Published:Updated:

` காலம் பின்னோக்கிச் சென்றுள்ளது!' - கீழடி ஆய்வு முடிவுகளால் நெகிழும் தொல்லியல் ஆய்வாளர்கள்

அகழ்வாராய்ச்சி செய்யும் இடங்கள், சிலருக்குச் சொந்தமான பட்டா இடங்களாக இருக்கின்றன. தொல்லியல்துறை என்று கூறும்போது, அவர்கள் தங்கள் இடத்தை ஆராய்ச்சிக்கு என ஒதுக்க முன்வர மாட்டார்கள்.

Keezhadi excavations
Keezhadi excavations

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தநிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டன. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. கீழடி அகழாய்வின்போது கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானைகள் கிடைத்தன.

Keezhadi excavations
Keezhadi excavations

அதேபோல், திமில் உள்ள காளைகள், பசு, எருமை, ஆடு போன்றவை வேளாண் பணிகளுக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்த்து வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற தொல்லியல்துறை பேராசிரியர் பாலாஜியிடம் பேசினோம். ``பானை ஓடுகளில் உள்ள எழுத்துகளை வைத்து இதை நாம் கூறுகிறோம். இதற்கான காலம் கி.மு 500-லிருந்து 600 வரை இருக்கும் என ஆய்வுகள் நடத்தி அறிவியல்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

ஏற்கெனவே கி.மு 300 என அறியப்பட்டது. இப்போது, அது மாறி 300 ஆண்டு முன்னதாக, அதாவது கி.மு 600-லிருந்து நம் தமிழர்கள், `தமிழ் பிராமி’ எழுத்துகளை எழுதியிருக்கிறார்கள் என்பது அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மிகத் துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் இதுபோன்று செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம் முன்னோரின் வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே உறையூர் உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பரவலாக ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். இதற்கு முன்னதாகவே, தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதற்கான வரலாறு உண்டு.

balaji
balaji

இந்த ஆராய்ச்சியின் மூலம், அதற்கான காலம் மேலும் பின்னோக்கிச் சென்றுள்ளது. தொல்லியல் தடயங்கள் தமிழகத்தில் பல இடங்களில் இருக்கின்றன. இந்த அகழ்வாராய்ச்சியை பெரியளவில் மேற்கொள்ள வேண்டும். இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அகழ்வாராய்ச்சி செய்யும் இடங்கள், சிலருக்குச் சொந்தமான பட்டா இடங்களாக இருக்கின்றன. தொல்லியல்துறை என்று கூறும்போது, அவர்கள் தங்கள் இடத்தை ஆராய்ச்சிக்கு என ஒதுக்க முன்வர மாட்டார்கள்; தயங்குவார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று ஆய்வு செய்வது சற்று கடினம். இதுபோல பரவலாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால், நமது வரலாற்றை மாற்றி எழுத உதவியாக இருக்கும்” என்றார் உறுதியாக.