Published:Updated:

தேனி: சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளிக்கும் காந்தி பூங்கா! - சீரமைக்கப்படுமா?

காந்தி பூங்கா
News
காந்தி பூங்கா

தேசம் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில், நம் தேசத் தந்தையின் பெயரிலுள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் கிடப்பது தங்களுக்கு மிகுந்த மன வேதனையாக இருப்பதாகக் கம்பம் பார்க் ரோடு மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் பார்க் ரோட்டில் அமைந்துள்ளது காந்திஜி பூங்கா. தேசம் எழுபத்து ஐந்தாவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில், நம் தேசத் தந்தையின் பெயரிலுள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் கிடப்பது தங்களுக்கு மிகுந்த மன வேதனையாக இருப்பதாகக் கம்பம் பார்க் ரோடு மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்த இந்தப் பூங்காவின் ஒரு பகுதி உழவர் சந்தையாக மாறியதிலிருந்து எந்தவிதப் பராமரிப்புமின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

காந்தி பூங்கா
காந்தி பூங்கா

பூங்காவின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துவிட்ட நிலையில், உழவர் சந்தைக்குக் காய்கறி வாங்க வரும் பொதுமக்களும், அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களும் இந்தப் பூங்காவைச் சிறுநீர் கழிக்கும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இரவு நேரங்களில் இந்த காந்தி பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுவது அவலத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``சுற்றுப்புறத் தூய்மை முக்கியம்னு தன்னோட வாழ்நாள் முழுசும் வலியுறுத்திக்கிட்டே இருந்த மகாத்மா காந்தி பேர்ல இப்படிப்பட்ட நிலையில ஒரு பூங்கா இருக்குறது ரொம்ப வேதனையா இருக்கு. இந்தப் பூங்கா, உழவர் சந்தை வந்த பிறகு ரொம்ப மோசமாகிடுச்சு. அதுவரைக்கும் பூங்காவைப் பராமரிச்சுக்ட்டு இருந்த அதிகாரிங்க, அதுக்குப் பிறகு இந்தப் பூங்காவ கண்டுக்கவே இல்லை. அதனால, புதர் மண்டி, நாற்காலிங்க எல்லாம் உடைஞ்சு, ரொம்ப சிதிலமடைஞ்சு போயிடுச்சு. உழவர் சந்தைக்கு வர்ற வியாபாரிங்களும் சுத்தமா வெச்சுக்குறதில்லை. அதனால, ரொம்ப அசுத்தமா காணப்படுது. நாங்களும் இது தொடர்பா பலமுறை அதிகாரிங்ககிட்ட சொல்லி ஓஞ்சு போயிட்டோம்.

காந்தி பூங்கா
காந்தி பூங்கா

காந்தி பிறந்தநாளுக்கு மட்டும் ஒரு நாள் வந்து சுத்தம் செஞ்சுட்டு போவாங்க. அதுக்குப் பிறகு இந்தப் பக்கமே யாரும் வர மாட்டாங்க. சாயங்காலம் ஆயிட்டா நெறைய பசங்க இங்க வந்து மது குடிச்சுட்டு அட்டகாசம் பண்ணுறாங்க. அதனால, இருட்டிட்டா பெண்கள் இந்தப் பக்கம் வரவே அச்சப்படறாங்க. அரசாங்கம் இந்தப் பூங்காவை சீரமைச்சு, மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை வெக்கிறோம்" என்றனர்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரிலுள்ள இந்தப் பூங்கா மீண்டும் புத்துயிர் பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது... நடவடிக்கை எடுக்குமா அரசு?