Published:Updated:

சென்னை: மனைவியின் சடலத்துடன் மூன்று நாள்... சோகத்தில் உயிரைவிட்ட அரசு ஊழியர்!


உயிரிழந்த மனைவி
உயிரிழந்த மனைவி ( representational image )

சென்னையில் மனைவி உயிரிழந்ததும், அதை யாருக்கும் தெரிவிக்காத ஓய்வுபெற்ற அரசு ஊழியர், சடலத்துடனே தங்கியிருந்திருக்கிறார். துர்நாற்றம் வீசியதால், பெண்ணின் சடலத்தை மீட்ட போலீஸார் ஓய்வுபெற்ற அரசு ஊழியரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வசித்துவந்தவர் பொன்னுமணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரின் மனைவி கோமளா என்கின்ற மலையாளத்தம்மாள். இந்தத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. அதனால் கணவனும் மனைவியும் தனியாக வாழ்ந்துவந்தனர். கடந்த சில மாதங்களாக கோமளாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் வீட்டைவிட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். பொன்னுமணிதான் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க வெளியில் வருவார். மேலும், இந்த வயதான தம்பதியர் அக்கம்பக்கத்திலுள்ள யாரிடமும் பேச மாட்டார்கள். அதனால் இவர்களைப் பற்றிய விவரம் அந்தத் தெருவிலுள்ள யாருக்கும் தெரியாது.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

பொன்னுமணியின் வீட்டின் கதவுகள் சில தினங்களாக திறக்கப்படவில்லை. அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. கதவைத் தட்டிப்பார்த்தும் பதில் இல்லை. அதனால் கொடுங்கையூர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே கோமளா இறந்துகிடந்தார். அவரருகில் பொன்னுமணி மயங்கியநிலையில் படுத்திருந்தார். கோமளா இறந்து சில தினங்களானதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.

ஆம்புலன்ஸ் மூலம் பொன்னுமணியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். கோமளாவின் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் பொன்னுமணியும் நினைவு திரும்பாமல் உயிரிழந்தார். அதனால் கோமளா எப்படி உயிரிழந்தார் என்று தெரியவில்லை. அவர்களின் வீடு முழுவதும் போலீஸார் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. பொன்னுமணியின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

மரணம்
மரணம்
Representational image
`இருட்டில் ஒரு விளக்கு; திறந்தால் துர்நாற்றம்!' - சென்னை ஐஐடி பேராசிரியரின் 11 ஆண்டு  துயரக்கதை

இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``கோமளாவைக் கட்டிப்பிடித்தபடி பொன்னுமணி மயங்கிக்கிடந்தார். 1991-ம் ஆண்டு பொன்னுமணி இந்த வீட்டை வாங்கிக் குடிவந்திருக்கிறார். இவர்களின் உறவினர்கள் யாரும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிர் இழந்திருக்கலாம். மனைவியின்மீதுள்ள பாசத்தால் பொன்னுமணி அவர் இறந்த தகவலை யாரிடமும் தெரிவிக்காமல் சடலத்தோடு மூன்று நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் படுத்திருந்திருக்கிறார். அதனால் அவரும் மயங்கிவிட்டார். துர்நாற்றம் வீசிய பிறகே கோமளா உயிரிழந்த தகவல் வெளியில் தெரியவந்திருக்கிறது. இருவரின் மரணம் குறித்து விசாரித்துவருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் மரணத்துக்கான காரணம் தெரியவரும். இருவரின் சடலமும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ளன. உறவினர்கள் யாரும் இதுவரை வரவில்லை" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு