Published:Updated:

சாராய ஊறல்; தடுமாறிய காட்டு யானை... பேரணாம்பட்டு வனத்துறையினர் அதிர்ச்சி!

போதையில் தடுமாறிய காட்டு யானை

சாராய ஊறலைக் குடித்துவிட்டு காட்டு யானை பயங்கரமாக அட்டகாசம் செய்த சம்பவம், பேரணாம்பட்டு வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாராய ஊறல்; தடுமாறிய காட்டு யானை... பேரணாம்பட்டு வனத்துறையினர் அதிர்ச்சி!

சாராய ஊறலைக் குடித்துவிட்டு காட்டு யானை பயங்கரமாக அட்டகாசம் செய்த சம்பவம், பேரணாம்பட்டு வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
போதையில் தடுமாறிய காட்டு யானை

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட மோர்தானா காப்புக் காட்டுக்குள் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானை, மூன்று நாள்களுக்கு முன்பு குண்டலப்பல்லி வனப்பகுதி வழியாக சாத்கர் மலைப் பகுதிக்குள் நுழைந்தது. இந்த மலைப் பகுதி சாராயக் கும்பலின் கட்டுப்பாட்டிலிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலையிலுள்ள பால்சுனை, மாமரத்துப்பள்ளம், பன்னீர்குட்டை, கங்காச்சரம், அல்லேரி ஆகிய பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மலையில் சுற்றித்திரிந்த அந்த ஒற்றை யானை சாராய ஊறல்களைத் தண்ணீர் எனக் குடித்துவிட்டு போதையில் தடுமாறி தடுமாறிப் பயங்கரமாக பிளிறியது.

போதையில் தடுமாறிய காட்டு யானை
போதையில் தடுமாறிய காட்டு யானை

யானையின் ஆக்ரோஷத்தைப் பார்த்த சாராய வியாபாரிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மலையிலிருந்து கீழே இறங்கிய யானை பங்களாமேடு பகுதியிலுள்ள பள்ளி வளாகம் வழியாக பேரணாம்பட்டு-குடியாத்தம் நெடுஞ்சாலைக்கு வந்தது. அங்கிருக்கும் வனத்துறையின் ஓய்வு விடுதி மற்றும் வனச்சரகக் குடியிருப்புக் கேட்டை காலால் உதைத்து உள்ளே புகுந்த யானையைப் பார்த்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியில் விரட்டினர். கோட்டைச்சேரி கிராமத்துக்குள் புகுந்த அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சட்டவிரோதமாக சாராயம் தயாரிப்பவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism