Published:Updated:

``வெளிவரும் தகவல்கள் பதற்றமளிக்கின்றன!’’ - `கொரோனா’ கப்பலில் சிக்கியுள்ள கணவரை மீட்க மனைவி மனு

மல்லிகா
மல்லிகா

`கப்பலில் உள்ள பயணிகளுக்குத் தினந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்கிறார்கள் என்று என் கணவர் வாட்ஸ் அப் வீடியோவில் கூறியபோது பதறிவிட்டோம்.’

''இப்போது வரும் தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. என் கணவர் உட்பட, கொரோனா வைரஸ் பரவிவரும் கப்பலில் தவித்துவரும் அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும்'' என்று மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார் மல்லிகா.

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

`டயமண்ட் ப்ரின்சஸ் க்ரூஸ் (Diamond Princess cruise)' என்ற பிரிட்டிஷ் கப்பலில் பயணித்த 3,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களில், 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது. அந்தக் கப்பல் ஜப்பான் கரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருக்கும் 138 இந்தியர்களில், இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பிருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அக்கப்பலில் பணியாற்றுபவர், மதுரையைச் சேர்ந்த அன்பழகன். அவரின் மனைவி மல்லிகா, தன் கணவர் உட்பட அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்டுத் தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், ''டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து எங்களைத் தொடர்புகொண்டனர். எங்களுக்குத் தேவையான உதவி அளிக்கவும் உறுதியளித்துள்ளனர். 10 நாள்களில் நாங்கள் வீடு திரும்புவோம் என்று நம்புகிறோம். மேலும் கப்பலில் தண்ணீர், தெர்மோமீட்டர், மாஸ்க் என தேவையான பொருள்கள் வழங்கப்படுகின்றன'' என வாட்ஸ்அப் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் அன்பழகன். கப்பலில் உள்ள பயணிகளின் ஆரோக்கியம் குறித்துப் பேசும்போது, ''மேலும் 32 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்பழகன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அன்பழகன் குடும்பம்
அன்பழகன் குடும்பம்

அன்பழகன் மனைவி மல்லிகா மதுரை கலெக்டரிடம் இன்று மனு அளித்தார். அவருடன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணனும் வந்திருந்தார்.

மல்லிகாவிடம பேசினோம். ''மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் வசிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். டைமண்ட் பிரின்சஸ் என்ற நிறுவனத்தில் சில வருடங்களாக வேலைசெய்யும் என் கணவர், சமீபத்தில் அவர்கள் நிறுவனத்தின் சுற்றுலாக் கப்பலில் ஹாங்காங்குக்குச் சென்றுவிட்டு, கடந்த 3-ம் தேதி ஜப்பானின் யோகோஹாமாவுக்குத் திரும்பிய கப்பலில் பயணம் செய்தார்.

அங்கு வருவதற்கு முன், ஹாங்காங்கைச் சேர்ந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அங்குள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனால், கப்பலில் இருந்த 2,666 பயணிகள் மற்றும் ஊழியர்கள் தரையிறங்கத் தடைவிதிக்கப்பட்டது. கப்பலை துறைமுகத்திலிருந்து பல மைல் தூரத்தில் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தியுள்ளனர்.

கப்பலில் உள்ள பயணிகளுக்குத் தினந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்கிறார்கள் என்று என் கணவர் வாட்ஸ் அப் வீடியோவில் கூறியபோது பதறிவிட்டோம். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தத் தகவல் பலருக்கும் பரவியதால் மீண்டும் தொடர்புகொண்டவர், 'தற்போதுவரை எந்தப் பாதிப்பும் இன்றி நலமுடன் இருக்கிறேன், எங்களை மீட்க நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது' என்று தெரிவித்தார். ஆனாலும்,

மல்லிகா
மல்லிகா
என்.ஜி.மணிகண்டன்

தற்போது வெளிவரும் தகவல்கள் பதற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. என் கணவர் உட்பட அந்தக் கப்பலில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்க மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் நம்மிடம், ''அன்பழகன் உட்பட 6 தமிழர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அக்கப்பலில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை மீட்டுக்கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறேன். வெளியுறவுத்துறை அமைச்சர், செயலாளருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் மெயில் அனுப்பியுள்ளேன்.

கப்பலில் அன்பழகன்
கப்பலில் அன்பழகன்

எங்கள் தலைவர் தளபதி ஸ்டாலின் மூலமும் கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதைக்கு அவர்கள் கப்பலில் பத்திரமா இருந்தாலும், அவர்களை அங்கிருந்து கொண்டுவந்து வெளியில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத்தான் இப்போது வலியுறுத்தி வருகிறேன்'' என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு