Published:Updated:

மாஞ்சோலை: வீடுகளை வலம் வரும் நோய்வாய்பட்ட காட்டு யானை... சிகிச்சை அளிக்குமா வனத்துறை?

வீட்டுத் தோட்டத்தில் காட்டு யானை
வீட்டுத் தோட்டத்தில் காட்டு யானை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதிக்கு வந்து வளர்ப்பு யானை போலப் பொதுமக்களிடம் பழகி வருகிறது.

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு –முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து ஆகிய இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன.

இந்தப் பகுதியில் சுமார் 3000 தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மாஞ்சோலை வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். காப்புக் காடுகளைப் பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் இப்பகுதியில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாஞ்சோலை பகுதியில் வீட்டின் அருகே யானை
மாஞ்சோலை பகுதியில் வீட்டின் அருகே யானை
1999 இதே நாள்: வரலாற்றின் கறுப்புப் பக்கம்... மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை!

மாஞ்சோலை வனப்பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஊத்து கிராமம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த வயதான பெண் காட்டு அங்கேயே இப்போதும் யானை வருக்கிறது.

குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் வளர்ந்து வரும் வாழை உள்ளிட்ட பயிர்களைத் தின்று அந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. வழக்கமாக யானைகள் வனத்தில் இருந்து குடியிருப்புப் பகுதிக்குள் வந்தால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வனத்துக்குள் சென்றுவிடும். ஆனால், இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே வலம் வருக்கிறது.

பல மாதங்களாகக் குடியிருப்பு பகுதியில் வலம் வந்த காட்டு யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே சுற்றித் திரிகிறது. உடல் மெலிந்து முதிர்ந்த தோற்றத்துடன் காட்சி அளிக்கும் அந்த யானையால் பொதுமக்களுக்கு இதுவரை எந்த தீங்கும் ஏற்பட்டதில்லை.

மேலும், பொதுமக்கள் கொடுக்கும் பழங்கள், இலை உள்ளிட்ட உணவுப் பொருள்களை அச்சமின்றி பெற்றுக் கொள்கிறது. மக்களையும் அந்த யானை அச்சப்படுத்துவதில்லை. அதனால், காட்டு யானையாக வலம் வந்த அந்த யானை தற்போது வளர்ப்பு யானையாக மாறி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வயோதிகம் காரணமாகவும் நோயினாலும் பாதிக்கப்பட்ட யானை வளர்ப்பு பிராணி போல மக்களிடம் பழகத் தொடங்கியிருக்கிறது.
பொதுமக்கள்
வீடுகளை வலம் வரும் யானை
வீடுகளை வலம் வரும் யானை

நோய் வாய்ப்பட்ட நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்புகளை வலம் வரும் யானை உடல் மெலிந்து காணப்படுவதுடன் உண்ணும் உணவு ஜீரணம் ஆக முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் அந்த யானையைப் பிடித்து அதற்கு உரிய சிகிச்சை கிடைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு