திருமணம். இருவரும் பத்திரிக்கை கொடுக்கும் பணியில் உள்ளோம். எதுவாக இருந்தாலும் ஜூன் 12-ம் தேதிக்குப் பிறகு அழையுங்கள்'' என அழைப்பைத் துண்டித்திருக்கிறார்.
மூன்றாவது மண்டல உதவி செயற்பொறியாளர் அய்யப்பனைச் சந்தித்துள்ளனர் உண்மை அறியும் குழுவினர். “நடந்தது ஒரு விபத்து. அரசு அறிவித்தபடி வி.ஆர்.ஜி நிறுவனம் மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சம் வீதம் கொடுத்துள்ளது. இனி அவ்வாறு விபத்துக்கள் நடக்காது. ஆணையாளர் கார்த்திகேயன் எல்லா நடவடிக்கைகளும் எடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
நகரப்பொறியாளார் அரசு, “இது விபத்துதான். உடற்கூராய்வு முடிந்துவிட்டது. அறிக்கை வந்த பின் இறப்புக்கான காரணம் தெரியும், உரிய நடவடிக்கை எடுப்போம்” என்பதோடு முடித்துக் கொண்டிருக்கிறார்.
மே 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாநகராட்சி ஆணையாளரைச் சந்திக்க தொடர் முயற்சிகளை உண்மை அறியும் குழுவினர் மேற்கொண்டனர். நீண்ட காத்திருப்புக்குப்பின் அவர்களை அழைத்த ஆணையாளர் கே.பி. கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், “நீங்கள் பி.யு.சி.எல் என்கிறீர்கள். அரசுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்கிறீர்கள். இது ஆணையாளர் அலுவலகமென்றும் எனது பெயர்ப்பலகையும் வைத்து நான் அமர்ந்திருக்கிறேன். ஆனால், நீங்கள் யாரென்று எப்படி நான் நம்புவது? உங்கள் லெட்டர் பேடில் எழுதிக் கொடுங்கள், தகவல் தருகிறோம்” என்று சொல்ல, அதன்படியே கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் மேயர் வி.இந்திராணியைச் (தி.மு.க.) சந்திக்க இந்த உண்மை அறியும் குழு எடுத்துக் கொண்ட முயற்சிகள், இரண்டு நாட்களாகியும் ஈடேறவில்லை. இதையெல்லாம்விட கொடுமை, இன்று வரை பணியிலிருக்கும் மேலாளர் ரமேஷைத் தொடர்புகொண்டபோது, ''நான் ஜனவரி மாதமே பணியிலிருந்து விலகிவிட்டேன். எனக்கு எதுவும் தெரியாது'' என்று சொன்னதுதான் உச்சபட்ச அதிர்ச்சி.

தீயணைப்பு நிலைய அதிகாரி கே.பி.பாலமுருகனிடம், ''விஷவாயு இருக்கிறதா என முன்கூட்டியே சோதிக்கும் உபகரணம் ஏதும் இல்லையா?'' எனக் கேட்டபோது, ''தீக்குச்சியை உரசிப் போட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடுமே'' என்றார் சட்டென்று. இறந்து போனவர்களில் லட்சுமணனின் வயது 31. அவர் மனைவி பரமேஸ்வரியின் வயது 22 திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகின்றன. 45 வயதான சிவக்குமாரின் மனைவி ஜெகதா. இவர்களுக்கு பி.காம் படித்துமுடித்துள்ள ஆர்த்தி என்ற மகளும், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
சரவணக்குமாருக்கு வயது 32. இவருடைய மனைவியின் பெயர் காளிஸ்வரி. தர்னேஷ் (வயது 6) தன்யாஸ்ரீ (வயது 3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இறந்துபோன குடும்பங்களுக்கு வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் தலா ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்ததுடன் ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பீடு செய்துள்ளதாகவும் தெரிகிறது. கூடவே, அரசுவேலை தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செயதிருக்கிறார்கள்.
ஆனால், கழிவுநீர் தொட்டியில் விஷவாயு வரக்கூடும், மரணம் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்தே அதில் இறங்கி வேலைபார்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்த மேலாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் லோகநாதன், தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய உரிமையாளர் விஜய் ஆனந்த், தொட்டிக்குள் இறங்க அனுமதி கொடுத்த இளநிலைப் பொறியாளர் என்.சக்திவேல், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் ஆகிய அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், மரணம் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்தே ஆபத்தான பணியில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்க இயலும். இதுதான் மேற்கொண்டு இத்தகைய மரணங்கள் நிகழ்வதைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறும்.
உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்...
இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1) (யி) ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். சிறப்பு அதிகாரம் பெற்ற துணைக் கண்காணிப்பாளர் மூலம் விசாரணை நடத்த ஆவண செய்யவேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசாணைப்படி அதிகரிக்கப்பட்ட இழப்பீடான ரூ.12 லட்சத்தைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பையும் வழங்கவேண்டும்.
கழிவுநீர் அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை போன்ற ஆபத்தான பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதைக் கைவிட்டு, நவீன தொழில்நுட்பத்தை கையாளுவதை மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் உறுதி செய்யவேண்டும். தவிர்க்க இயலாத சூழலில் போதிய பாதுகாப்பு கவசங்கள் அணிவதை உறுதி செய்யவேண்டும்.
கையால் மலம் அள்ளுவதைத் தடுக்கும் சட்டம் 2013-ன் பிரிவு 24-ன்படி மாவட்ட மற்றும் உட்கோட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
கட்டாயம் தொட்டிக்குள் இறங்கிப் பணிபுரிய வேண்டிய நிலை வந்தால் விதிகளில் உள்ளபடி தலைமை நிர்வாக அதிகாரியின் ஒப்புதலோடு, பாதுகாப்பு உபகரணங்களுடன் பகல் நேரத்தில் மட்டுமே வேலை நடத்துவதை உறுதி செய்யவேண்டும்.
பத்து தொட்டிகளுக்கு ஒரு மேலாளர் நியமிக்கப்படவேண்டும்.
பணியாளர்களுக்கு அந்தந்த மண்டல இளநிலை மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் மூலமாகவே பணி உத்தரவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.
இறந்தவர்களின் குழந்தைகளுக்கு அரசுக் கல்வி உதவித்தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
குடும்பத்தினருக்கு வீட்டுமனை, வீடு கட்ட நிதி உதவி வழங்கவேண்டும்.
தகுதியுள்ள ஒருவருக்கு தொழிற்பயிற்சியும் தொழில் தொடங்க கடன் உதவியும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்