இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இலங்கை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார், 12 பேர் காயமடைந்தனர். இதனால் ஒவ்வொரு நாளும் பசியும், பட்டினியுமாக வாழ வழியின்றி இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே இலங்கையிலிருந்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்ற பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிக்கு வந்து இறங்கியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரைன், கியூ பிராஞ்ச் போலீஸார் அவர்களை மீட்டு தனுஷ்கோடி மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் விசாரிக்கப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
தனுஷ்கோடிக்கு வந்த வர்ஷினியிடம் நாம் பேசியபோது, ``என் கணவர் என்னையும் என்னுடைய குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிவிட்டார். என்னுடைய இரு குழந்தைகளையும் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அனைத்துப் பொருள்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன.
அத்தியாவசியப் பொருள்களான அரிசி ஒரு கிலோ ரூ.300, சீனி ரூ.200, பிரட் பாக்கெட் ரூ.200, ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ.300 என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. வேலைவாய்ப்புகள் கிடையாது, மின்சாரம் இல்லை, மருந்து பொருள்கள் கிடைப்பதில்லை. உணவுப் பொருள்களை வாங்க பணம் இல்லாமல் மூன்று நாள்களாக குழந்தைகளுடன் பட்டினியாக கிடந்தேன்.
குழந்தைகளைக் காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே இருக்கும் நகைகளை விற்று படகோட்டிகளுக்கு ரூ.2 லட்சம் கொடுத்து இங்கு வந்துள்ளோம். தமிழ்நாடு, அகதிகளாக வந்துள்ள எங்களை ஆதரிக்கும் என்ற முழு நம்பிக்கையில்தான் இங்கு வந்திருக்கிறோம்" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.