Published:Updated:

`முதல்வர் சொந்த ஊரில்... வீணாகும் புத்தகங்கள்; இடிந்து விழும் நிலையில் நூலகங்கள்' - தேவை நடவடிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிதிலமடைந்த நூலகக் கட்டடம்.
சிதிலமடைந்த நூலகக் கட்டடம்.

`தி.மு.க ஆட்சிக்காலத்தில் குறிப்பாக, புத்தகங்களின் மீது உணர்வுபூர்வமான நேசம்கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த ஊரில் புத்தகங்களுக்கு இப்படி ஓர் அவலநிலையா!' என ஆதங்கப்படுகிறார்கள் பொதுமக்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க வளர்ச்சி அடைவதற்கு, நூலகங்களும் வாசிப்புப் பழக்கமும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. குறிப்பாக, பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம் வரையிலும் தொன்றுதொட்டு புத்தகங்களுக்குத் தனி முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்கப்பட்டுவருகின்றன. தன்னை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகளுக்கு மாற்றாக, புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது ஓரளவுக்கு கடைப்பிடிக்கப்பட்டும்வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில்தான், தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருக்கும் ஓர் அரசு நூலகத்தின் பரிதாபகரமான நிலை, அந்தப் பகுதி புத்தக வாசிப்பாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில், அதுவும், புத்தகங்களின் மீது உணர்வுபூர்வமான நேசம்கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த ஊரில் புத்தகங்களுக்கு இப்படி ஓர் அவலநிலையா என ஆதங்கப்படுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரியில் செயல்பட்டுவரும் அரசு நூலகம் ஒன்றின் கட்டட மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், மழைநீரில் புத்தகங்கள் நனைந்து அழிந்துகொண்டிருப்பதாகவும், அரசு அதிகாரிகள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தி்ருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூராட்சி வளாகத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் கிளை நூலகம் செயல்பட்டுவருகிறது. கொராடாச்சேரி, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் படிப்படியாகச் சேதமடையத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தக் கட்டடத்தின் மேற்கூரை சிமென்டு பூச்சுகள் பெயர்ந்துகொண்டேவருகின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பகுதி மக்கள், ``இந்த நூலக கட்டடத்தைச் சீரமைக்கணும், இல்லைன்னா, வேற புதுக் கட்டடம் கட்டி அங்கே நூலகத்தைக் கொண்டு போகணும்னு தொடர்ச்சியாக வலியுறுத்திக்கிட்டேதான் இருக்கோம். ஆனால் அரசு அதிகாரிகள் கேட்கவே இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உடனடியா இதுக்கு விடிவுகாலம் பொறந்துடும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். இது தமிழக முதலமைச்சரோட சொந்த மாவட்டம். அதுமட்டுமல்லாமல். தி.மு.க-வைச் சேர்ந்த பூண்டி கலைவாணன்தான் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனாலும் இந்த நூலகக் கட்டடம் சீரமைக்கப்படாமலே இருக்கு.

சிதிலமடைந்த நூலக கட்டடம்.
சிதிலமடைந்த நூலக கட்டடம்.

இங்கே பல துறைகளைச் சேர்ந்த ஏராளமான அரிய புத்தகங்கள் எல்லாம் இருக்கு. எந்த நேரத்துல வேணும்னாலும் இந்தக் கட்டடம் இடிஞ்சி விழக்கூடிய நிலையில இருக்கு. தொடர்ச்சியா மழை பெஞ்சதுனால, மேற்கூரையில் இருக்குற விரிசல்கள் வழியா மழைநீர் உள்ள வந்து புத்தகங்கள் நனைஞ்சு, அழிஞ்சுக்கிட்டு இருக்கு. புத்தகங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஒரு பக்கம்னா, நூலகத்துக்கு புத்தகங்கள் படிக்க வரக்கூடிய பொதுமக்கள், மாணவர்களோட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருக்கு. மழைத் தண்ணீர், நூலகத்துக்குள்ளார வர்றதுனால, புத்தகங்களைப் படிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டுக்கிட்டு இருக்கோம். புதுக் கட்டடம் கட்டினால்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். இதுக்கு அதிகாரிகள், குறிப்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். அதோடு, மழையில் நனைஞ்சு சேதமான புத்தகங்களை ஈடு செய்யக்கூடிய வகையில் புதிய புத்தகங்களை வரவழைச்சு இங்க வைக்கணும். இதையெல்லாம் செஞ்சா இந்த நூலகம் புத்துயிர் பெறும்" என்றனர்.

இதே திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், பெருந்தரக்குடி, விளமல் உள்ளிட்ட ஊர்களிலிருக்கும் நூலகங்களும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாளிடம் கேட்டோம். ``இதெல்லாம் 20 வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள். புதிய கட்டடம் கட்ட போதுமான நிதியில்லை. தமிழக அரசின் உயர் அலுவலர்களின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றிருக்கிறோம்" என்றார்.

திருவாரூர்: மரம் வளர்ப்பு, புத்தக வாசிப்பு, பாரம்பரியக் கலைகள் கற்றுத்தரும் குழந்தைகள் கற்றல் மையம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு