Published:Updated:

`கலெக்டரிடம் மனுக் கொடுத்தேன்; பதில் வந்தபாடில்லை!'- குளத்தை தூர்வாரக் காத்திருக்கும் பெண் #MyVikatan

மனுக் கொடுத்து 15 நாள்களுக்கும் மேலே ஆச்சு. இன்னும் பதில் வந்தபாடில்லை.

வாழ்வரசி பாண்டியன்
வாழ்வரசி பாண்டியன்

`` நீர் நிலைகளைத் தூர் வார அரசு நிதிதான் கொடுக்கிறதில்லை. வேலை செய்ய அனுமதிகூடவா கொடுக்கக் கூடாது..? “ என ஆதங்கப்படுகிறார் வாழ்வரசி பாண்டியன்.

வாழ்வரசி பாண்டியன்
வாழ்வரசி பாண்டியன்

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூருக்கு அருகே உள்ள காமாட்சிபுரம். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இப்போதும் சென்னையில்தான் சொந்தமாய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

``சென்னையில் எங்களுக்குச் சொந்த பிசினஸ். அங்கேதான் வசிக்கிறோம். இருந்தும் நான் பிறந்த காமாட்சிபுரம் கிராமத்துக்கும் அங்குள்ள விவசாய வளர்ச்சிக்கும் ஏதாவது செய்யணும் அப்படிங்கிற உந்துதல் என் மனசுக்குள்ள ரொம்ப காலமாகவே இருந்துட்டு வந்தது. அதற்குத் தீர்வு காணும் விதமாகத்தான் கணவர் பாண்டியனின் ஒத்துழைப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆரம்பித்ததுதான் ‘பச்சை வாழ்வு இயக்கம்’ எனும் அமைப்பு.

எங்க அப்பா தோகை பச்சையப்பன் காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தவரு. அவருதான் இந்த மாதிரியான நல்ல காரியங்களுக்கு எனக்குத் தூண்டுகோல். அவர் இப்போ இல்லை. இருந்தும் அப்பாவைப் போல நம்ம ஊருக்கும் ஏதாவது நல்ல காரியங்கள் செய்யணும் அப்படிங்கிற ஆர்வம் குறையவே இல்லை. இதுக்காக நான் ஆரம்பித்த பச்சை வாழ்வு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு கணவரும், பிள்ளைகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க.

வாழ்வரசி பாண்டியன்
வாழ்வரசி பாண்டியன்

அதனாலதான் நான் சென்னையில் வசித்தாலும் நான் பிறந்த ஊருக்கு இந்த மாதியான காரியங்கள செய்ய முடியுது. ஊர்ப் பாசமும் இங்கே உள்ள விவசாய நிலங்கள்மீது உள்ள அக்கறையும்தான் பல சிரமங்களையும் தாண்டி இதுபோன்ற செயல்கள் செய்ய வைக்குது. நாம உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நாம பிறந்த ஊரை எப்போதும் மறந்திடக் கூடாது. அதுதான் நம்மோட வேர். நம்மால் முடிந்த உதவிகளை அந்த மண்ணுக்கு செஞ்சுக்கிட்டே இருக்கணும் அப்படிங்கிற எண்ணம் கொண்டவ நான்.

முதலில் காமாட்சிபுரத்துல மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத்தான் திட்டமிட்டோம். அதன்படி 300-350 மரக் கன்றுகளை நட்டு வளர்த்து பராமரிச்சோம். அப்புறம் அந்தக் கிராமத்தில் 15 வருஷத்துக்கும் மேலாக தூர்வாராமல் மணல் மேடாக மூடிப்போயும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளான சின்னக் குளத்துக்கு தண்ணீர் வரும் மேற்கு ஓடையை தூர்வாரத் திட்டமிட்டோம்.

காமாட்சிபுரம்
காமாட்சிபுரம்

உள்ளூர் மக்கள், நண்பர்கள், உறவினர்கள் துணையுடன் ஓடையை தூர் வாரப்போனோம். ஆனால், அதன் தடமே அங்கு தெரியலை. அதன் வரத்துக் கால்வாயில் சிமென்ட்டால் தடுப்பணை போட்டு ஆக்கிரமிப்புச் செஞ்சிருந்தாங்க. அந்த தண்ணீர் எல்லாம் பக்கத்தில் உள்ள தோட்டத்துக்குள் பாய்வதற்குத்தான் அமைச்சிருந்தாங்க. இதனாலே சின்னக்குளத்துக்கு தண்ணீரே வரலே. மிச்ச இடங்களும் அரை கிலோ மீட்டருக்குப் புதர்களும் பெரிய மண் மேடுகளுமாத்தான் இருந்துச்சு.

இங்கே கால்வாய் இருக்கான்னே எங்களுக்குச் சந்தேகம் வந்திடுச்சு. அப்புறம் ஊர்க்காரங்க ஒத்துழைப்போட அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் நீக்கி சின்னக்குளத்துக்கு தண்ணீர் வரும் வழியைக் கண்டுபிடிச்சோம்.

குளத்தை தூர்வார காத்திருக்கும் இயந்திரம்
குளத்தை தூர்வார காத்திருக்கும் இயந்திரம்

அதேமாதிரி வேப்பம்பட்டி ஜமீன்தார் குளம். இதுவும் தூர் வாரி பல வருஷங்கள் ஆச்சு. இதையும் நாங்க தூர் வாரி இருக்கோம். இப்போ மழை பெய்தா குளத்துக்கு எந்தத் தங்கு தடையுமில்லாம தண்ணீர் ஓடி வரும். இப்படி இரண்டு இடங்களை எங்க அமைப்பு மூலமா ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி இருக்கோம்.

அடுத்து காமாட்சிபுரத்துல உள்ள பெரிய குளம். இது பல நூறு ஏக்கர் விவசாயம் பலனடையக்கூடிய கண்மாய். இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கு. இதை தூர்வார அனுமதி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரை நேரில பார்த்து மனுக் கொடுத்தோம். எங்க அமைப்பு மூலமா நாங்களே கண்மாயை தூர்வாரிக்கிறோம். அனுமதி மட்டும் கொடுங்கணு கேட்டோம். மனுக் கொடுத்து 15 நாள்களுக்கும் மேலே ஆச்சு. இன்னும் பதில் வந்தபாடில்லை.

வாழ்வரசி பாண்டியன்
வாழ்வரசி பாண்டியன்

இதுக்கு பெரிய தொகை செலவாகும். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாங்க களத்துலே இறங்க காத்துக்கிட்டிருக்கோம். மாவட்ட நிர்வாகம் விரைவில் அனுமதி கொடுத்தால் மழைக் காலம் ஆரம்பிக்கும் முன்பே இந்தப் பெரியகுளத்தின் தூர்வாரும் பணியை உடனே தொடங்கலாம். இதனால் பல விவசாயக் குடும்பங்களை வாழவும் வைக்கலாம்" என எதிர்பார்ப்பும் ஏக்கமும் கலந்த ஆவலுடன் பேசுகிறார் வாழ்வரசி பாண்டியன்.

-பழ.அசோக்குமார்

`கலெக்டரிடம் மனுக் கொடுத்தேன்; பதில் வந்தபாடில்லை!'- குளத்தை தூர்வாரக் காத்திருக்கும் பெண் #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/