Published:Updated:

`போலீஸ் கெடுபிடி ஒரு பக்கம்.. சந்தைக்குப் போனா அதைவிட பெரிய கொடுமை!` - புலம்பும் பெண் விவசாயி

வெற்றிலைத் தோட்டத்தில் ராஜலட்சுமி
வெற்றிலைத் தோட்டத்தில் ராஜலட்சுமி

"வெத்தலையை வித்துட்டு வெறும் கையோடு வர்றப்போ, எங்களை விவசாயினு நம்ப மறுத்து போலீஸ்காரங்க திட்டுறாங்க. தொந்தரவு பண்றாங்க."

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெற்றிலைச் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. வெற்றிலை விளைச்சலை நம்பியே அங்கு ஏராளமான விவசாயக் குடும்பங்கள் உள்ளன. விவசாயம் செய்து, நல்ல விளைச்சலை எடுத்து, உரிய விலைக்கு விற்று லாபம்பார்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு, காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் மேலும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

வெற்றிலை தோட்டத்தில் ராஜலட்சுமி
வெற்றிலை தோட்டத்தில் ராஜலட்சுமி

இதுகுறித்துப் பேசுகிறார், பரமத்தி வேலூர் அருகிலுள்ள மேலபேட்டைபாளையத்தில் வசிக்கும் பெண் விவசாயி ராஜலட்சுமி. அங்குள்ள வெற்றிலை விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக ஆதங்கத்துடன் வேதனைகளைப் பகிர்கிறார்.

“எங்க பகுதியில வெத்தலை, கோரைப்புல்லு விவசாயம்தான் அதிகம் செய்வோம். சுத்துவட்டாரத்துல சின்ன விவசாயிங்கதான் அதிகம் இருக்காங்க. எங்களுக்கெல்லாம் சொந்த நிலம் கெடையாது. குத்தகை நிலம்தான். ஒரு வருஷம், ரெண்டு வருஷம்னு ஒப்பந்தம்போட்டு விவசாயம் செய்வோம். சொந்தக்காரங்க எட்டு குடும்பம் சேர்த்து, மணப்பள்ளி கிராமத்துல நாலு ஏக்கர் நெலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கோம். எங்களுடன், கூடுதலா எட்டு குடும்பங்கள் எங்க காட்டுல வேலை செய்றாங்க.

வெற்றிலை தோட்டத்தில் ராஜலட்சுமி
வெற்றிலை தோட்டத்தில் ராஜலட்சுமி

ரெண்டு ஏக்கர்ல இப்பதான் வெத்தலை விதை நட்டிருக்கோம். மீதி ரெண்டு ஏக்கர்ல விளைச்சல் இருக்கு. இப்ப தண்ணிப் பிரச்னை அதிகமிருக்கு. அதனால விளைச்சல் சரியா இல்லைங்கிற கவலை ஒருபக்கம். ஆள் பற்றாக்குறை, செலவுக்கூலி அதிகமாவதுனு நிறைய சவால்கள் இருக்கு. இதுக்கு நடுவே கொரோனாவால சொல்லி மாளாத பிரச்னையால தவிக்கிறோம்” என்று புலம்பும் ராஜலட்சுமி,

`கொடிகளுடன் சேர்ந்து நாங்களும் வாடுறோம்' - வேதனையில் வெற்றிலை விவசாயிகள்

“ஒரு கொடியில 20 நாளைக்கு ஒருமுறைதான் வெத்தலை பறிக்க முடியும். 17 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற பரமத்தி வேலூர் சந்தைக்கு பறிச்ச வெத்தலையை மொத்தமா கொண்டுபோவோம். அதுக்காக, சந்தைக்குப் போற வழியில போலீஸ்காரங்க மறிச்சு, ‘ஊரடங்கு இருக்கு. எங்கயும் போகக்கூடாது’ன்னு திருப்பி அனுப்புறாங்க.

‘நாங்க விவசாயிங்க; சந்தைக்குப் போறோம்’னு சண்டைபோட்டு போறோம். அதையெல்லாம் தாண்டி சந்தைக்குப் போனா, அங்க அதைவிடப் பெரிய கொடுமை. வெத்தலைக்கு உரிய விலை கிடைக்கிறதில்லை. வெத்தலையை எடை போட்டெல்லாம் வாங்க மாட்டாங்க. தரத்துக்கு ஏற்ப ஏலம்தான் எடுப்பாங்க. வழக்கமா ஏலம் எடுக்கிற விலையைவிட இப்ப பல மடங்கு கம்மியாதான் பணம் தர்றாங்க. வேற வழியில்லாம வெத்தலையை வித்துட்டு வர்றோம்.

வெற்றிலை தோட்டத்தில் ராஜலட்சுமி
வெற்றிலை தோட்டத்தில் ராஜலட்சுமி

சந்தையிலிருந்து திரும்பி வரும்போது, வெத்தலையை வித்துட்டு வெறும் கையோடு வர்றப்போ, எங்களை விவசாயினு நம்ம மறுத்து போலீஸ்காரங்க திட்டுறாங்க. தொந்தரவு பண்றாங்க. வெத்தலைக்கு உரிய விலை கிடைக்காதது, போலீஸ்காரங்க தொந்தரவால சில வாரங்களா சரியா வெத்தலையைப் பறிக்காம இருக்கோம். இதனால, வெத்தலையெல்லாம் பழுத்து வீணா போகுது. எங்க குத்தகை காட்டுல அரைகுறையா விவசாயம் பார்த்துகிட்டு, வயித்துப் பொழப்புக்காக பக்கத்து காட்டுக்கு கூலி வேலைக்குப் போறோம்” என்று கலக்கத்துடன் கூறினார், ராஜலட்சுமி.

அடுத்த கட்டுரைக்கு