Published:Updated:

தாசில்தார் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம்... ஏன் தெரியுமா?

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

தாசில்தார் கட்டுப்பாட்டின் கீழ் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பியை ஓவர் ரூல் செய்து, வருவாய்த்துறை அதிகாரிகளின் கைப்பிடிக்குள் காவல்நிலையம் சென்றுள்ளது. எதற்காக இந்த நடவடிக்கை?.. தாசில்தாரின் அதிகாரம் என்ன?...

சாத்தான்குளம் இருவர் மரணம் தொடர்பான விவகாரத்தில் தூத்துக்குடி காவல்துறை அல்லோலகல்லோலப்படுகிறது. ஏற்கெனவே மூன்று காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடுவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் மகராஜன் என்கிற காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏனைய சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

நீதிமன்ற உத்தரவுப்படி சமூகப் பாதுகாப்புத்துறை தனி தாசில்தார் செந்தூர்ராஜனின் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன?, காவல்நிலையத்தில் வருவாய்த்துறையைச் சேர்ந்த தாசில்தாரின் பணி என்னவாக இருக்கும்?.. கேள்விகளுடன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முருகைய்யனிடம் பேசினோம்.

சாத்தான்குளம்: `விடிய விடிய அடி;  லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

``ஆர்.டி.ஓக்களுக்கு முதல்நிலை நிர்வாக நடுவர், தாசில்தார்களுக்கு இரண்டாம் நிலை நிர்வாக நடுவருக்கான அதிகாரங்கள் உண்டு. துணை தாசில்தார்களாக ஒருவர் பணிபுரியும் போதே, இரண்டு மாதங்கள் காவல்துறையிலும் நான்கு மாதங்கள் நீதித்துறையிலும் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் தாசில்தார்களாகப் பதவி உயர்வு பெறும்போது, உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி இரண்டாம் நிலை நிர்வாக நடுவருக்கான அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படும். ஒருபகுதியில் மத ரீதியிலான, ஜாதி ரீதியிலான கலவரம் ஏற்பட்டால், அப்பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் விசாரணை நடத்துவதற்கும் தாசில்தார்களை நியமிப்பது அரசின் வழக்கம். சூழலுக்கு ஏற்றவாறு இரண்டாம் நிலை நீதிமன்ற நடுவராக அரசின் முடிவுகளை எடுப்பதற்கு தாசில்தார்களுக்கு அதிகாரமுள்ளது.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

1970-களில் ரயில்வே காவல்நிலையங்கள் தாசில்தாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உதாரணங்கள் உள்ளன. அதேபோல, டெல்டாவிலும் கோவையிலும் விவசாயிகள் போராட்டத்தின் போது அங்குள்ள சில காவல்நிலையங்கள் தாசில்தார்களின் கட்டுப்பாட்டில் இயங்கின. இதன் அடிப்படையில்தான் சாத்தான்குளம் காவல்நிலையத்தை நிர்வகிப்பதற்கு ஒரு தாசில்தாரை நியமிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. காவல்நிலையத்தில் பதியப்படும் வழக்குகள், வழக்கு விசாரணைகள் எதிலிலும் இந்த தாசில்தார் தலையிட மாட்டார். ஏனைய நிர்வாகம் முழுவதும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும்” என்றார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தி வரும் நிலையில், தடயங்களை யாரும் அழித்துவிடக் கூடாது என்பதற்காகவும் தாசில்தாரிடம் சாத்தான்குளம் காவல்நிலைய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாம். ஒருமாவட்டத்தைப் பொறுத்தவரையில் காவல்துறைக்கு மாவட்ட எஸ்.பிதான் உயரதிகாரி. காவலர்களின் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை எஸ்.பிதான் கவனித்துக்கொள்வார்.

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்

அதேநேரத்தில், மாவட்ட நீதிபதி என்கிற அந்தஸ்த்திலுள்ள மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல்துறையில் நடவடிக்கை எடுக்க அதிகாரமுள்ளது. இதனடிப்படையில் தான், சாத்தான்குளம் விவகாரத்தில் தொடர்புடைய ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு எஸ்.ஐக்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். தற்போது தாசில்தார் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாத்தான்குளம் காவல்நிலையம் மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு