Published:Updated:

பிஞ்சு உயிரைப் பறித்த பள்ளி வாகனம்: காதுகேளாத ஓட்டுநர், பள்ளி நிர்வாகம்; யார் காரணம்?

School Bus ( Photo by Element5 Digital on Unsplash )

நீண்ட நேரப் பேருந்து பயணம் அவர்களை சோர்வடையச் செய்வதோடு வகுப்பிலும் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதிகாலையில் மிகவும் சீக்கிரமாக எழுந்து கிளம்ப வேண்டிவரும். இதுவும் அவர்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைப்பதை பாதிக்கும்.

பிஞ்சு உயிரைப் பறித்த பள்ளி வாகனம்: காதுகேளாத ஓட்டுநர், பள்ளி நிர்வாகம்; யார் காரணம்?

நீண்ட நேரப் பேருந்து பயணம் அவர்களை சோர்வடையச் செய்வதோடு வகுப்பிலும் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதிகாலையில் மிகவும் சீக்கிரமாக எழுந்து கிளம்ப வேண்டிவரும். இதுவும் அவர்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைப்பதை பாதிக்கும்.

Published:Updated:
School Bus ( Photo by Element5 Digital on Unsplash )

சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனத்தைக் கைதுசெய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு காது கேட்காது என்றும் சில வருடங்களுக்கு முன்பே பள்ளி நிர்வாகத்திடம் ஓய்வு கேட்டுள்ளார் என்றும் சில பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

School bus
School bus
Photo by Robin Jonathan Deutsch on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், பள்ளி நிர்வாகம் அவரின் லைசன்ஸை வாங்கி வைத்துக்கொண்டு, கட்டாயப்படுத்தி வேன் ஓட்டவைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்பது உள்ளிட்ட சில காரணங்களால் வயது முதிர்ந்தவர்களைப் பள்ளி நிர்வாகம் வேலைக்கு நியமிப்பது அல்லது வைத்திருப்பது குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எல்லாம் அவை நடந்து முடிந்த பிறகே எல்லோரும் பேசுகிறார்கள். இதற்கு முன்பு தாம்பரத்திலுள்ள பள்ளியில் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தபோதும் தாமதமாகவே அது குறித்துப் பேசப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்புக்கென இருக்கும் தர நிர்ணயங்கள், வழிமுறைகள், அதற்கான சட்டங்கள், பாதுகாப்பு முறைகள் சரியாகச் செயல்படவில்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.

குழந்தைகள் உரிமைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன்
குழந்தைகள் உரிமைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன்

பள்ளி வாகனங்களின் ஓட்டுநரின் இருக்கை, அனைத்து ஜன்னல்களிலும் கம்பிகள், அந்தக் கம்பிகளின் அளவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் ஓட்டுநரோ கிளீனரோ மட்டும் கிடையாது. இதுபோன்ற நபர்களை நியமித்த பள்ளி நிர்வாகத்தினர்தான். ஓய்வு கேட்டவரைக் கட்டாயப்பயடுத்தி பணிசெய்ய வைத்தது பள்ளி நிர்வாகத்தின் கூடுதல் குற்றமாகத்தான் கணக்கில்கொள்ள வேண்டும்.

ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை பள்ளி நிர்வாகம் தெரிந்து வைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. ஒரு ஓட்டுநருக்கான தகுதி என்ன என்பதும் அதற்கான விதிமுறைகளும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணமாக அமைகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு விஷயங்கள் சார்ந்து என்னென்ன அம்சங்கள் நடைமுறையில் உள்ளன என்பதை நோட்டீஸ் போர்டில் ஒட்டிவைக்க வேண்டும்.

School (Representational Image)
School (Representational Image)
Photo: Vikatan / Balasubramanian.C

பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் அவர்களுக்குக் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டும். அவற்றைச் சரியாக கண்காணிக்காத பட்சத்தில் அந்த அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கையை விரைவில் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்புக்கு தேவையான வழிகாட்டுதல்கள் எல்லாம் காகிதங்களில் மட்டும் இருந்தால் போதாது, மக்களின் மனங்களில் இருக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளிகளுக்கு நடந்து சென்று கல்வியைப் பயின்று வீடு திரும்புவதுதான் பாதுகாப்பான ஒன்றாக நான் கருதுகிறேன். ஆகையால் பெற்றோர் பள்ளிகளின் கட்டடங்களையும், ஸ்மார்ட் வகுப்புகளையும், கணினிகளையும் மட்டும் பார்க்காமல் பள்ளிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதையும் பார்த்து, அருகிலிருக்கும் பள்ளிகளில் சேர்ப்பது நல்ல தீர்வாக இருக்கும்" என்றார்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளியை எவ்வாறு தேர்வுசெய்ய வேண்டும் என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சிமோனாவிடம் கேட்டோம்.

உளவியல் நிபுணர் சிமோனா
உளவியல் நிபுணர் சிமோனா

``குழந்தைகளைப் பெரிய பள்ளியில் சேர்க்கிறோம் என பல கி.மீ தொலைவில் அமைந்துள்ள பள்ளியில் பல பெற்றோர் சேர்க்கின்றனர். பிரபலமான பள்ளியில் படித்தால்தான் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும் என்ற எண்ணம் பெரும்பாலும் நிறைய பெற்றோரிடம் பார்க்க முடியும். ஆனால் அதிக தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்வது குழந்தைகளுக்கு பல வகைகளில் அழுத்தத்தையே கொடுக்கும்.

நீண்ட நேரப் பேருந்து பயணம் அவர்களை சோர்வடையச் செய்வதோடு வகுப்பிலும் முழு கவனத்தோடு ஈடுபட முடியாது. தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதிகாலையில் மிகவும் சீக்கிரமாக எழுந்து கிளம்ப வேண்டிவரும். இதுவும் அவர்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைப்பதை பாதிக்கும். குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் வயது வரும் வரை, வீட்டிற்கு அருகிலேயே உள்ள நல்ல பள்ளியில் சேர்க்கலாம். அதிகபட்சமாக 3 கி.மீ தொலைவில் பள்ளி இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஏதாவது அவசரம், உடல்நலக்குறைவு என எந்தப் பிரச்னை வந்தாலும் பெற்றோர் விரைந்து செல்ல முடியும்.

சில பள்ளிகள் குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது, குறிப்பிட்ட கிழமைகளில் இந்த உணவுதான் கொண்டு வர வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கின்றனர். இதுபோன்ற நிபந்தனைகள் தனிமனித உரிமை மீறல். மதம் சார்ந்து இயங்கும் பள்ளிகள், பாலின பாகுபாடு உள்ள பள்ளிகள், மாணவிகள் மாணவர்கள் பேசிக்கொள்ளக்கூடாது என்பன போன்ற பழைமையான சிந்தனை உள்ள பள்ளிகளையும் தவிர்க்கலாம். பள்ளி என்பது கல்வி கற்பிப்பதோடு நிற்காமல் முழுமையான ஒரு மனிதனை உருவாக்க வேண்டும். நல்ல மதிப்பெண் எடுக்க வைப்பது மட்டும் நல்ல பள்ளி கிடையாது என்பதை பெற்றோர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.