Published:Updated:

`கணவர் இறந்துட்டார், கடனுக்கு வட்டி கட்ட முடியல'- 4 குழந்தைகளுடன் கலெக்டரிடம் கலங்கிய பெண்

மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்ட ஆட்சியரிடம் மனு

கணவரின் மருத்துவச் செலவுக்கு வாங்கிய கடனுக்கு வட்டிகூட எங்களால கட்ட முடியல. இந்தக் கடனால வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துடுவோமோன்னு பயமா இருக்கு.

செங்கல்பட்டு மாவட்ட குறைதீர் முகாமில் கணவரை இழந்த பெண் ஒருவர், தனது நான்கு குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்திருந்தார். அந்தச் சிறுமிகளில் ஒருவரால் நடக்கக் கூட முடியவில்லை.

மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் மனு கொடுத்த செல்வசங்கரியிடம் பேசினோம். ``நாங்க தென்மேல்பாக்கம், கங்கை அம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்து வருகிறோம். என்னோட கணவர் ராமு. எங்களுக்கு கோபிகா (12), திவ்யதர்ஷினி (10), சவிதா (8), அக்சயா (5) என நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். எங்களுக்குப் பிறந்த நான்கும் பெண் குழந்தைகள் என்பதால் அவர் ஓடோடி சம்பாதித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பம்
பாதிக்கப்பட்ட குடும்பம்

மறைமலைநகரில் ஒரு காண்டிராக்டரிடம் 12 வருஷமா வேலை செய்துவந்தார். ராத்திரி பகலா வேலைக்குப் போய் மாதம் 25,000 கொண்டு வந்து கொடுப்பார். கடந்த வருடம் மறைமலை நகரில் ஒரு கட்டடத்தில் வெல்டிங் வேலை செய்யும்போது 60 அடி உயரத்துல இருந்து தவறி விழுந்துவிட்டார். எந்தப் பாதுகாப்பு உபகரணமும் வேலை செய்யுற இடத்தில கொடுக்கல. இதனால பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.

சென்னையில இருக்குற ஒரு தனியார் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து சிகிச்சை அளித்தோம். மருத்துவச் செலவுக்காக வீட்டை அடமானம் வச்சு 4.5 லட்சம் செலவு செய்தோம். ஓரளவு குணமாகி வரும் நேரத்துல விலா எலும்பு உடைஞ்ச பகுதியில சீழ் பிடித்துவிட்டது. டி.பி நோயும் சேர்ந்து வந்த காரணத்தால அவரைக் காப்பாத்த முடியல. கடந்த மே மாசம் என் கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்தபோது அவரின் முதலாளி வெறும் 5,000 ரூபாயை நடுவீட்ல வச்சிட்டுப் போயிட்டார்.

`கடன் இரண்டரை லட்சம்; கந்துவட்டி ரூ.7 லட்சம்!’ -நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த 2 பெண்கள்

கணவரின் மருத்துவச் செலவுக்கு வாங்கிய கடனுக்கு வட்டிகூட எங்களால கட்ட முடியல. ஹாஸ்பிட்டல் செலவு கடனால வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துடுவோம்னு பயமா இருக்கு. இந்த நான்கு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைச்சா கவலையா இருக்கு. நான்கு குழந்தைகளும் தென்மேல்பாக்கம் அரசுப் பள்ளியில் படிக்கிறாங்க. மாமியாருடன் சேர்ந்து வீட்டிலேயே ஆப்பக்கடை வச்சுதான் இந்தக் குழந்தைகளை காப்பாத்திட்டு வர்றேன்.

பெண் குழந்தைகளுடன் மனு
பெண் குழந்தைகளுடன் மனு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடியாடி விளையாடிக்கிட்டிருந்த இரண்டாவது பெண் திவ்யதர்ஷினி மீது வேகமா வந்த ஒரு பைக் மோதியது. இதில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவளோட கால் ஊனமாகி நடக்கக் கூட முடியல. அரசாங்கம் ஏதாவது உதவி செய்தால் மட்டுமே எங்களால உயிர்வாழ முடியும்” என்றார் கண்ணீரோடு.

அடுத்த கட்டுரைக்கு