Published:Updated:

விதவை உதவித் தொகைக்காக சான்றொப்பம் கேட்ட பெண்! - விண்ணப்பத்தைக் கிழித்தெறிந்த அரசு மருத்துவர்

`மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சுசீலா
பாதிக்கப்பட்ட பெண் சுசீலா

விதவை உதவித் தொகை பெறுவதற்காக, உடல்நலத்தகுதி குறித்து சான்றிதழ் கேட்டு பெண் ஒருவர் கொடுத்த விண்ணப்பத்தில் கையொப்பமிட மறுத்த அரசு மருத்துவர், அந்த விண்ணப்பத்தைக் கிழித்தெறிந்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் சுசீலா
பாதிக்கப்பட்ட பெண் சுசீலா

கரூர் ஆதி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சுசீலா. இவரின் கணவர் சிவானந்தம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து, அரசு வழங்கும் விதவை உதவித் தொகை பெற, சுசீலா விண்ணப்பம் செய்துள்ளார். இதில், விண்ணப்பதாரரின் வயது மற்றும் உடல் நலத்தகுதி குறித்து மருத்துவர் சான்று பெற்று விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

Vikatan

இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, மருத்துவர் கையொப்பத்துக்காக சுசீலா கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து கையொப்பம் கேட்டுள்ளார். பல மருத்துவர்கள் சுசீலாவுக்கு உரிய பதில் அளிக்காமல், அவரை அலையவிட்டுள்ளனர். பிறகு, அவர் ஒருவழியாக அங்கிருந்த புவனேஸ்வர் என்ற மருத்துவரிடம், 'கையொப்பம் வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவமனை
நா.ராஜமுருகன்

கையொப்பமிட மறுத்த அவர், விண்ணப்ப படிவத்தைப் பிடுங்கி துண்டு துண்டாக கிழித்து தூக்கி எறிந்துள்ளார். இதைக்கண்டு, சுசீலா அதிர்ச்சியடைந்தார். அதேசமயம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திடீர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் மருத்துவமனை வளாகத்தில் இருந்தார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் சசீலா கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தார்.

70,000 ஆபரேஷன்; ஆள்மாறாட்டம்; போன் மிரட்டல் - 10 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய போலி மருத்துவர்

பின்னர், செய்தியாளரிடம் பேசிய சுசீலா, ``அரசு மருத்துவரின் மனித நேயமற்ற இந்தச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் கணவர் இறந்துவிட்டார். அதனால், விதவை உதவித் தொகை கோரி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் அதிகாரி, ஊர் பொதுமக்கள் வாக்குமூலம் ஆகியவற்றை வாங்கிவிட்டேன். பின்னர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு மருத்துவரிடம், சான்றொப்பம் பெற வந்தேன். ஆனால், ஒன்றரை மணி நேரமாக அலைக்கழிக்கப்பட்ட பிறகு, மருத்துவர் புவனேஸ்வர் என்பவரிடம் கையொப்பம் பெறச் சென்றேன். பதிலேதும் சொல்லாத அவர், `உங்களுக்கு கையொப்பம் வாங்க நேரம் காலம் இல்லையா?' என்று கோபமாகப் பேசிவிட்டு, திடீரென எனது விண்ணப்பத்தைக் கிழித்து, கையில் கொடுத்துவிட்டார்.

சுசீலா
சுசீலா

இதனால், அதிர்ச்சி அடைந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். தற்பொழுது, வேறு ஒரு மருத்துவர் மூலம் கையொப்பம் பெற்றுத் தருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், புதிதாக விண்ணப்பம் பெற்று மீண்டும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய்த் துறை அதிகாரி, ஊர் பொதுமக்கள் வாக்குமூலம் பெற்றுதான் விண்ணப்பத்தில் மருத்துவர் கையொப்பம் பெறமுடியும். அதற்கு மறுபடியும் நான் அலைய வேண்டும். எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது. சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை ஓயமாட்டேன்" என்றார்.

``பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யணும் சார்..!''- மாதத்தில் ஒருநாள் இலவச சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்

இதுசம்பந்தமாக, மருத்துவர் புவனேஸ்வரிடம் பேச முயன்றோம். `அவர் ஒரு அறுவைசிகிச்சையில் பிஸியாக இருக்கிறார்' என்று சொல்லப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலாவிடம் பேசினோம்.

ரோஸி வெண்ணிலா (அரசு மருத்துவமனை முதல்வர்)
ரோஸி வெண்ணிலா (அரசு மருத்துவமனை முதல்வர்)

``அந்த மருத்துவருக்கும், அந்தந்தம்மா கேட்டுவந்த கையொப்பத்துக்கும் சம்பந்தமில்லை. அவசரமாக முக்கிய அறுவை சிகிச்சை செய்யப்போன இடத்தில், மருத்துவர் புவனேஸ்வரிடம் அந்தம்மா, `கையொப்பம் போடுங்கள்' என்று கேட்டுள்ளார். அதனால், அவர் கிழித்துள்ளார். பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சையை 24 மணிநேரமும் சிறப்பாக மருத்துவர்கள் செய்துவருகிறார்கள். ஆனால், பொதுமக்கள் பணிச்சுமையைப் புரிந்துகொள்ளாமல் இப்படி செய்வதால், மருத்துவர்கள் சமயத்தில் கோபப்பட நேர்கிறது. புவனேஸ்வர் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை முடிந்தபிறகு, இன்று மதியத்துக்கு மேல் அவரிடம், அந்தப் பிரச்னை பற்றி விசாரிக்கலாம்னு இருக்கேன்" என்றார்.