Published:Updated:

`ஒருபக்கம் யானை; மறுபக்கம் புலி... அச்சத்தில் கூடலூர்!’- இரவு பகலாகக் கண்விழிக்கும் வனத்துறையினர்

யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு
யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு

'ஒருபக்கம் யானை வந்து வீட்டை சேதப்படுத்தி அரிசி, பருப்பு என எல்லவற்றையும் சாப்பிட்டுச் செல்கிறது. இன்னொரு பக்கம் புலி ஊருக்குள் வந்து ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தூக்கிச் செல்கிறது.'

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாகவே உணவு, தண்ணீர் தேடி யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவும். தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

வனத்துறையினர்
வனத்துறையினர்

இந்த ஊரடங்கால் வன விலங்குகள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், மற்றொரு பக்கம் வன விலங்குகள் வீடுகளை சேதப்படுத்துவதும் கால்நடைகளைத் தாக்குவதும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கூடலூர் அருகில் உள்ள குனில் வயல் கிராமத்தில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 4 யானைகள் நுழைந்தன. அங்குள்ள சுப்பிரமணி என்பவரின் வீட்டைத் தாக்கியதில் வீட்டின் பின்புறம் முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த சுப்பிரமணி, அவரின் மனைவி சுமிதா, 2 மகள்கள் ஆகிய நான்கு பேரும் தப்பிச் செல்ல முடியாமல் செல்போனில் அருகில் இருந்தவா்களை அழைத்துள்ளனா்.

யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு
யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து யானைகளை விரட்டி அவா்களைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களைத் தின்றுவிட்டு யானைகள் சேதப்படுத்திச் சென்றுள்ளன. அதிா்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவா்கள் உயிா்தப்பினா்.

இதைத் தொடா்ந்து அதே பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு வந்த அந்த யானைகள் மீண்டும் சுப்பிரமணியத்தின் வீட்டைத் தாக்கி முற்றிலுமாகச் சேதப்படுத்தியுள்ளன. வீடு சேதமடைந்ததால் அக்குடும்பத்தினா் அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளனா்.

யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு
யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு

இதேபோல் கூடலுார் மண்வயல் அம்பலமூலா கொரவயல் பகுதியில், கடந்த 14-ம் தேதி வேணுகோபால் என்பவரின் பசுமாட்டை புலி தாக்கிக் கொன்றது. அப்பகுதியில், வனத்துறையினர் நான்கு தானியங்கி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு 2 மணியளவில் அம்பலமூலா பகுதியில் தாமோதரன் என்பவரின் கொட்டகைக்குள் புகுந்த புலி, கன்றுக்குட்டியைத் தாக்கிக் கொன்றது.

இதுகுறித்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மோகன், ``ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாங்கள் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வீட்டிற்கே வருகின்றன. ஒருபக்கம் யானை வந்து வீட்டை சேதப்படுத்தி அரிசி, பருப்பு என எல்லவற்றையும் சாப்பிட்டுச் செல்கிறது. இன்னொருபக்கம் புலி ஊருக்குள் வந்து ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தூக்கிச் செல்கிறது’’ என்று வேதனை தெரிவித்தார்.

யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு
யானை தாக்கியதில் சேதமடைந்த வீடு

இதுகுறித்து வனத்துறையினர், ``வன விலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது உண்மைதான். சிறப்பு குழுக்களை நியமித்து ஊருக்குள் வரும் வனவிலங்குகளை இரவு பகலாகக் கண்காணித்து விரட்டி வருகிறோம். சில இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்களைப் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு